எஸ்ரா கதையைச் சொல்லும் முகநூல் பகிர்வுகள்: ப்ருத்விராஜ் அதிருப்தி

எஸ்ரா கதையைச் சொல்லும் முகநூல் பகிர்வுகள்: ப்ருத்விராஜ் அதிருப்தி
Updated on
1 min read

’எஸ்ரா’ படத்தின் கதையை சொல்லும் பல பகிர்வுகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருவதால் ப்ருத்விராஜ் அதிருப்தி அடைந்துள்ளார்.

ப்ருத்விராஜ், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாள திரைப்படம் 'எஸ்ரா'. இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் ஜே.கே. பிப்ரவரி 10-ம் தேதி வெளியான படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியகாவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பலரும் திரைக்கதை அமைப்பு குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ப்ருத்விராஜ் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "ஒரு பெரிய நன்றி மற்றும் அன்பான வேண்டுகோள். 'எஸ்ரா' படத்தின் கதையைச் சொல்லும் பல பகிர்வுகள் பேஸ்புக், வாட்ஸ் அப் என பரவி வருகிறது.

இதன் பின்னால் இருக்கும் நோக்கம் எனக்கு புரியவில்லை. படத்தை பார்க்க விரும்பும் மக்களுக்கு அந்த அனுபவத்தை கெடுக்கிறது இந்த செயல். மலையாள சினிமாவில் புதிதாக ஒன்றை முயற்சித்ததில் நடிகனாக நான் பெருமை கொள்கிறேன்.

'எஸ்ரா' படத்துக்கு மிகப் பெரிய வசூலைத் தந்து, பாராட்டி, ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார் ப்ருத்விராஜ். இப்படத்தை ஏ.வி.ஏ மற்றும் ஈ4 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in