ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது சாஹோ

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது சாஹோ

Published on

பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹோ', ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'சாஹோ'. ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் பிரபாஸுடன் நடித்துள்ளனர்.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியீடு என்று முன்பே அறிவிக்கப்பட்டாலும், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் பட வெளியீடு தாமதமாகும் என தகவல் வெளியானது.

ஆனால், 'சாஹோ' வெளியீட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று புதிய போஸ்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. இப்படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஹைதராபாத், மும்பை, அபுதாபி, துபாய், ரொமேனியா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் பட்ஜெட்டில் ஒரு முக்கியப் பங்கு சண்டைக் காட்சிகளுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. 'ரஷ் ஹவர்', 'ஆர்மகெட்டன்', 'மிஷன் இம்பாசிபிள்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் சண்டைக் காட்சிகளை இயக்கிய கென்னி பேட்ஸ், இப்படத்தின் சண்டைக் காட்சிகளையும் இயக்கியுள்ளார்.

'சாஹோ' பணிகளை முடித்துவிட்டு, கே.கே.ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதுவும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in