Published : 27 Feb 2024 08:22 PM
Last Updated : 27 Feb 2024 08:22 PM

மலையாள நடிகர் சுராஜின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு

டிரைவிங் லைசன்ஸ் படத்தில் நடிகர் சுராஜ்

கொச்சி: மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய கேரள மோட்டார் வாகனத் துறை (Kerala Motor Vehicles department (MVD) அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்..

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியின் தம்மனம் - காரணக்கோடம் சாலையில் சென்றுகொண்டிருந்த சுராஜ் வெஞ்சரமூடுவின் கார், அந்த வழியாக வந்த சரத் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தானது. இதில் சரத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 279 (அதிவேகமாக வண்டி ஓட்டுதல்), 338 (மற்றவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கேரள காவல் துறை சார்பில் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு 3 நோட்டீஸ்கள் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸுக்கு சுராஜ் பதிலளிக்காததால் பிரிவு 338-ன்படி சுராஜின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

டிரைவிங் லைசன்ஸ்: மலையாளத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சமூடு நடிப்பில் வெளியான ‘Driving License’ படத்தில் பிரித்விராஜ் கார்களில் ஸ்டன்ட் செய்யும் அளவுக்கு ஒரு மிகப் பெரிய ஆக்‌ஷன் ஹீரோ. ஆனால், அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இருக்காது. அவர் லைசன்ஸ் வாங்க போராடுவார். போக்குவரத்து துறையின் கண்டிப்பு மிக்க அதிகாரியாக இருப்பார் சுராஜ் வெஞ்சரமூடு. ஆனால் நிஜத்தில் சுராஜ், போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x