Published : 18 Jan 2024 04:31 PM
Last Updated : 18 Jan 2024 04:31 PM

“சிறந்த திரையரங்க அனுபவம் கிட்டும்!” - மோகன்லால் @ ‘மலைக்கோட்டை வாலிபன்’

கொச்சி: “இப்படியான கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இதைவிட வேற என்ன வேண்டும். இப்படத்தின் கதை எனக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டதல்ல” என ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் குறித்து நடிகர் மோகன்லால் பேசியுள்ளார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கேரளா மாநிலம் கொச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மோகன்லால், “மலைக்கோட்டை வாலிபன் பிரமாண்டமான படமாக இருக்கும். படத்தில் உள்ள பல விஷயங்களை உங்களால் கனெக்ட் செய்து கொள்ள முடியும். காதல், பொறாமை என பல்வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கிய படமாக இது இருக்கும். மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், கதைசொல்லல் முறை மற்றும் உடைகள் ஆகிய அனைத்தும் வித்தியாசமானவை.

இப்படியான கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இதைவிட வேற என்ன வேண்டும். இப்படத்தின் கதை எனக்காகவே பிரத்யேகமாக எழுதப்பட்டதல்ல. நானும், இயக்குநர் லிஜோவும் பல கதைகள் குறித்து விவாதித்தோம். அதில் நான் இந்தக் கதையை தேர்வு செய்தேன். எல்லோரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள். அதுதான் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது. சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வருட உழைப்பை செலுத்தியுள்ளோம்” என்றார்.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி பேசுகையில், “இந்தப் படத்தைப் பொறுத்தவரை அதை எந்த ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள்ளும் அடைக்க முடியாது. பார்வையாளர்கள் என்ன உணர்கிறார்களோ அதுதான் படம். கதை இந்தக் காலக்கட்டத்தில்தான் நடக்கிறது என்றில்லாமல், எல்லா காலத்துக்கும் பொருந்தும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

மலைக்கோட்டை வாலிபன்: மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் இப்போது மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

மோகன்லால், மணிகண்டன் ஆர்.ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x