

எல்லைப் பகுதியில் நிகழும் கார் குண்டுவெடிப்பை விசாரிக்கும் நேர்மையான மெக்சிகோ அதிகாரி, அதைத் திசைத்திருப்ப முயலும் அமெரிக்க ஊழல் போலீஸ் கேப்டனின் சதியை முறியடிப்பதே ‘டச் ஆஃப் ஈவில்’ (TOUCH OF EVIL –1958) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
அமெரிக்கா–மெக்சிகோ எல்லைப்புற இரவில், ஒரு காரின் டிக்கிக்குள் டைம் பாம் மறைத்து வைக்கப்படுகிறது. தொழிலதிபர் ரூடி லினேக்கரும் அவரது காதலியும் பயணிக்கும் அந்த கார் எல்லைச் சாவடியை நோக்கிச் செல்கிறது.
அதே நேரத்தில், மெக்சிகோ போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மிகுவேல் வர்காஸ், தன் அமெரிக்க மனைவி சூசனுடன் ஹனிமூனுக்காக அங்கு வருகிறார். எல்லைச் சாவடியில் இருவரும் முத்தமிடும் அந்த விநாடியில், கார், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது.
சூசனை ஓட்டலுக்கு அனுப்பிவிட்டு தன் கண்முன்னால் நடந்த கொலையை வர்காஸ் விசாரிக்க, பருமனான உடல், கைத்தடி, திமிரான பேச்சுடன் அதிகாரத்தின் பயங்கர மான உருவமாக அமெரிக்க போலீஸ் கேப்டன் ஹேங்க் க்வின்லான் வந்திறங்குகிறார்.
வந்ததுமே, எந்த ஆதாரமும் இன்றி “இது டைனமைட் கொலை” என்று அவர் உறுதியாகச் சொல்வது வர்காஸுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு மெக்சிகன் அதிகாரி இந்த விசாரணையில் ஈடுபடுவது க்வின்லானுக்கும் பிடிக்கவில்லை.
சூசனை ஒரு கும்பல் பின்தொடர்ந்து, ‘அங்கிள் ஜோ’ என்றழைக்கப்படும் போதைக் கும்பல் தலைவன் கிராண்டி முன்னால் நிறுத்துகிறார்கள். கிராண்டியின் சகோதரன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வர்காஸால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
அந்த வழக்கிலிருந்து அவனை விடுவிக்க வர்காஸிடம் வற்புறுத்தச் சொல்லி, சூசனை மிரட்டுகிறான் கிராண்டி.அதற்குப் பணிய மறுத்து, அங்கிருந்து தப்பிக்கும் அவள் தன் கணவனிடம் தெரிவிக்கிறாள்.
சூசனை தனிமையான ஹோட்டலில் தங்க வைப்பதற்காக வர்காஸ் அழைத்துச் செல்ல, பாதிவழியிலேயே அவரை க்வின்லான் அழைப்பதாக, ஒரு போலீஸ்படை வந்து அழைத்துச் செல்கிறது. இறந்த தொழிலதிபரின் மகளுடன் காதலில் இருக்கும் மெக்சிகன் இளைஞன் சான்செஸ் வீட்டை, க்வின்லான் சோதனையிடுகிறார்.
அவனது குளியலறையில் ஒரு ஷூ பெட்டிக்குள் டைனமைட் குச்சிகள் கண்டுபிடிக்கப் படுகின்றன. சில நிமிடங்களுக்கு முன்பு அந்த ஷூ பெட்டி காலியாக இருந்ததை நேரில் பார்த்திருந்த வர்காஸ், க்வின்லானுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
க்வின்லானின் பழைய வழக்குகளை ஆராயும் வர்காஸ், பல ஆண்டுகளாக அவர் போலிச் சான்றுகள் மூலம் நிரபராதிகளைச் சிக்கவைத்திருப்பதை கண்டுபிடிக்கிறார். தன் ஊழல் வெளிவரும் பயத்தில் க்வின்லான், வர்காஸைப் பழிவாங்க, கிராண்டியின் மூலமாக சூசனைக் கடத்துகிறார்.
கடத்தி வந்ததும் கிராண்டியைக் கொன்று, சூசனுக்குப் போதைப்பொருள் கொடுத்து கொலைப் பழியை அவள்மீது சுமத்த முயல்கிறார். ஆனால், அவசரத்தில் தன் கைத்தடியை அங்கேயே விட்டுச் செல்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் அவரது விசுவாசமான உதவியாளர் மென்ஸீஸ், உண்மையை உணர்ந்து வர்காஸின் பக்கம் நிற்கிறான்.
தன் மனைவி மீதுள்ள கொலைப் பழியை க்வின்லானின் வாக்கு மூலமே தீர்க்கும் என்பதை உணர்ந்த வர்காஸ், மென்ஸீஸுடன் இணைந்து மறைமுக ஒலிப்பதிவின் மூலம் க்வின்லானின் குற்றத்தை நிரூபிக்க முயல்கிறார். மென்ஸீஸ், க்வின்லானுடன் பேசிக்கொண்டே பாலத்தில் நடக்க, சற்றுத் தொலைவில் மறைந்தபடி வர்காஸ் அதைப் பதிவு செய்கிறார்.
சதியை உணர்ந்துகொண்ட க்வின்லான், மென்ஸீஸைச் சுட, இறக்கும் தருவாயில் மென்ஸீஸ் திரும்ப க்வின்லானைச் சுடுகிறான். க்வின்லான் ஏரிக்குள் மூழ்குகிறான் — அவனது அதிகாரம், ஊழல், நீதியின் இருண்ட முகமும் அவனோடு சேர்ந்து மூழ்குகிறது.
க்வின்லான் போலிச் சான்றுகள் மூலம் சிக்கவைத்த சான்செஸ்தான் உண்மையான கொலையாளி என்ற உண்மை இறுதியில் தெரியவருகிறது. தன் உள்ளுணர்வு சரியாக இருந்தாலும், நீதியை நிலைநாட்ட அவன் கையாண்ட போலித்தனமே அவனது வீழ்ச்சிக்குக் காரணமாகிறது என்ற திரைக்கதை நுட்பத்துடன் படம் முடிவடைகிறது.
உலக சினிமா வரலாற்றின் சிறந்த ‘சிட்டிசன் கேன்’ படத்தை இயக்கிய மாபெரும் மேதை ஆர்சன் வெல்ஸ், 1950-களின் அமெரிக்க-மெக்சிகோ எல்லைப்புற ஊழல் பின்னணியில் —
அதிகாரத் திமிரும் இனவெறியும் ஒரு காவல் அதிகாரியை எவ்வாறு அழிவுக்குத் தள்ளுகிறது என்பதை, நல்லவன்-கெட்டவன் என்ற நேர்கோட்டுப் பிரிப்பில்லாமல் உளவியல் காவியமாகக் காட்சிப்படுத்திய திரைப்படம் இது.
யுனிவர்சல் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இதில், வில்லன் நடிகராக உள்ளே நுழைந்த ஆர்சன் வெல்ஸ், சார்ல்டன் ஹெஸ்டன் மூலம் இயக்கும் வாய்ப்பைப் பெற்று, ஒயிட் மாஸ்டர்சனின் மூலக்கதையை புத்திசாலித்தனமான திரைக்கதையாக்கி, நடிப்பு, இயக்கம் அனைத்திலும் மேம்பட்ட படைப்பை வழங்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் மெட்டியின் வித்தியாசமான கேமரா கோணங்கள் படம் முழுவதும் நம்மை பதற்றத்தில் வைக்கின்றன. தொடக்கத்தில் வரும் 3.5 நிமிட சிங்கிள் ஷாட், சிறந்த கேமரா இயக்கங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
கார், டிராபிக், எல்லைச் சாவடி, மனிதர்கள் அனைத்தையும் ஒரே காட்சியில் இணைத்து, “எப்போது வெடிக்கும்?” என்ற பதற்றத்தை பார்வையாளரின் நரம்புக்குள் ஊற்றியிருப்பது அசாத்திய திரைமொழி.
எடிட்டர்கள் விர்ஜில் வோகல் மற்றும் ஆரோன் ஸ்டீல் ஆகியோரின் விறுவிறுப்பான ‘இணை எடிட்டிங்’ உத்தி, ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நடக்கும் பதற்றத்தைப் பார்வையாளருக்குக் கடத்துகிறது. யுனிவர்சல் நிறுவனம் ஆர்சன் வெல்ஸுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர்களே தீர்மானித்த இறுதி வடிவத்தைப் பார்த்த ஆர்சன் வெல்ஸ், 58 பக்க எடிட்டிங் குறிப்பு எழுதிக் கொடுத்தார்.
அக்குறிப்புகளின்படியே பின்னாட்களில் மறுதொகுப்பு (எடிட்டர்: வால்டர் முர்ச்) செய்தனர். சம்பவங்களை எடிட்டிங் வெட்டுகள் இன்றி ஒலி அமைப்பின் மூலம் மட்டுமே இணைக்க வேண்டும் என்ற அவரது ஆடியோ-விஷுவல் சிந்தனை, உலகத் திரை மொழியின் பாடப்புத்தகம்.
ஹென்றி மான்சினி பாரம்பரிய ஆர்கெஸ்ட்ரா இசையைத் தவிர்த்து - எல்லையோர ரேடியோ இசைகள், லத்தீன் ஜாஸ், தெரு ஒலிகள், தூர வாகனச் சத்தங்கள் என நகரத்தின் உயிரோட்டத்தையே இசையாக மாற்றியுள்ளார்.
க்வின்லான் (ஆர்சன் வெல்ஸ்): உடைந்த யானையைப் போன்ற கனமான உடல்மொழி, தடுமாறும் நடை, கைத்தடி, மதுவில் கரைந்த குரல் என அதிகாரத்தின் சீரழிவையும் அக இருளையும் மிரட்டலாக வெளிப்படுத்துகிறார்.
வர்காஸ் (சார்ல்டன் ஹெஸ்டன்): நேராக நிமிர்ந்த உடல், கட்டுப்படுத்தப்பட்ட பார்வை, அமைதியான குரல், சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் நீதிக்கான உறுதியையும் வெளிப் படுத்துகிறார். வர்காஸின் மனைவி சூசனாக வரும் ஜானெட் லீ, பயமும் தைரியமும் கலந்த பாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ படத்தின் நாயகியும் இவரே. “சட்டத்தைக் காக்கும் அமைப்பே குற்றத்தின் கருவியாக மாறலாம்” என்ற அரசியல் உண்மையை இப்படம் வெளிப்படையாக முன்வைக்கிறது.
அதனால்தான் இப்படம் ஒரு க்ரைம் த்ரில்லராக மட்டுமல்லாமல், க்ளாசிக் ஃபிலிம் நாய்ர் இயக்கத்தின் பெரும் காவியமாக இன்றளவும் திகழ்கிறது. மனிதனின் அக இருளை எல்லை நகர இரவாக மாற்றிய ‘டச் ஆஃப் ஈவிலை’ — எவ்வித பயமுமின்றி நள்ளிரவிலும் கண்டுகளிக்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com