“என்ன ஒரு அற்புதமான நடிகை” - ‘மகாராஜா’ சாச்சனாவுக்கு ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் புகழாரம்

“என்ன ஒரு அற்புதமான நடிகை” - ‘மகாராஜா’ சாச்சனாவுக்கு ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் புகழாரம்
Updated on: 
1 min read

சென்னை: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தில், விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா நமிதாஸின் நடிப்பை ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

2024-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்ற சாச்சனா, ஆஸ்கர் விருது வென்ற டாம் ஹாங்க்ஸின் இந்த எதிர்பாராத பாராட்டால் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாச்சனா, ‘இதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என்னைப் பற்றியும் எனது திரைப் பயணத்தைப் பற்றியும் டாம் ஹாங்க்ஸ் பேசியதைக் கேட்பது ஒரு கனவு போல் இருக்கிறது. சில தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, இந்தத் தருணத்திற்குத் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற லாக்மா கலை மற்றும் திரைப்பட விழாவில் பங்கேற்ற டாம் ஹாங்க்ஸ் ’மகாராஜா’ படம் குறித்து பகிர்ந்திருந்தார். அதில் சாச்சனாவின் நடிப்பைக் குறிப்பிட்டு "அந்தப் பெண்ணின் நடிப்பிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை; என்ன ஒரு அற்புதமான நடிகை. அந்தக் கதாபாத்திரத்தின் இடத்தில் நான் இருந்திருந்தால் என்னால் அப்படிச் செய்திருக்க முடியாது, அந்த நபரைக் கொன்றிருப்பேன்" என டாம் ஹாங்க்ஸ் வியந்து பாராட்டினார்.

‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் வெளியாகி ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததோடு, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் உலகளாவிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் உரிமையை முன்னணி ஹாலிவுட் நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

‘எம்மி’ விருது விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தனது படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்த ஹாலிவுட் ரீமேக்கில் தனக்கு ஏதேனும் ஒரு கதாபாத்திரம் வாங்கிக் கொடுத்தால், தயாரிப்பாளருக்கு ஒரு படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்துத் தருவதாகக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

“என்ன ஒரு அற்புதமான நடிகை” - ‘மகாராஜா’ சாச்சனாவுக்கு ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் புகழாரம்
ஹாரர் கதையில் ஸ்ருதிஹாசன்

X