‘த நைட் ஆஃப் த ஹன்டர்’ - 1955: மனித மனத்தின் நன்மை தீமை மோதல் | ஹாலிவுட் மேட்னி 26

‘த நைட் ஆஃப் த ஹன்டர்’ - 1955: மனித மனத்தின் நன்மை தீமை மோதல் | ஹாலிவுட் மேட்னி 26
Updated on
3 min read

“தனது தந்​தை​யிட​மிருந்து திருட்​டுப் பணத்​தின் ரகசி​யத்தை அறிந்த இரு குழந்​தைகள், அந்​தப் பணத்தை அபகரிக்​கத் துடிக்​கும் கொடூர கொலை​காரனிட​மிருந்து தப்​பிக்​கப் போராடும் கதையே – த நைட் ஆஃப் த ஹன்​டர். (THE NIGHT OF THE HUNTER -1955).

மதபோதகர் என்ற போர்​வை​யில் உலவும் கொடூர​மான தொடர் கொலை​காரன் ஹாரி பவெல். அமெரிக்​கா​வின் வெஸ்ட் வெர்​ஜினியா மாநிலத்​தில் ஓடும், ஓஹையோ நதிக்​கரையோரம் திருடப்​பட்ட காரில் பயணிக்​கும்​போது கைது செய்​யப்​படு​கிறான்.

மவுண்ட்​ஸ்​வில் சிறை​யில் 30 நாட்​கள் தண்​டனை அனுபவிக்​கும் அவனுக்​கு, அங்கே பென் ஹார்ப்​பர் அறி​முக​மாகிறான். வங்​கிக் கொள்​ளை​யின்​போது இரு​வரைக் கொன்ற குற்​றத்​துக்​காக மரண தண்​டனையை எதிர்​நோக்கி இருக்​கும் ஹார்ப்​பர், திருடிய 10 ஆ​யிரம் டாலர் பணத்தை தன் குழந்​தைகளான ஜான் மற்​றும் பேர்ல் முன்​னிலை​யில் ரகசி​ய​மாக மறைத்து வைத்​திருக்​கிறான்.

அந்த ரகசி​யத்தை தன் மனை​வி​யிடம் கூடச் சொல்​லக்​கூ​டாது என்று குழந்​தைகளிடம் சத்​தி​யம் வாங்​கி​யிருக்​கிறான். சிறை​யில் பவெல் எவ்​வளவோ தந்​திரம் செய்​தும், தூக்​கில் தொங்​கும்​வரை அந்த ரகசி​யத்தை ஹார்ப்​பர் வெளிப்​படுத்​த​வில்​லை.

சிறையி​லிருந்து வெளியே வந்த பவெல், ஹார்ப்​பர் வாழ்ந்த சிறிய ஊருக்​குச் சென்று தன்னை புனித மனித​னாகக் காட்​டிக்​கொண்டு ஊர் மக்​களின் நம்​பிக்​கை​யை​யும் அன்​பை​யும் எளி​தில் பெறுகிறான்.

ஹார்ப்​பரின் பணத்​தைக் கவர்​வதற்​காக அவனது மனைவி வில்​லா​வைக் கவர்ந்து திரு​மணம் செய்​து​கொள்​கிறான். வில்​லா​வைத் திரு​மணம் செய்த பின்​னரும் பவெல் அவளு​டன் தாம்​பத்​திய உறவைத் தவிர்த்​து, ஆன்​மீகப் போதனை​களால் அவளை மன அழுத்​தத்​துக்கு உள்​ளாக்​கு​கிறான்.

பண ரகசி​யம் அவளுக்​குத் தெரிய​வில்​லை, குழந்​தைகளுக்​குத் தெரி​யும் என்று சந்​தேகிக்​கிறான்; ஒரு​கட்​டத்​தில் ஜான் அந்த உண்​மை​யைத் தவறு​தலாக வெளிப்​படுத்தி விடு​கிறான். பேர்லை மிரட்​டிப் பணத்​தின் ரகசி​யத்தை அறிய முயலும் பவெலின் கொடூர முகத்தை வில்லா உணர்ந்​ததும், அவன் அவளைக் கொன்று உடலைக் காருடன் நதி​யில் மூழ்​கடிக்​கிறான்.

குடும்ப நண்​ப​ரான ‘அங்​கிள் பெர்​டி’, ஆற்​றில் மீன் பிடிக்​கச் சென்​ற​போது வில்​லா​வின் உடல் கார் இருக்​கை​யில் அமர்ந்த நிலை​யில் இருப்​ப​தைக் காண்​கிறார். ஆனால், போலீ​ஸிடம் சொன்​னால் தன்​னையே கொலைக்​குற்​றத்​தில் சிக்க வைத்​து​ விடு​வார்​கள் என்ற அச்​சத்​தில், எவரிட​மும் சொல்​லாமல் மவுன​மாகிறார்.

இறு​தி​யில் பணம் பேர்​லின் துணிப் பொம்​மைக்​குள் மறைக்​கப்​பட்​டிருப்​பதை அறிகிறான் பவெல். அவனிட​மிருந்து தப்​பிக்க ஜான் மற்​றும் பேர்ல் ‘அங்​கிள் பெர்​டி’ வீட்​டுக்​குச் செல்​கிறார்​கள். அவர் குடி​போதை​யில் மயங்​கிக் கிடக்க, அங்​குள்ள தங்​கள் தந்​தை​யின் படகின் மூலம் நதி​யில் தப்​பிச் செல்​கிறார்​கள்.

பவெல் அவர்​களை ஒரு சாத்​தானைப் போலத் தேடி அலைகிறான். அவன் பிடியி​லிருந்து சிறு​வர்​கள் எப்​படித் தப்​பி​னார்​கள்? எங்​குத் தஞ்​சமடைந்​தார்​கள்? என்​பதை கருணை உள்​ளத்​தோடு வெளிப்​படுத்​து​வதே இத்​திரைப்​படம். 1955-ம் ஆண்டு வெளிவந்த இத்​திரைப்​படத்​தைப் புகழ்​பெற்ற நடிகர் சார்​லஸ் லாட்​டன் இயக்​கி​னார்; அவர் இயக்​கிய ஒரே படம் இது​தான்.

வெளிப்​படை​யாக இது ஒரு குற்​றத் திகில் கதை போலத் தோன்​றி​னாலும், ஆழத்​தில் மனித மனத்​தின் நன்​மை–தீமை மோதலை வெளிப்​படுத்​தும் காட்​சிக் கவிதை​யாகத் திகழ்​கிறது. திரைக்​கதையை எழு​திய ஜேம்ஸ் ஏஜி, டேவிஸ் கிரப்​பின் நாவலைத் தழு​விக் கூர்​மை​யான வசனங்​களால் காட்​சிகளுக்கு உயிர் கொடுத்​துள்​ளார்.

குறிப்​பாக ஹாரி பவெல் தன் கைகளில் உள்ள “லவ்” மற்​றும் “ஹேட்” பற்​றிப் பேசும் வசனம் உலகப் புகழ் பெற்​றது. ஒளிப்​ப​தி​வாளர் ஸ்டான்லி கோர்​டெஸ், நிழல்​களின் பயன்​பாட்​டால் ஒரு கனவு போன்ற பயங்கர உலகத்தை உரு​வாக்​கி​னார். தண்​ணீருக்​கடி​யில் மூழ்​கிய தாயின் தலை​முடி, பாசி போல அலை பாயும் காட்சி அவரது கலைந​யத்​தின் உச்​சம்.

ராபர்ட் கோல்​டன் படத்​தொகுப்​பில் ‘நி​தான​மான பதற்​றம்’ (Slow-burn tension) உத்​தி​யைப் பயன்​படுத்​தி​யிருக்​கிறார். வில்​லன் ஹாரி பவெல் குதிரை​யில் மெது​வாகத் துரத்தி வரும் காட்​சிகளை​யும், குழந்​தைகள் உயிருக்​குப் பயந்து ஓடும் காட்​சிகளை​யும் அவர் கோர்த்த விதம், ஒரு வேட்​டைக்​காரன் தன் இரையைத் துரத்​து​வது போன்ற உணர்​வைத் தரும்.

இசையமைப்​பாளர் வால்​டர் ஷூமேன், இது ஒரு குற்​றத் திகில் படம் என்​றாலும் அதற்கு நேர்​மாறாக மென்​மை​யான இசையை வழங்​கி​யிருப்​பது வியக்​கத்​தக்க உத்​தி. ஜான் ஹார்ப்​ப​ராக பில்லி சாப்​பின் மற்​றும் பேர்​லாக சாலி ஜேன் புரூஸ் ஆகிய குழந்​தைகள் கதை​யின் ஆன்​மா​வாக விளங்​கு​கின்​றனர்.

ஹாரி பவெலாக ராபர்ட் மிட்​செம், சினிமா வரலாற்​றின் சிறந்த வில்​லன் நடிப்​பு​களில் ஒன்றை வழங்​கி​யுள்​ளார். சாது​வான பாதிரி​யா​ராக​வும், அதே நேரம் பார்க்​கவே அச்​சத்தை ஏற்​படுத்​தும் சைக்​கோ​வாக​வும் அவர் வாழ்ந்​திருப்​பார். மேஜை நிறைய உணவு​களை வைத்​துக்​கொண்​டு, பசியி​லிருக்​கும் குழந்​தைக்கு உணவு கொடுக்​காமல் அந்​தப் பணத்​தின் ரகசி​யத்​தைக் கேட்டு மிரட்​டும் காட்​சி, கொடூரத்​தின் உச்​சம்.

ஷெல்லி வின்​டர்​ஸ், வில்​லா​வாக நயவஞ்​சக​மாக ஏமாற்​றப்​பட்ட ஒரு விதவை​யின் ஆழமான துயரத்தை மிக உணர்ச்​சிகர​மாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார். மவுனப் படக் காலத்​தின் ஈடு இணை​யற்ற சூப்​பர் ஸ்டார் லில்​லியன் கிஷ், இப்​படத்​தில் குழந்​தைகளைக் காக்​கும் பேரன்பு கொண்ட மூதாட்​டி​யாக வாழ்ந்​துள்​ளார்.

மதத்​தின் போர்​வை​யில் ஒளிந்​திருக்​கும் தீமையை வெளிப்​படுத்​தி, மனித நேய​மும் கருணை​யும் இறு​தி​யில் வெற்றி பெறும் என்ற நம்​பிக்​கை​யைச் சொல்​லும் இந்​தத் திரைப்​படம் இன்று உலக சினி​மா​வின், காலத்​தைக் கடந்த கிளாசிக்​காக நிலைத்து நிற்​கிறது.

ஒரு கொடூர​மான குற்​றக் கதையைக் கவிதை வடி​வில் திரை​யில் செதுக்​கி​யிருக்​கும் இந்​தத் திரைப்​படைப்​பு, உங்​கள்​ வாழ்​வின்​ ஓர்​ இரவுப்​ பொழுதைத் தா​ராள​மாக ‘வேட்​டை​யாட’ அனு​ம​திக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

‘த நைட் ஆஃப் த ஹன்டர்’ - 1955: மனித மனத்தின் நன்மை தீமை மோதல் | ஹாலிவுட் மேட்னி 26
‘தி பிக் ஸ்லீப்’ - 1946: நோபல் பரிசு பெற்றவர் எழுதிய திரைக்கதை! | ஹாலிவுட் மேட்னி 25

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in