த மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் (1932) - காட்டுக்குள் நடக்கும் மனித வேட்டை | ஹாலிவுட் மேட்னி 39

த மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் (1932) - காட்டுக்குள் நடக்கும் மனித வேட்டை  | ஹாலிவுட் மேட்னி 39
Updated on
3 min read

ஒரு வேட்​டைக்​காரன், மனிதர்​களை வேட்​டை​யாடும் கொடூர வேட்​டைக்​கார​னால் வேட்​டை​யாடப்​படு​வதே ‘த மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ (THE MOST DANGEROUS GAME - 1932) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

பசிபிக் பெருங்​கடலில் சொகுசு கப்​பல் பயணிக்​கும்​போது சிக்​னல் விளக்​கு​கள் தவறாகக் காட்​டு​வதை உணர்​கிறார் கேப்​டன். புகழ்​பெற்ற, பயண அனுபவம் பெற்ற வேட்​டைக்​கார​ரான பாப் ரெய்ன்​ஸ்ஃ​போர்​டிடம் ஆலோ​சித்​தும், சிக்​னல் காட்​டும் பாதை​யில் செல்ல உத்​தர​விடு​கிறார் கப்​பல் உரிமை​யாளர்.

சற்று நேரத்​தில் கப்​பல் விபத்​துக்​குள்​ளாகிறது. அதில் பாப் மட்​டுமே பிழைக்​கிறான். நீந்​தி​யபடி அரு​கிலுள்ள பிராங்கா தீவை அடைகிறான். அங்கு போர்த்​துக்​கீசிய கோட்​டையைப் புனரமைத்து ஆடம்பர இல்​ல​மாக மாற்றி வாழும் ரஷ்ய பிரபு, கவுன்ட் ஜாரோஃப்பை சந்​திக்​கிறான்.

விபத்​தில் தான் மட்​டுமே பிழைத்​த​தாக பாப் கூற, அதற்கு முன் நடந்த விபத்​துகளால் அங்கு ஏற்​கெனவே அடைக்​கல​மாகி இருக்​கும் ஈவ் ட்ரோப்​ரிட்ஜ்மற்​றும் அவளது குடி​காரத் தமையன் மார்ட்​டினை, ஜாரோஃப் அறி​முகப்​படுத்​துகிறான்.

தனது வேட்டை பெரு​மை​களைப் பேசும் ஜாரோஃப், ஆப்​பிரிக்க ‘கேப் எரு​மை’ முட்​டிய​தால் ஏற்​பட்ட நெற்றி வடு​வைக் காட்​டு​கிறான். விலங்கு வேட்​டைகள் சலித்​த​தால் மனிதர்​களை வேட்​டை​யாடும் தனது, புதிய வக்​கிர​மான விளை​யாட்டை மர்​ம​மாகப் பேச, ஆபத்​தறி​யாத மார்ட்​டின் தானும் அதில் கலந்து கொள்​வ​தாகக் கூறுகிறான்.

அன்று இரவு ஜாரோஃப் பியானோ வாசிக்க, அதன் பின்​னணி​யில் ஈவ், தன்​னுடன் வந்த இரு​வர்​கள் ஜாரோஃப்​பின் ரகசிய அறைக்​குச் சென்று காணா​மல் போனதை பாபிடம் பகிர்ந்து கொள்​கிறாள். நள்​ளிர​வில் தன் சகோ​தரன் மார்ட்​டினை​யும் காண​வில்லை என பாபின் அறைக் கதவைத் தட்​டு​கிறாள் ஈவ்.

இரு​வரும் கோட்​டை​யின் அடி​யிலுள்ள டிரோஃபி ரூமுக்​குள் நுழைகிறார்​கள். அங்கு சுவர்​களில் பதப்​படுத்​தப்​பட்ட மனிதத் தலைகள், கண்​ணாடிக் குடு​வை​யில் மிதக்​கும் தலை​யைக் கண்டு அதிர்ச்​சி​யடைகிறார்​கள்.

அதே நேரம் மார்ட்​டினின் சடலத்தை ஜாரோஃப்​பின் ஆட்​கள் தூக்கி வர, ஈவ் கதறுகிறாள். ஜாரோஃப்​பைத் தாக்க முயலும் பாப் கட்​டப்​பட, ஈவ் தனியே இழுத்​துச் செல்​லப்​படு​கிறாள். அப்​போது தனது வேட்​டை​யில்​தான் மார்ட்​டின் இறந்​தான் என்ற கொடூர உண்​மையை உடைக்​கிறான் ஜாரோஃப்.

சிக்​னல் விளக்​கு​களைத் தானே மாற்றி அமைத்​துக் கப்​பல்​களை விபத்​துக்கு உள்​ளாக்​கு​வ​தாக​வும், தப்பி வரும் மனிதர்​களிடம் கத்​தி​யைக் கொடுத்​துத் தீவுக்​குள் தப்​பிக்க அவகாசம் கொடுத்து வேட்​டை​யாடு​வ​தாக​வும் தன் ஆட்​டத்தை விவரிக்​கிறான்.

“நீ​யும் நானும் வேட்​டைக்​காரர்​கள்” என்று அடுத்த ஆட்​டத்​தில் கலந்து கொள்​ளு​மாறு பாபிடம் கூற, “நான் வேட்​டைக்​காரன், கொலை​யாளி அல்​ல!” என பாப் மறுக்​கிறான். “அப்​படி​யா​னால் அடுத்த கப்​பலுக்​குக் காத்​திருக்​கத் தேவை​யில்​லை. இப்​போதே ஆட்​டம் ஆரம்​பம்” என்று கூறி, பாபை​யும் ஈவை​யும் அதி​காலை 4 மணிக்​குக் கத்​தி​யுடன் காட்​டுக்​குள் அனுப்​பு​கிறான். இரு​வரும் தப்​பிக்க வழி தேடிப் போராடு​கிறார்​கள்.

ஜாரோஃப்பை வீழ்த்த, ‘மலேயன் டெட்​பால்’ பொறியை பாப் தந்​திர​மாக அமைக்​கிறான். ஆனால், அதிலிருந்து புத்​தி​சாலித்​தன​மாகத் தப்பிக்கும் ஜாரோஃப், அவர்​களைக் கொல்ல வேட்​டை​நாய்​களை ஏவி விடு​கிறான்.

ஒரு​புறம் அலை மோதும் கடல், மறு​புறம் மூடு​பனி​யும் முதலைகளும் நிறைந்த ஆபத்​தான ‘ஃபாக் ஹாலோ’ சதுப்பு நிலக்​காடு என எங்​கும் தப்ப வழி​யின்றி பாபும் ஈவும் தவிக்​கிறார்​கள். மனிதர்​களை இரை​யாகக் கருதும் கொடூர வேட்​டைக்​காரனின் பிடி​யில் இருந்து அவர்​கள் தப்​பி​னார்களா? என்​பதை பதற்​றம் குறை​யாமல் சொல்​வதே இத்​திரைப்​படத்​தின் சிறப்​பு.

ரிச்​சர்ட் கானலின் புகழ்​பெற்ற சிறுகதையைத் தழு​வி, எர்​னஸ்ட் பி. ஸ்கோட்​சாக் மற்​றும் இர்​விங் பிச்​செல் இயக்​கத்​தில் வெளி​யான அமெரிக்க திகில் திரைப்​படம் இது. ஆர்​.கே.ஓ ஸ்டூடியோஸ் தயாரிப்​பில், ‘கிங் காங்’ (1933) திரைப்​படத்​துக்​காக அமைக்​கப்​பட்ட பிரம்​மாண்​ட​மான தீவு மற்​றும் அடர்ந்த காடு உள்​ளிட்ட படப்​பிடிப்​புத் தளங்​களில்​தான் இத்​திரைப்​பட​மும் படமாக்​கப்​பட்​டது.

பகலில் ‘கிங் காங்’ படப்​பிடிப்​பும், அதே தளத்​தில் இரவில் இந்​தப் படத்​தின் மனித வேட்​டைக் காட்​சிகளும் படமாக்​கப்​பட்டன என்​பது சினிமா வரலாற்​றின் சுவை​யான பக்​கம். இப்​படத்​துக்​குத் திரைக்​கதை எழு​திய ஜேம்ஸ் ஆஷ்மோர் கிரீல்​மேன்​தான், ‘கிங் காங்’ படத்​துக்கு முதன்​மைத் திரைக்​கதை ஆசிரியர்.

ஒளிப்​ப​திவு - ஹென்றி ஜெரார்ட்: படத்​தின் மிகப்​பெரிய பலமே இதன் அசாத்​தி​ய​மான கருப்​பு-வெள்ளை ஒளிப்​ப​திவு​தான். ஸ்டூடியோ செட்​டுக்​குள் எடுக்​கப்​பட்​டாலும், அடர்ந்த காடு, மூடு​பனி சூழ்ந்த சதுப்பு நிலம், கோட்​டை​யின் உட்​புறக் காட்​சிகள் ஆகிய​வற்​றில் ஜெர்​மன் ‘எக்​ஸ்​பிரஷனிச’ பாணியி​லான நிழல்​களை​யும், மரங்​களுக்கு நடுவே புகுந்து வரும் நில​வொளியை​யும் பயன்​படுத்தி திகிலூட்​டும் நரகத்​தைக் கண்​முன்னே நிறுத்​தி​யுள்​ளார்.

கலை இயக்​குநர் - கரோல் கிளார்க்: பழமை​யான போர்த்​துகீசி​யக் கோட்​டையை​யும், பதப்​படுத்​தப்​பட்ட மனிதத் தலைகள் நிறைந்த ஜாரோஃபின் ரகசிய அறையை​யும் தத்​ரூப​மாக வடிவ​மைத்​திருக்​கிறார்.

படத் தொகுப்​பாளர் - ஆர்ச்சி மார்​ஷெக்: வெறும் 63 நிமிடமே ஓடும் இப்​படத்​தில் தேவையற்ற ஒரு காட்சி கூட இல்​லை. காட்​டில் நடக்​கும் துரத்​தல் காட்​சிகளின் வேகத்​தை​யும், அதீத பதற்​றத்​தை​யும் தனது கச்​சித​மான கத்​தரிப்​பின் மூலம் சரி​யாக கடத்​தி​யிருக்​கிறார்.

இசையமைப்​பாளர் - மேக்ஸ் ஸ்டெய்​னர்: ஹாலிவுட்​டின் ‘திரைப்பட இசை​யின் தந்​தை’ என்று அழைக்​கப்​படு​பவர். இசை மூலம் படம் முழு​வதும் பதற்​றத்தை ஏற்​படுத்தி இருக்​கிறார். ஜாரோஃப், பியானோ வாசிக்​கும் இசையையே பின்​னணி இசை​யாகப் பயன்​படுத்​திய உத்தி வியக்க வைத்​தது.

ஜோயல் மெக்​ரியா (பாப் ரெய்ன்​ஸ்ஃ​போர்ட்): கம்​பீர​மான வேட்​டைக்​கார​னாகத் தொடங்​கி, தானே இரை​யாக மாறி உயிர் பிழைக்​கப் போராடும் மனிதனின் தவிப்பை தனது இயல்​பான உடல்​மொழி​யால் சிறப்​பாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

ஃபே வ்ரே (ஈவ் ட்ரோப்​ரிட்​ஜ்): பின்​னாளில் ‘கிங்​காங்’ மூலம் ‘ஸ்க்​ரீம் குயின்’ என்று புகழ்​பெற்​றவர். பயமும் தைரிய​மும் கலந்த பெண்​ணாக சிறப்​பான நடிப்பை வழங்​கி​யுள்​ளார்.

லெஸ்லி பேங்க்ஸ் (கவுண்ட் ஜாரோஃப்): படத்​தின் மிகப்​பெரிய பலம் இவரது நடிப்​பே. நாகரி​க​மான பிரபு​வின் தோற்​றத்​தில், இரக்​கமற்ற மன பிறழ்வு கொண்ட கொலை​கார​னாக, மறக்க முடி​யாத மிரட்​டலை உரு​வாக்​கி​யுள்​ளார்.

இன்​றைய ‘த ஹங்​கர் கேம்​ஸ்’, ‘பிரிட்​டேட்​டர்’, ‘ஸ்​குவிட்கேம்’ போன்ற உயிர்​-​சாவு வேட்டை கதைகளின் முன்​னோடி​யாகக் கருதப்​படும் திரைப்​படம் இது​வே. “மனிதனை​விட ஆபத்​தான விலங்கு எது​வுமில்​லை” என்​ற கருத்​தை 1932-லேயே விறு​விறுப்​பாகச்​ சொன்​ன இந்​த கிளாசிக்​ த்ரில்​லரை தவறாமல்​ ரசிக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

- ramkumaraundipatty@gmail.com

த மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் (1932) - காட்டுக்குள் நடக்கும் மனித வேட்டை  | ஹாலிவுட் மேட்னி 39
12 ஆங்க்ரி மென் (1957): மனசாட்சிகளின் மோதல் | ஹாலிவுட் மேட்னி 38

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in