

சான் டியாகோ: 'தி மாஸ்க்', 'தி ஸ்கார்பியன் கிங்' உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சக் ரஸ்ஸல் காலமானார். அவருக்கு வயது 74.
ஹாலிவுட் திரையுலகில் ஜிம் கேரி, கேமரூன் டயஸ் மற்றும் டுவைன் ஜான்சன் (தி ராக்) போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்பயணத்துக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களை இயக்கியவர் சக் ரஸ்ஸல்.
சான் டியாகோவிலுள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் இருந்த அவரை காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை அவரது வழக்கறிஞரும் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1981-இல் தயாரிப்பாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய சக் ரஸ்ஸல், 1987-இல் 'ஏ நைட்மேர் ஆன் எல்ம் ஸ்டிரீட் 3' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 1994-இல் இவர் இயக்கிய 'தி மாஸ்க்' திரைப்படம் உலக அளவில் $350 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றி பெற்றதுடன், ஜிம் கேரி மற்றும் கேமரூன் டயஸை உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக உயர்த்தியது. மேலும் 2002-இல் இவர் இயக்கிய 'தி ஸ்கார்பியன் கிங்' திரைப்படம் மூலம் டுவைன் ஜான்சன் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆர்னால்டு ஸ்வாஸ்னேகர் நடித்த 'எரேசர்' மற்றும் 2024-இல் வெளியான 'விட்ச்போர்டு' வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள சக் ரஸ்ஸலின் மறைவுக்கு ஜிம் கேரி உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.