

பூட்டப்பட்ட வீட்டுக்குள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட தொழிலதிபரின் மரணத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையை, ஒரு நிபுணர் துப்பறிந்து விடுவிப்பதே ‘த கென்னல் மர்டர் கேஸ்’ (THE KENNEL MURDER CASE 1933) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
லாங் ஐலண்ட் கென்னல் கிளப்பில் பிரம்மாண்டமான நாய் கண்காட்சி நடைபெறுகிறது. துப்பறியும் நிபுணர் ஃபிலோ வான்ஸ் தனது ‘ஸ்காட்டிஷ் டெரியர்’ நாயுடன் போட்டியில் கலந்துகொண்டு தோல்வியடைகிறார். அதே போட்டியில் கலந்துகொள்ளும் கோடீஸ்வரரும், சீனப் பழம்பொருட்கள் சேகரிப்பாளருமான ஆர்ச்சர் கோ, வான்ஸை நையாண்டி செய்கிறார்.
ஆர்ச்சரின் மருமகள் ஹில்டா, தன் காதலனான சர் தாமஸ் மெக்டொனால்டின் நாய்தான் ஆர்ச்சரின் நாயை விடச் சிறந்தது என நிரூபிக்க, ஆர்ச்சரிடமே பந்தயம் கட்டப் பணம் கேட்கிறாள். அன்றிரவு சர் தாமஸின் சாம்பியன் நாய், மர்மமான முறையில் கொல்லப்படுகிறது. ஆத்திரமடையும் தாமஸ், “இதைக் கொன்றவனைக் கொல்வேன்” எனக் கொதிக்கிறான்.
அதே இரவில், தன் அண்ணனைச் சந்திக்க மறுத்துவிட்டு, ‘தீர்க்கப்படாத கொலைகள்’ என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு, சிகாகோ ரயிலைப் பிடிக்கக் கிளம்புகிறார் தம்பி பிரிஸ்பேன் கோ. தன் காதலி டோரிஸ் டெலாஃபீல்டுக்கு இன்னொரு காதலன் இருப்பதை அறிந்து அவளிடம் சண்டையிடுகிறார் ஆர்ச்சர்.
அவளுடன் பழகிய எடுவார்டோ கிராஸியுடனான கலைப்பொருள் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அவர், சமையல்காரர் லியாங்கையும் வேலையை விட்டுத் துரத்துகிறார். நள்ளிரவில் தேவாலய மணி ஒலித்து ஓய்ந்த வேளையில், ஆர்ச்சரின் மாளிகையிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
ஆர்ச்சரின் படுக்கையறை, உள்ளிருந்து பூட்டப்பட்டிருக்கிறது. நாற்காலியில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில், கையில் துப்பாக்கியுடன் ஆர்ச்சர் பிணமாகக் கிடக்கிறார். தகவல் அறிந்து காவல்துறை சார்ஜென்ட் ஹீத், அரசு வழக்கறிஞர் மார்க்கம் வருகின்றனர். வானொலி வழி செய்தி அறிந்து, தனது இத்தாலிப் பயணத்தை ரத்து செய்துவிட்டு விசாரணையில் இறங்குகிறார் ஃபிலோ வான்ஸ்.
ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருப்பதையும், ஒரு காலணியை மட்டுமே கழற்றிய நிலையில் சடலம் இருப்பதையும் கவனிக்கும் வான்ஸ், “ஆர்ச்சர் இத்தனை அவசரமாகத் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை; இது கொலை” என அடித்துக் கூறுகிறார். உடலைப் பரிசோதிக்கும் டாக்டர் டோரமஸ், “ஆர்ச்சர் தலையில் சுடப்படுவதற்கு முன்பே, முதுகில் விழுந்த கத்திக் குத்தால் ஏற்பட்ட உள்ரத்தப்போக்கால் உயிரிழந்துவிட்டார்” என்ற அதிர்ச்சித் தகவல் அளிக்கிறார்.
ஆர்ச்சரைக் கொல்ல பலருக்கும் வலுவான நோக்கமிருக்கிறது: சொத்தை முடக்கி வைத்திருந்த மாமாவை வெறுத்த மருமகள் ஹில்டா; தன் நாய் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த காதலன் சர் தாமஸ்; ஹில்டாவை அடையத் துடித்த செயலாளர் ரேமண்ட் வ்ரீடே; வணிக ஒப்பந்தம் முறிந்ததால் ஆத்திரமடைந்த எடுவார்டோ கிராஸி; பழம்பொருட்களுக்காகப் போராடிய சமையல்காரர் லியாங்; அண்ணனைத் தீர்த்துக்கட்டத் துடித்த தம்பி பிரிஸ்பேன் கோ ஆகியோர் மீது சந்தேகம் வலுக்கிறது.
பிரிஸ்பேனின் கைத்தடி, ஹாலிலும் சூட்கேஸ் ரயில் நிலையத்திலும் விடப்பட்டிருக்கிறது. சிகாகோ செல்லும் ரயிலில் பிரிஸ்பேன் ஏறவில்லை. அவர்தான் கொலையாளியா? என்று தேடும் வேளையில், அவரது வீட்டின் கீழ்த்தளத்து ஹால் அலமாரிக்குள் முதுகில் குத்தப்பட்டுப் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார்! இதற்கிடையே, டெலாஃபீல்டின் டாபர்மேன் நாய் பலத்த காயங்களுடன் ஆர்ச்சரின் நூலகத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது.
ஒரே இரவில் அடுத்தடுத்து விழுந்த இரு சடலங்கள், சிக்கலான தடயங்கள்... ஃபிலோ வான்ஸ் தனது அபாரமான துப்பறியும் மேதமையால் குற்றக் காட்சியை மீண்டும் மீளுருவாக்கம் செய்து, உண்மையான கொலையாளியைக் கையும் களவுமாகப் பிடிப்பதே ‘த கென்னல் மர்டர் கேஸ்’ திரைப்படத்தின் விறுவிறுப்பான கதை!
1933-ல் எஸ். எஸ். வான் டைன் அதே பெயரில் எழுதிய நாவலைத் தழுவி, ராபர்ட் என். லீ மற்றும் பீட்டர் மில்னே எழுதிய திரைக்கதை அமைப்பில் நுணுக்கமான மெனக்கெடல்கள் தெரிகின்றன. பூட்டிய அறைக்குள் நடந்த தற்கொலை என்று காட்டி, பிறகு அது கொலை என ஆராய்ந்து, கொன்றவரைத் தேடிச் செல்ல, அவரும் கொல்லப்பட்டிருக்க, அங்கிருக்கும் அத்தனை பேரையும் சந்தேக வளையத்தில் கொண்டு வந்து எதிர்பாராத கோணத்தில் குற்றவாளியைக் கண்டறிவது என காட்சிக்குக் காட்சி பரபரப்பைத் தொற்ற வைத்தவர், கோல்டன் ஏஜ் காலகட்டத்தின் மாஸ்டர் இயக்குநரான மைக்கேல் கர்டிஸ். பெரும்பகுதி கதை ஒரு வீட்டுக்குள் நடந்தாலும், டிராக்கிங் ஷாட்கள், ஜெர்மன் எக்ஸ்பிரஷனிச நிழல்கள், சுழலும் கேமரா கோணங்கள் என பிரமாதமான சினிமா மொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தயாரிப்பு: வார்னர் பிரதர்ஸ்.
ஒளிப்பதிவு (வில்லியம் ரீஸ்): அதிவேக காட்சி அமைப்புக்கு ஏற்ப, மாளிகையின் நடைபாதைகளில் பாயும் ‘ஃப்ளூயிட் கேமரா மூவ்மென்ட்ஸ்’ மற்றும் ஃபிலிம் நாயர் சாயல் கொண்ட நிழல்- வெளிச்ச ஆட்டம் துப்பறியும் கதைக்குரிய காட்சி நம்பகத்தன்மையை நேர்த்தியாக வழங்குகிறது.
படத்தொகுப்பு (ஹெரால்ட் மெக்லெர்னான்): மிகச் சிக்கலான கதாபாத்திரங்கள், மாறி மாறி வரும் வாக்குமூலங்கள், முரண்பட்ட தடயங்கள் என விரியும் கதையை விறுவிறுப்பாகக் கோர்த்த விதம் கிளாசிக் க்ரைம் சினிமா எடிட்டிங்கிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
வில்லியம் பவல் (ஃபிலோ வான்ஸ்): கலை ரசனையும் கூர்மையான மூளையும் கொண்ட துப்பறிவாளராக இவரது அலட்டலில்லாத உடலசைவும் நையாண்டி கலந்த வசன உச்சரிப்பும் அபாரம். இதுவே பின்னாளில் புகழ்பெற்ற ‘த தின் மேன்’ திரைப்படத் தொடருக்கு வலுவான அடித்தளமாகவும் அமைந்தது.
மேரி ஆஸ்டர் (ஹில்டா லேக்): மர்மத்தையும் பதற்றத்தையும் முகபாவனைகளில் கடத்திய அழகி. பிற்காலத்தில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற இவர், க்ரைம் கிளாசிக் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத முகம்.
ராபர்ட் பாரட் (ஆர்ச்சர் கோ): அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக் ‘கொலையாகும்’ கொடூரக் கோடீஸ்வரன். நாமும் ஒரு குத்துக் குத்தலாம் என்கிற அளவுக்குப் பார்வையாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் முதிர்ச்சியான நடிப்பு.
ரால்ப் மார்கன் (ரேமண்ட் வ்ரீடே): அமைதியான, பவ்யமான தனிச் செயலாளர் பாத்திரத்தில் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உள்ளிருந்து பூட்டப்பட்ட அறைக்குள் ஒரே இரவில் இருவேறு கொலைத் திட்டங்கள் குறுக்கிடும் விபரீதத்தை, இறுதியில் வான்ஸ் விளக்கி அவிழ்க்கும் காட்சி அற்புதம்.
தற்கொலையா கொலையா என்ற விடுகதையும், நூல்-ஊசி கொண்டு அறையின் தாழ்ப்பாளை அவிழ்க்கும் உத்தியும் துப்பறியும் திரைக்கதை நுணுக்கங்களுக்கு மிகச் சிறந்த பாடங்கள். படம் முழுக்கப் பதற்றம் இருந்தாலும் ஆங்காங்கே தூவப்படும் நகைச்சுவை வசனங்கள் புன்முறுவல் பூக்க வைக்கின்றன. ‘லாக்டு-ரூம்’ மர்மங்களின் முன்னோடிப் படமான இதை, கதவைத் திறந்து வைத்துத் தாராளமாக ரசிக்கலாம்!
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)