‘தி இன்விசிபிள் மேன்’ - 1933: சீக்​கு​வல் படக் கலாச்​சா​ரத்​துக்கு முன்​னோடி! | ஹாலிவுட் மேட்னி 30

‘தி இன்விசிபிள் மேன்’ - 1933: சீக்​கு​வல் படக் கலாச்​சா​ரத்​துக்கு  முன்​னோடி! | ஹாலிவுட் மேட்னி 30
Updated on
3 min read

அபூர்​வக் கண்​டு​பிடிப்​பால் அரூப​மாகிப் போன ஏழை விஞ்​ஞானி, அதீத அதி​காரத்​தால் அகிலத்தை ஆள நினைத்​துக் காதலி​யின் முன் தோற்று மடிவதே ‘தி இன்​விசிபிள் மேன்’ (THE INVISIBLE MAN – 1933) படத்​தின் ஒரு​வரிக் கதை. பனிப்​புயல் வீசும் ஓர் இரவில், முகம் முழு​வதும் துணிக்​கட்​டு, கரிய கண்​ணாடி, நீண்ட மேலங்​கி​யுடன் ஒரு மர்ம மனிதன் ‘இப்​பிங்’ கிராமத்​தின் த லயன்ஸ் ஹெட் விடு​திக்கு வரு​கிறான்.

அவனது விசித்​திர​மான தோற்​றம் அங்​கிருப்​பவர்​களிடையே சலசலப்பை உரு​வாக்​கு​கிறது. விடுதி உரிமை​யாளரின் மனைவி ஜென்னி அவனுக்கு அறை ஒதுக்​கிக் கொடுக்​கிறாள்.

அவன் முகக்​கட்​டு​களைக் கழற்​றி​யிருந்த நேரத்​தில் உணவு கொண்டு சென்ற ஜென்​னி, அவனது கோபத்​தை​யும், முகத்தை மறைக்​கும் பதற்​றத்​தை​யும் கண்டு திகிலடைகிறாள். மறு​பக்​கம், புகழ்​பெற்ற விஞ்​ஞானி டாக்​டர் கிரேன்​லி​யின் மகள் புளோ​ரா, காதலன் ஜாக் கிரிஃபின் காணா​மல் போனதை எண்​ணித் தவிக்​கிறாள்.

ஜாக், அபாயகர​மான தனி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்​டிருப்​ப​தாகச் சக ஊழியன் கெம்ப் கூறுகிறான். விடுதி அறை​யில் ரசாயனச் சோதனை​யில் மூழ்​கி​யிருக்​கும் ஜாக், திடீரென அறைக்​குள் வந்த ஜென்​னியை விரட்​டு​கிறான். இதனால் எழுந்த வாக்​கு​வாதத்​தில், விடுதி உரிமை​யாள​ரான ஹாலை மாடிப்​படியி​லிருந்து ஜாக் தள்​ளி​விட போலீஸ் வரவழைக்​கப்​படு​கிறது.

ஆவேசமடை​யும் ஜாக், தனது செயற்கை மூக்​கை​யும் துணிக் கட்​டு​களை​யும் அவிழ்த்து எறிய, உள்ளே தலை இல்​லாததைக் கண்டு மக்​கள் அலறுகின்​றனர். ஜாக், தன் ஆடைகளைக் கழற்றி எறிந்​து​விட்டு முழு​மை​யாக அரூப​மாகிறான்.

போலீ​ஸாரை கேலி செய்​த​படி அங்​கிருந்து தப்​பிக்​கும் அவன், தெரு​விலுள்ள மக்​களைச் சீண்​டு​கிறான்; மிதிவண்​டிகள் தானாக ஓடு​கின்​றன, துடைப்​பங்​கள் காற்​றில் பறக்​கின்​றன, கற்​கள் ஜன்​னல்​களை உடைக்​கின்​றன.

ஊரே பீதி​யில் உறைய, செய்​தித்​தாள்​கள் ‘கண்​ணுக்​குப் புலப்​ப​டாத மனிதனின் கொடூரம்’ என்று தலைப்​புச் செய்​தி​களால் அதிர்​கின்​றன.

ஜாக் பயன்​படுத்​திய ‘மோனோகெ​யின்’ மருந்​து, உடலை மறைப் பதோடு மனநிலை​யை​யும் சிதைக்​கும் என்​பதை டாக்​டர் கிரேன்லி கண்​டறிகிறார்.

இதற்​கிடை​யில், தன் நண்​பன் கெம்​பின் வீட்​டுக்​குள் நுழை​யும் ஜாக், “எனது ஆராய்ச்​சியை முடிக்க அமை​தி​யான ஓரிடம் தேவை, நாம் இரு​வரும் இணைந்து இந்த உலகைப் பயங்​கர​வாதத்​தால் ஆளப்​போகிறோம்” என்று மிரட்​டு​கிறான். கண்​ணுக்​குத் தெரி​யாத மனிதனின் அட்​ட​காசங்​களை நம்ப மறுக்​கும் போலீஸ் அதி​காரி​யின் முகத்​தில் ஜாக் மையை வீசி​விட்​டுத் தப்​பு​கிறான்.

அவனது கொலை​வெறி உச்​சத்தை எட்​டு​கிறது; ரயில் சிக்​னல்​களை மாற்​றிப் பெரும் விபத்தை ஏற்​படுத்​துகிறான். நூற்​றுக்​கணக்​கான அப்​பாவி மக்​கள் பலி​யாகிறார்​கள். கெம்​பின் தகவலால் டாக்​டர் கிரேன்​லி​யுடன் வரும் புளோ​ரா, ஜாக்​கைத் தனியே சந்​திக்​கிறாள். ஜாக் அவளிடம், “உனக்​காகத்​தான் பணத்​தை​யும் புகழை​யும் அடையப் போராடினேன்.

நான் இப்​போது தலைசிறந்த விஞ்​ஞானி! இந்த அகிலமே என் காலடி​யில்” என்று கொக்​கரிக்​கிறான். புளோரா பதற்​றத்​துடன், “நீ உட்​கொண்ட மருந்து உன் எண்​ணங்​களைச் சிதைத்​து​விட்​டது” என்று அவனைத் திருத்த முயல்​கிறாள். ஆனால், ஏற்​கெனவே அதி​கார போதை​யில் இருந்த அவன் அதை ஏற்​க​வில்​லை.

போலீ​ஸார் வீட்​டைச் சூழ, அங்​கிருந்து தப்​பு​கிறான் ஜாக். போகு​முன், போலீஸுக்​குத் தகவல் சொன்ன கெம்​பிடம், “நாளை இரவு 10 மணிக்கு உன்​னைக் கொல்​வேன்” என்று சவால் விடுத்​துச் செல்​கிறான். ஜாக்கை வலை​வீசிப் பிடிக்க போலீ​ஸார், தேடு​தல் வேட்​டை​யில் இறங்​கு​கிறார்​கள்.

உலகை ஆட்​டிப்​படைக்க நினைக்​கும் ஜாக், தனது சவாலில் வென்​றா​னா? அல்​லது விதி​யின் சதி​யால் வீழ்ந்​தா​னா? என்​பதே இப்​படத்​தின் அதிரடி உச்​சக்​கட்​டம்! ஒரு மனிதன் அரூப​மாகும்​போது அவனது தார்​மீகப் பொறுப்​பு​கள் எப்​படிச் சிதைகின்றன என்​பதை மைய​மாகக் கொண்டு ஹெச்​.ஜி. வெல்ஸ் எழு​திய நாவல்​தான் இந்​தப் படம்.

ஆர்​.சி.ஷெரிஃபின் விறு​விறுப்​பான திரைக்​கதை​யில் ‘பி​ராங்​கன்​ஸ்​டைன்’ புகழ் இயக்​குநர் ஜேம்ஸ் வேல் பிரம்​மாண்​ட​மாக இயக்​கி​யுள்​ளார். இரண்​டாம் உலகப்​போருக்கு முந்​தைய அந்​தச் சூழலில், ஒரு தனிமனிதனின் பேராசை ஒட்​டுமொத்த உலகையே அச்​சுறுத்​தும் என்​பதை இப்​படம் மிக ஆழமாகப் பதிவு செய்​தது.

மொத்த நகரத்​தை​யும் பீதிக்​குள்​ளாக்​கிய அந்த அரூப மனிதன், ஒரு வைக்​கோற்​போரில் உறங்​கும்​போது பிடிபடு​வதும், கண்​ணுக்​குத் தெரி​யாதவனைப் பனி​யில் தோன்​றும் அவனது கால்​தடங்​களை வைத்தே சுட்​டுப் பிடிப்​பதும் மிகச்​சிறந்த திரைக்​கதை நுட்​பங்​கள். அவை படமாக்​கப்​பட்ட வித​மும் காட்​சிகளின் கோர்ப்​பும் இன்​று​வரை ஆச்​சர்​யப்பட வைக்​கிறது.

ஒளிப்​ப​தி​வாளர் ஆர்​தர் எடிசன், தனது கறுப்​பு-வெள்ளை ஒளிப்​ப​தி​வில் இப்​பிங் கிராமத்​தின் பனிப்​பொழி​வை​யும், விடு​தி​யின் மர்​ம​மான சூழலை​யும் தத்​ரூப​மாகப் படம்​பிடித்​துள்​ளார். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர் ஜான் பி.ஃபுல்​டன் உடல் மட்​டும் மறை​யும் காட்​சிகளை உரு​வாக்​கப் பயன்​படுத்​திய ‘டி​ராவலிங் மேட்’ தொழில்​நுட்​பம் அன்​றைய கால​கட்​டத்​தின் பெரும் அதிச​யம்.

பனி​யில் கால்​தடம் மட்​டும் தோன்​று​வது, ஆளில்​லாமல் மிதிவண்டி ஓடு​வது, சட்​டை​யும் பேன்ட்​டும் காற்​றில் நடந்து வரு​வது போன்ற காட்​சிகள் ரசிகர்​களுக்​குச் சிரிப்​பை​யும் திகிலை​யும் ஒருசேர அளித்​தன. கிராபிக்ஸ் வசதி​கள் இல்​லாத காலத்​திலேயே, ஒரு மர்ம மனிதன் காற்​றில் மறைவதை​யும், தானாகச் சிகரெட் பற்​றவைப்​ப​தை​யும் நுணுக்​க​மாகக் கையாண்ட விதம் உலக ஒளிப்​ப​திவுத் துறையை வியக்க வைத்​தது.

‘டெட் கென்ட்​’டின் படத்​தொகுப்பு அரூப மனிதனின் கலவரங்​களைக் கச்​சித​மாகக் கோர்க்க, ஹைன்ஸ் ரோம்​கெல்ட் அமைத்த பின்​னணி இசை, படம் முழு​வதும் ஒரு​வித பதைப​தைப்​பைத் தக்​கவைக்​கிறது. ஜாக்​கின் காதலி​யாக வரும் குளோரியா ஸ்டூவர்ட், உரு​வம் இல்​லாத காதலனின் வெறும் குரலை மட்​டும் கேட்​டு, அதற்​குத் தகுந்த உணர்ச்சி கரமான பாவனை​களை வெளிப்​படுத்​திய விதம் அற்​புதம்.

1933-ல் இளமை ததும்​பும் நாயகி​யாக நடித்த இவர், சரி​யாக 64 ஆண்​டு​களுக்​குப் பிறகு ஜேம்ஸ் கேமரூனின் ‘டைட்​டானிக்’ (1997) படத்​தில் முதிய வயது ‘ரோஸ்’ கதா​பாத்​திரத்​தில் நடித்து உலகப் புகழ்​பெற்​றார். ஹாலிவுட்டின் இரு பெரும் கால​கட்​டங்​களைத் தனது நடிப்​பின் மூலம் இணைத்​துச் சாதனை படைத்த இவருக்​கு, 87 வயதில் ஆஸ்​கர் பரிந்​துரை கிடைத்​தது வரலாற்​றுச் சான்​று.

திரை​யில் முகம் தெரி​யாமலேயே தனது காத்​திர​மான குரலால் ஆணவம், செருக்​கு, காதல் என நவரசங்​களை​யும் வெளிப்​படுத்​திய கிளாட் ரெயின்​ஸ், ஜாக் கிரிஃபின் கதா​பாத்​திரத்​துக்கு உயிர் கொடுத்​திருப்​பார். மரணித்​த​பின் தன் காதலி​யின் முன்​னால் முதன்​முறை​யாக அவரது முகம் திரை​யில் தோன்​றும் அந்த நெகிழ்ச்​சி​யான காட்​சி, இயற்​கைக்கு மாறான கண்​டு​பிடிப்​பு​கள் அழி​விலேயே முடி​யும் என்ற தத்​து​வத்தை அழுத்​த​மாகப் பதிவு செய்​கிறது.

இன்று வெளிவரும் பல பாகங்​களைக் கொண்ட ‘சீக்​கு​வல்’ திரைப்​படக் கலாச்​சா​ரத்​துக்கு இப்​படமே மிகச்​சிறந்த முன்​னோடி. இதன் பிரம்​மாண்ட வெற்​றியே பின்​னாளில் பல தொடர் படங்​களுக்கு அடித்​தளமிட்​டது. தொழில்​நுட்ப வசதி​கள் ஏது​மற்ற 1930-களி​லேயே, கண்​ணுக்​குப்​ புலப்​ப​டாத மனிதனின்​ சாகசங்​களைப்​ பிரம்​மாண்​டத்​ திரை அனுபவமாக வழங்கிய இந்த தி​கில்​ கா​வி​யத்​தை ரசிக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும் படம் பார்க்கலாம்)

- ramkumaraundipatty@gmail.com

‘தி இன்விசிபிள் மேன்’ - 1933: சீக்​கு​வல் படக் கலாச்​சா​ரத்​துக்கு  முன்​னோடி! | ஹாலிவுட் மேட்னி 30
‘த டிஃபையன்ட் ஒன்​ஸ்’ - 1958: இனவெறி சங்கிலியை உடைத்த படம் | ஹாலிவுட் மேட்னி 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in