‘த டிஃபையன்ட் ஒன்​ஸ்’ - 1958: இனவெறி சங்கிலியை உடைத்த படம் | ஹாலிவுட் மேட்னி 29

‘த டிஃபையன்ட் ஒன்​ஸ்’ - 1958: இனவெறி சங்கிலியை உடைத்த படம் | ஹாலிவுட் மேட்னி 29
Updated on
3 min read

ஒரே இரும்​புச் சங்​கி​லி​யால் பிணைக்​கப்​பட்ட இரு இனவெறி கைதி​கள் இணைந்து தப்​பிக்​கும்​போது இணைபிரியா நண்​பர்​களாவது​தான் ‘த டிஃபையன்ட் ஒன்​ஸ்’ (THE DEFIANT ONES – 1958) திரைப்​படத்​தின் ஒரு​வரிக்​கதை.

மழை இரவில் கைதி​களை ஏற்​றிச் செல்​லும் சிறை வேன் சென்​று​கொண்​டிருக்​கிறது. அதில் கறுப்​பினக் கைதி​யான நோயாக் கல்​லனும், வெள்​ளை​யினக் கைதி​யான ஜான் ஜாக்​சனும் ஒரே இரும்​புச் சங்​கி​லி​யால் பிணைக்​கப்​பட்​டுள்​ளனர்.

பயணத்​தின்​போது கல்​லன் பாடும் ஒரு பாட்​டால் இரு​வருக்​கும் தொடங்​கும் வாக்​கு​வாதம், இனவெறி மோதலாகி, வேன் நிலை​தடு​மாறி விபத்​துக்​குள்​ளாக, இரு​வரும் ஒன்​றாகத் தப்​பித்து ஓடு​கிறார்​கள்.

விபத்து நடந்த இடத்​தில் கூடும் காவல்​துறை​யினர், ஒரு கறுப்​பினக் கைதி​யை​யும் வெள்​ளை​யினக் கைதி​யை​யும் ஒன்​றாகப் பிணைத்த சிறை வார்​டனைக் கிண்​டலடித்த தோடு, “பரஸ்​பரம் வெறுப்பு கொண்ட இரு​வரும் 5 கி.மீ தூரம் செல்​வதற்​குள் ஒரு​வரை ஒரு​வர் அடித்​துக் கொன்​று​விடு​வார்​கள்” என நம்​பு​கிறார்​கள்.

காட்​டுக்​குள் தப்​பிக்​கும் கைதி​கள் சங்​கி​லியை கல்​லால் உடைக்க முயன்று தோற் கின்​றனர். மறு​புறம், ஷெரீப் தலை​மை​யில் மோப்ப நாய்​களு​டன் தீவிர தேடு​தல் வேட்டை தொடங்​கு​கிறது. ஆபத்​தான ஆற்​றைக் கடக்​கும்​போது நீரோட்​டத்​தில் சிக்​கும் கல்​லனை, ஜாக்​சன் காப்​பாற்​றுகிறான்.

தவளை​யைச் சுட்டு உணவாக்​கிக் கொள்​ளும் அவர்​கள், ஜாக்​சனின் இனவெறிப் பேச்​சால் மீண்​டும் சண்​டை​யிடு​கின்​றனர். பின்​னர், வழி​யில் வரும் வாக​னத்​திட​மிருந்து தப்​பிக்​கச் செங்​குத்​தான பள்​ளத்​தில் குதித்​து, பெரும் போராட்​டத்​துக்​குப் பின் வெளி​யேறுகின்​றனர்.

அப்​போது ஜாக்​சனுக்கு ஏற்​படும் காயத்​துக்கு கல்​லன் களிமண் பூசி உதவு​கிறான். காவலர்​களின் தேடு​தல் குழு நெருங்கி வரும் வேளை​யில், இரு​வரும் ஒரு குடி​யிருப்​புப் பகு​திக்​குள் நுழைகிறார்​கள். பவுர்​ணமி வெளிச்​சத்​தில் மாட்​டிக்​கொள்​ளாமல் இருக்க ஜாக்​சன் முகத்​தில் கல்​லன் கரியைப் பூச, “இப்​போது நாம் இரு​வரும் ஒன்​றாகி​விட்​டோம்” என ஜாக்​சன் நெகிழ்​கிறான்.

உணவுக்​காக ஒரு கடை​யில் நுழைந்து ஊர் மக்​களிடம் சிக்​கித் தூக்​குமேடை வரை சென்​றவர்​களை ஒரு பெரிய​வர் காப்​பாற்​றித் தப்​ப​விடு​கிறார். மீண்​டும் மலைப்​பகு​தி​யில் ஓடும்​போது தனித்து வாழும் ஒரு தாயை​யும் சிறு​வனை​யும் சந்​திக்​கிறார்​கள். அங்​குள்ள சுத்​தி​யல் மற்​றும் உளியைக் கொண்டு தங்​கள் சங்​கி​லியை உடைக்​கிறார்​கள்.

கணவனைப் பிரிந்து தனிமை​யில் வாழும் அவளுக்​கும் ஜாக்​சனுக்​கும் இடையே காதல் மலர்​கிறது. மறு​நாள், தன்​னிடம் உள்ள பழைய காரைச் சரிசெய்து நாம் இரு​வர் மட்​டும் தப்​பிக்​கலாம் என ஜாக்​சனிடம் அவள் கூற, கல்​லனும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்​லை.

அந்​தப் பெண் கல்​லனுக்கு ஒரு சதுப்பு நிலக் குறுக்​கு​வழியைச் சொல்​கிறாள். அவன் சென்​றதும், அது உயிரைப் பறிக்​கும் ஆபத்​தான பாதை என்​றும், போலீ​ஸில் தங்​களைக் காட்​டிக்​கொடுக்​காமல் இருக்​கவே அப்​படிச் செய்​த​தாக​வும் அவள் ஜாக்சனிடம் கூறுகிறாள். அதிர்ச்​சி​யடை​யும் ஜாக்​சன், அவளை உதறி​விட்டு நண்​பனைக் காப்​பாற்ற ஓடு​கிறான். இதனால் ஆத்​திரமடைந்த அவளது மகன் ஜாக்​சனைத் துப்​பாக்​கி​யால் சுட்​டு​விடு​கிறான்.

காயத்​துடன் ஓடிவரும் ஜாக்​சன், கல்​லனைச் சந்​தித்து ஆபத்தை எச்​சரிக்​கிறான். ஷெரீப் நெருங்​கும் வேளை​யில், இரு​வரும் ஓடும் ரயி​லில் ஏற முயல்​கின்​றனர். கல்​லன் ஏறி​விட, பலவீனமடைந்த ஜாக்​ச​னால்​ முடிய​வில்​லை. சுதந்​திரத்தை விட நட்பே பெரிதென உணர்ந்த கல்​லன், தப்​பிக்​கக் கிடைத்த இறுதி வாய்ப்​பை​யும் உதறி நண்​பனுக்​காக ரயி​லில் இருந்து கீழே குதிக்​கிறான்.

இரு​வரும் ஒன்​றாக அமர்ந்து புன்​னகை​யுடன் ஒரே சிகரெட்டை இரு​வரும் மாறி, மாறிப் புகைக்க, கல்​லன் மீண்​டும் தன் பாடலைத் தொடங்​கு​கிறான். அங்கு வரும் ஷெரீப், துப்​பாக்​கி​யால் மிரட்​டா​மல் நெகிழ்ச்​சி​யுடன் அமை​தி​யாகப் பார்ப்​பதுடன் படம் நிறைவடைகிறது.

1950-களில் அமெரிக்​கா​வில் இனவெறி உச்​சத்​தில் இருந்த சூழலில், ‘மெசேஜ் இயக்​குநர்’ என்​றழைக்​கப்​படும் ஸ்டேன்லி கிராமர் இரு கைதி​களை மைய​மாக வைத்து அந்த இனவெறிச் சங்​கி​லியை உடைத்​துக் காட்​டிய படம் இது.

சிக்​கலான கதையமைப்பு கொண்ட இப்​படத்​தைத் தனது சொந்த நிறு​வனம் மற்​றும் யுனைடெட் ஆர்​டிஸ்ட்ஸ் நிறு​வனம் மூலம் தயாரித்து இயக்​கி​னார். சிவில் உரிமை போராட்​டம் தீவிரமடைவதற்கு முன்பே இத்​தகைய முற்​போக்​கான படத்தை உரு​வாக்​கியதற்​காக அவர் பெரிதும் பாராட்​டப்​பட்​டார்.

கதாசிரியர்​கள் நெடுரிக் யங் மற்​றும் ஹரோல்ட் ஜேக்​கப் ஸ்மித் இரு​வரும், இணைந்து இரு துரு​வக் கதா​பாத்​திரங்​களுக்கு இடையி​லான முரண்​பாடு மற்​றும் உளவியல் மாற்​றங்​களை விறு​விறுப்​பான ‘சேஸிங்’ கதைக்​குள் மிக நுட்​ப​மாகப் பின்​னி​யிருக்​கிறார்​கள்.

இந்​தச் சிறப்​பான எழுத்​தாக்​கத்​துக்​காக ‘சிறந்த அசல் திரைக்​கதை’க்​கான ஆஸ்​கர் விருது கிடைத்​தது. மெக்​கார்த்தி ஈரா காலத்​தில் தடை செய்​யப்​பட்​டிருந்த நெடுரிக்யங், நேதன் இ.டக்​ளஸ் என்ற புனைப்​பெயரில் இவ்​விருதைப் பெற்​றது குறிப்​பிடத்​தக்​கது.

சாம் லீவிட்​டின் கறுப்​பு-வெள்ளை ஒளிப்​ப​திவு, மழை, காடு, சதுப்பு நிலம் என கரடு முர​டான நிலப்​பரப்​பு​களில் தப்​பியோடும் கைதி​களின் சோர்வை அவரது கேமரா தத்​ரூப​மாகப் படம்​பிடித்​தது. ஒளி​யும் நிழலும் கலந்த கோணங்​களில் இனவெறி அரசி​யலை அழுத்​த​மாகக் காட்​சிப்​படுத்​தி​யதற்​காக, சிறந்த ஒளிப்​ப​தி​வாள​ருக்​கான ஆஸ்​கர் விருதை அவர் வென்​றார்.

ஃபிரடெரிக் நுட்​சனின் நேர்த்​தி​யான படத்​தொகுப்​பு, தப்​பியோடும் கைதி​களின் பதற்​றத்​தை​யும் அவர்​களைத் துரத்​தும் காவலர்​களின் வேகத்​தை​யும் கச்​சித​மாக இணைத்​து, படத்​தின் விறு​விறுப்பை இறு​திவரை குறை​யாமல் பார்த்​துக்​கொண்​டது.

எர்​னஸ்ட் கோல்​டின் பின்​னணி இசை, படம் முழு​வதும் ஒரு​விதப் பதைப​தைப்​பைத் தக்​க வைக்க உதவியது. கதா​பாத்​திரங்​களின் உணர்​வுப் போராட்​டங்​களுக்கு ஏற்​பக் கச்​சித​மான இசையை வழங்​கிய அவர், கல்​லன் அவ்​வப்​போது பாடும் அந்த ஒற்​றைப் பாடலையே படத்​தின் ஆன்​மா​வாக நிலைநிறுத்​தி​யிருக்​கிறார்.

டோனி கர்​டிஸ் மற்​றும் சிட்னி பாய்ட்​டியர் ஆகிய இரு​வரின் அபார நடிப்பு இப்​படத்​தின் பெரும் தூண்​கள். வன்​மத்​தில் தொடங்கி உயிர் கொடுக்​கும் நட்​பில் முடி​யும் உணர்​வுப் போராட்​டத்தை இரு​வரும் உடல்​மொழி​யிலும் பார்​வை​யிலும் அற்​புத​மாக வெளிப்​படுத்தி யிருக்​கிறார்​கள்.

‘கவர்ச்சி நாயகன்’ பிம்​பத்தை ‘டோனி கர்​டிஸ்’ உடைக்க, ஒடுக்​கப்​பட்ட சமூகத்​தின் வலியை சிட்னி பாய்ட்​டியர் கம்​பீர​மாகத் திரை​யில் கடத்​தி​யிருக்​கிறார்.

தனிமை​யில் தவிக்​கும் பெண்​ணாக வரும் காரா வில்​லி​யம்​ஸ், மனி​தாபி​மானமிக்க ஷெரீப்​பாக வரும் தியோடர் பிகெல் ஆகியோ​ரும் தங்​கள் கதா​பாத்​திரங்​களில் கச்​சித​மாகப் பொருந்தி இருக்​கின்​றனர்​.

சிறந்த திரைப்​படம், சிறந்த இயக்​குநர் உட்பட 9 பிரிவு​களில் பரிந்​துரைக்​கப்​பட்ட இப்​படம், 2 ஆஸ்​கர் விருதுகளை வென்​றது. மேலும், சிட்னி பாய்ட்​டியர் இவ்​விருதுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட முதல் கறுப்​பின நடிகர் என்ற மாபெரும் வரலாற்​றுச் சாதனையை​யும் இப்​படம் படைத்​தது.

ஜாதி, மதம், இனம் என இன்​றைய கால​கட்​டத்​தி​லும் பிரிந்து கிடக்​கும் மனிதர்​களை இணைப்​பது அன்​போ, கருணையோ அல்ல, அவர்​களின் அடிப்​படைத் தேவை​யும் உயிர்​வாழும் போ​ராட்​ட​முமே என்​பதை விறு​விறுப்​பான க்ரைம் த்ரில்​லருக்​குள் வைத்​துத் தைத்த திரைக்​கதைக்​காகவே, கருப்​பு – வெள்​ளை பாரபட்​சமின்​றி ஒரு வண்​ண மாலைப்​ பொழுதை இக்​கா​வி​யத்​துக்​காக ஒதுக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும்​ படம் பார்க்கலாம்)

- ramkumaraundipatty@gmail.com

‘த டிஃபையன்ட் ஒன்​ஸ்’ - 1958: இனவெறி சங்கிலியை உடைத்த படம் | ஹாலிவுட் மேட்னி 29
‘கேஸ்லைட்’ - 1944: மனவியல் சொல்லாக மாறிய திரைப்பட தலைப்பு | ஹாலிவுட் மேட்னி 28

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in