

வெளிச்சத்தை மங்கச் செய்து, ஒரு பெண்ணைப் பைத்தியமாக்கி அவளது வாழ்க்கையையும் வைரத்தையும் அபகரிக்க முயலும் கணவனை, உளவியல் பாணியில் வீழ்த்தும் மனைவியின் கதை ‘கேஸ்லைட்’ (GAS LIGHT 1944).
1875-ம் ஆண்டு, லண்டனின் தார்ன்டன் சதுக்கம். தெருவில் கேஸ் விளக்குகள் ஏற்றப்படும் வேளையில், புகழ்பெற்ற பாடகி ஆலிஸ் அல்குவிஸ்ட் மர்மமாகக் கொல்லப்பட்ட செய்தி பரவுகிறது. அவரது வாரிசான சிறுமி பவுலா, அத்தையின் மரணத்துக்குப் பிறகு இத்தாலிக்கு இசை கற்க அனுப்பப்படுகிறாள்.
பத்து ஆண்டுகள் கழித்து கிரிகோரி ஆண்டனை மணக்கும் பவுலா, ஐரோப்பாவிலேயே வாழ விரும்பினாலும், கணவனின் வற்புறுத்தலால் அத்தை கொல்லப்பட்ட அதே லண்டன் வீட்டுக்குத் திரும்புகிறாள். வீட்டின் பழைய பொருட்கள் அனைத்தும் ஆலிஸின் நினைவுகளைக் கிளறுகின்றன.
அங்கு கிடைக்கும் அத்தையின் கடிதத்தையும் கிரிகோரி பிடுங்கிக் கொண்டு, பழைய நினைவுகளை மறக்கச் சொல்கிறான். எலிசபெத் என்ற வயதான சமையல்காரி, நான்சி என்ற இளம் வேலைக்காரி ஆகியோரை வேலைக்கு வைத்து, பல சம்பவங்கள் மூலம் பவுலாவையே சந்தேகப்படும்படி சூழ்நிலைகளை உருவாக்குகிறான்.
மியூசியத்துக்குச் செல்லும்போது கிரிகோரி கொடுத்த குடும்ப மோதிரம் காணாமல் போகிறது. சுவரிலிருந்த புகைப்படமும் மறைந்து மீண்டும் கிடைப்பதால் பவுலா, தனக்கு மறதி நோய் இருக்கிறதோ? என குழம்புகிறாள்.
ஒவ்வொரு இரவும் கிரிகோரி வேலை விஷயமாக வெளியே செல்வதாகச் சொல்லிச் செல்கிறான். அவன் சென்றதும் வீட்டில் இருக்கும் கேஸ் விளக்குகள் மங்குகின்றன. மாடியில் யாரோ நடக்கும் சத்தமும், அலமாரிகளைத் தேடும் சத்தமும் பவுலாவுக்குத் தெளிவாகக் கேட்கிறது.
இதைப் பற்றி அவள் கிரிகோரியிடம் சொன்னால், “இவை எல்லாம் உன் பிரமை; உன் தாயைப் போலவே நீயும் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறாய்” என்று கூறி அவளை அச்சுறுத்துகிறான். ஓர் இசை நிகழ்ச்சிக்கு வந்த அழைப்பையும் பவுலாவுக்குத் தெரியாமலேயே கிரிகோரி நிராகரிக்கிறான்.
பவுலா பிடிவாதம் பிடித்துச் செல்லும்போது, அங்கே திட்டமிட்டுத் தனது கைக்கடிகாரத்தைத் திருடி அவளது பையிலேயே போட்டுவிடுகிறான். மக்கள் முன்னிலையில் அவமானப்பட்டு அழுதுகொண்டே வெளியேறும் பவுலா, “நான் உண்மையிலேயே பைத்தியமாகிவிட்டேனா?” என்று நம்பத் தொடங்குகிறாள்.
அந்த வீட்டில் நடக்கும் மர்மங்களைக் கவனிக்கும் துப்பறியும் அதிகாரி பிரையன், ஆலிஸின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கிறார். உண்மையில் கிரிகோரி வெளியே செல்லவில்லை; அத்தையின் வைரங்களைத் தேடி ரகசியமாக மாடி அறைக்குச் செல்கிறான்.
அவன் மாடியில் விளக்கை ஏற்றும்போதுதான் கீழே பவுலாவின் அறையில் கேஸ் விளக்கு மங்குகிறது. அத்தையைக் கொன்ற சர்ஜிஸ் பாயர்தான் இப்போது கிரிகோரி என்ற பெயரில் பவுலாவை மணந்திருக்கிறான் என்பதைப் பிரையன் நிரூபிக்கிறார்.
வைரங்களைக் கண்டுபிடிக்கும் கிரிகோரியை அவர் கையும் களவுமாகப் பிடிக்கிறார். இறுதியில், கட்டப்பட்ட நிலையில் இருக்கும் கிரிகோரி ஒரு கத்தியைக் காட்டித் தன் கட்டுகளை அவிழ்க்குமாறு பவுலாவிடம் கெஞ்சுகிறான்.
ஆனால் பவுலாவோ, “நான் பைத்தியம் அல்லவா? எனக்கு இந்தக் கத்தி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே!” என்று அவனது பாணியிலேயே நக்கலாகப் பதிலடி கொடுத்து, அவனைச் சட்டத்திடம் ஒப்படைக்கிறாள்.
ஒரு வீட்டின் 4 சுவர்களுக்குள் நடக்கும் போர், உலகப் போரைக் காட்டிலும் கொடியதாக இருக்க முடியும் என்பதை 1944-ல் வெளியான ‘கேஸ்லைட்’ நிரூபித்தது. ‘பெண்களின் இயக்குநர்’ என்று போற்றப்படும் ஜார்ஜ் கியூக்கர், ஒரு பெண்ணின் நம்பிக்கையைச் சிதைக்கும் உளவியல் வன்முறையை நுணுக்கமான சைக்காலஜிக்கல் க்ரைம் த்ரில்லராக செதுக்கியுள்ளார்.
பேட்ரிக் ஹாமில்டனின் அசாத்தியமான மூலக்கதையை, ஜான் வான் ட்ரூடன், வால்டர் ரீச், ஜான் எல்.பால்டர்ஸ்டன் உள்ளிட்ட திரைக்கதை ஆசிரியர்கள் தீவிரமான உளவியல் போர்க்களமாக மாற்றியுள்ளனர்.
ஒளிப்பதிவு (ஜோசப் ரூட்டன்பெர்க்): நிழல்களையும் ஒளியையும் ஆயுதமாக்கிப் பயத்தை உருவாக்குகிறார். குறிப்பாக கேஸ் விளக்குகள் மங்கும் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட லோ-கீ லைட்டிங் முறை இப்படத்தின் உயிர்நாடி.
எடிட்டிங் (ரால்ப் வின்டர்ஸ்): கிரிகோரியின் பொய்களுக்கு எதிராகப் பவுலாவின் முகத்தில் தோன்றும் அதிர்ச்சியைத் துல்லியமாகப் பதிவு செய்யும் ‘ரியாக் ஷன் ஷாட்கள்’ பார்வையாளர்களை நேரடியாக அவளது மனநிலைக்கு இழுத்துச் செல்கின்றன.
இசை (பிரானிஸ்லாவ் கேப்பர்): மவுனத்துக்கும் ஒலிக்கும் இடையில் பதற்றத்தை உருவாக்கும் மெதுவான பின்னணி இசை, கதையின் உளவியல் அச்சத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.
இன்கிரிட் பெர்க்மன் (பவுலா): பயம், குழப்பம், மனச்சிதைவு போன்ற உளவியல் மாற்றங்களை மிக நுட்பமாக வெளிப்படுத்திய அற்புதமான நடிப்பு. அழகான முகத்தில் மெல்ல படரும் சோகம், பயம், மனப் பிறழ்வு ஆகிய உணர்வுகள் பார்வையாளர்களையும் அவளது துயரத்தில் இழுத்துச் செல்கின்றன. இந்தப் படத்துக்கு அவர் ஆஸ்கர் விருதையும் பெற்றார்.
சார்லஸ் போயர்: ஹாலிவுட் ரொமான்டிக் ஹீரோவான இவர் தனது வசீகரமான முகத்தையே முகமூடியாக மாற்றி, அதன் பின்னால் இருக்கும் கொடூரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார்.
ஏஞ்சலா லான்ஸ்பரி மற்றும் ஜோசப் காட்டன்: முறையே வஞ்சகமான வேலைக்காரியாகவும் நம்பிக்கையான அதிகாரியாகவும் கதையின் ஓட்டத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
7 பிரிவுகளில் அகாடமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இப்படம், சிறந்த நடிகை மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 2 பிரிவுகளில் விருதுகளை வென்றது.
வில்லன், கேஸ் விளக்குகளை மங்கச் செய்து அதை நாயகியின் பிரமை என்று நம்ப வைக்கும் இந்த உளவியல் ஏமாற்று முறையைத்தான் பின்னாளில் “Gaslighting” என்று அழைக்கத் தொடங்கினர்.
ஒரு திரைப்படத்தின் தலைப்பு உலகளாவிய மனவியல் சொல்லாக மாறியது சினிமா வரலாற்றில் அபூர்வமான சம்பவம். ரத்தம் சிந்தும் கொலைகளை விட, மனித மனதை மெதுவாகச் சிதைக்கும் ‘கேஸ்லைட்டிங்’ எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தும் இந்தப் படத்தை, வீட்டின் வெளிச்சத்தைக் குறைத்து மங்கிய இருளில் ரசித்துப் பார்க்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com