

போலீஸ் கண்டுபிடிக்க முடியாத ஒரு கொலை வழக்கை, மனநல மருத்துவர் கண்டுபிடிப்பதே ‘த டார்க் மிர்ரர் ( THE DARK MIRROR – 1946) திரைப்படத்தின் ஒருவரிக் கதை. இரவு 10.48 மணிக்கு ஒரு வீட்டுக்குள் முதுகில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடக்கிறார், டாக்டர் ஃபிராங்க் பெரால்டா. கொலை நடந்த இடத்தில், இளம்பெண் ஒருவரைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள் சிலர்.
லெப்டினென்ட் ஸ்டீவன்சன், அந்த இளம்பெண் தெரசா காலின்ஸை (சுருக்கமாக டெர்ரி) ஒரு புத்தகக் கடையில் சந்தித்து, கொலை பற்றி விசாரிக்கிறார். அவர் குறிப்பிடும் நேரத்தில், ஜெஃபர்சன் பார்க்கில் இசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்ததாகச் சொல்கிறாள் டெர்ரி.
பார்க்கில் இருந்தவரை, சம்பவ இடத்தில் எப்படி சாட்சிகள் பார்த்திருக்க முடியும்? என்ற குழப்பத்தில் டெர்ரியின் வீட்டுக்குச் சென்ற ஸ்டீவன்சனுக்கு அதிர்ச்சி. டெர்ரியை போலவே அச்சு அசலான தோற்றம் கொண்ட ரூத் என்கிற சகோதரியை அங்கு பார்க்கிறார். “நேற்றிரவு யார் எங்கே இருந்தீர்கள்?” ஸ்டீவன்சனின் கேள்விக்கு ஒருவர் பார்க்கிலும், மற்றொருவர் வீட்டிலும் இருந் தோம் என்று குழப்பப் பதில் சொல்கிறார்கள்.
இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார். அடையாள அணிவகுப்பில் பங்கு பெறுகிறார்கள். ஒன்றுபோலவே இருப்பதால் சாட்சிகள் திணறுகிறார்கள். “டெர்ரியும் பெரால்டாவும் காதலர்கள். அன்று காலையில் சண்டை போட்டார்கள்” என்று ரஸ்டி என்ற லிப்ட் ஊழியர் சாட்சி சொல்கிறார். அங்கு இரட்டை சகோதரிகள் வசிப்பது அவனுக்கே அப்போது தான் தெரிகிறது.
பெரால்டா தனது நண்பர் என்கிறாள் டெர்ரி. நீதிபதி, “உங்கள்ல ஒருத்தர் கொலை பண்ணியிருக்கீங்க. இன்னொருத்தர் உதவி பண்ணியிருக்கீங்க. ஆதாரம் இல்லாததால விடுதலை பண்றேன். இது நீதிமன்றத்துக்கே அவமானம்” என்று கோபத்தில் உத்தரவிடுகிறார்.
ஸ்டீவன்சனுக்கு இந்த வழக்கு சவாலாக இருக்கிறது. 50 பேர் சாட்சி சொன்ன வழக்கில் குற்றவாளி தப்பிப்பதை அவர் விரும்பவில்லை. இரட்டையரைப் பற்றி ஆராய்ச்சி புத்தகம் எழுதிய ஸ்காட் எலியாட் என்ற மனநல மருத்துவரிடம் உதவி கேட்கிறார்.
டெர்ரியையும், ரூத்தையும் சந்தித்து தனது ஆராய்ச்சியைப் பற்றி விவரித்து அவர்களை தனித்தனியாகக் கேள்விகள் கேட்கிறார் ஸ்காட். டெர்ரி கொஞ்சம் ஆக்ரோஷமானவர், ரூத் அமைதியானவர் என்பதை அறிகிறார். சிறுவயதிலிருந்தே ரூத்தைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். பெரால்டா கூட ரூத்தைத் தான் காதலித்தான்.
அதை அறிந்த டெர்ரி, பெரால்டாவிடம் பழகுகிறாள். குணாதிசயம் மாறிப் பேசுவது இரட்டையர் என்று தெரியாமல் ‘ஸ்பிளிட் பர்சனாலிட்டி’ என்று நினைத்துக் கொள்கிறான். ரூத்தை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யும்போது, தனக்குக் கிடைக்காத அவனை, டெர்ரி கொன்றிருக்கலாம் என்று ஸ்டீவன்சனிடம் தெரிவிக்கிறார் ஸ்காட்.
உண்மையைக் கண்டறிய ஸ்டீவன்சனும், ஸ்காட்டும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதில் உண்மைக் குற்றவாளி எப்படி சிக்குகிறார் என்பது கதை. படம் முழுவதும், ‘யார் அந்தக் கொலையைச் செய்திருப்பார்கள்?” என்கிற குழப்பத்தை விட, இந்தப் படத்தை எப்படி எடுத்திருப்பார்கள்? என்கிற ஆச்சர்யம்தான் மேலோங்கி நிற்கிறது.
‘தெய்வமகன்’ படத்தை விருதுக்கு அனுப்பியபோது சிவாஜி நடித்த மூன்று வேடங்களைப் பார்த்து வியந்த விருது கமிட்டி, நிச்சயமாக 3 பேர்தான் நடித்திருக்கிறார்கள், ஒருவர் நடித்திருக்க முடியாது என்று நிராகரித்ததாகச் சொல்வார்கள்.
இதுவே சிவாஜி கணேசனுக்கு கிடைத்த விருது. அதை ஞாபகப்படுத்தும் விதத்தில் ஹாலிவுட் நடிகை ஒலிவியா டி ஹாவிலண்ட் டெர்ரியாக ஆக்ரோஷமாகவும், ரூத்-தாக பயந்த சுபாவத்துடனும் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
இரட்டை வேடக் காட்சியை ஒரே ஷாட்டில் எடுக்கும்போது டெர்ரி கேரக்டர் நடித்தபிறகு, ‘டபுள் எக்ஸ்போஷர்’ முறையில் ரூத் கேரக்டர், அந்தந்த டைமிங்கில் ரியாக் ஷனும் வசனமும் பேச வேண்டும். ஒளிப்பதிவாளர் (மில்டன் கிராஸ்னர்), எடிட்டர் (ஏர்னஸ்ட் நிம்ஸ்) நடிகர், இயக்குநர் என அனைவரும் ‘டைமிங்’ புரிந்து வேலை பார்த்தால்தான் காட்சி சிறப்பாக வரும்.
ஒரே ஷாட்டில் ரூத்தின் அமைதியான கண் சிமிட்டலும், டெர்ரியின் சிடுசிடு முகமும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. ‘திமிட்ரி தியோம்கினி’ன் இசை படம் முழுவதும் ஒரு கேரக்டராக பயணம் செய்து பரபரப்பாக்குகிறது. டாக்டர் ஸ்காட் எலியாட்டாக, லூ ஏயர்ஸ் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார்.
மனநல மருத்துவருக்குத் தகுந்தாற்போன்ற கனிவான குரலும், சாந்தமான பார்வையும் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. புன்னகையுடன் இரட்டையரை கேட்கும் கேள்விகள் ரசிக்க வைக்கின்றன.
லெப்டினென்ட் ஸ்டீவன்சனாக நடித்திருக்கும் தாமஸ் மிட்செல், விரக்தியை காமெடி கலந்து வெளிப்படுத்தினாலும் ‘பெர்ஃபெக்ட் கிரைம்’ பண்ணுபவர்களைக் கண்டுபிடித்தே தீர வேண்டுமென்ற உறுதி, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது.
விளாடிமிர் போஸ்னரின் குற்றப் புலனாய்வு கதைக்கு, சைக்கலாஜிக்கல் திரைக்கதை அமைத்து தயாரித்திருப்பவர் நன்னல்லி ஜான்சன். கதையின் தலைப்பிலேயே `ஃபிலிம் நாய்ர்' (FILM NOIR) வகையறா என்பது தெரிகிறது. தேர்ந்த தொழில்நுட்பத்துடன் இயக்கி இருக்கிறார் ராபர்ட் சியோட்மக். சாதாரண பார்வையாளர்களைவிட தொழில்நுட்பக் கலைஞர்களை ரொம்பவே வியக்க வைக்கும் ‘கிளாசிக் க்ரைம்’ திரைப்படம் இது.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com