‘டபுள் இண்டமினிட்டி’ - 1944: பேராசையால் கொலையை விபத்தாக்கும் மனைவி | ஹாலிவுட் மேட்னி 9

‘டபுள் இண்டமினிட்டி’ - 1944: பேராசையால் கொலையை விபத்தாக்கும் மனைவி | ஹாலிவுட் மேட்னி 9
Updated on
3 min read

இரட்டை ஆதாயத்துக்கு ஆசைப்படும் இன்சூரன்ஸ் ஏஜென்ட், இரட்டை இழப்பை சந்திப்பதுதான் ‘டபுள் இண்டமினிட்டி’ (DOUBLE INDEMNITY – 1944) படத்தின் ஒருவரிக் கதை. நள்ளிரவில் தாறுமாறாக காரை ஓட்டி வந்து, இன்சூரன்ஸ் அலுவலகத்தின் முன் நிறுத்துகிறான், குண்டடிபட்ட இன்சூரன்ஸ் ஏஜென்ட் வால்டர் நெஃப்.

குரல் பதிவு மெஷினில் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறான். அவனது வாய்ஸ் ஓவரில் ஆரம்பமாகிறது, ஃபிளாஷ்பேக். விபத்துக் காப்பீட்டை புதுப்பிப்பதற்காக டிட்ரிக்சன் என்பவர் வீட்டுக்குச் சென்ற வால்டர், அவனது 2-வது மனைவி பிலிஸை சந்திக்கிறான்.

கணவருக்குத் தெரியாமல் ஆக்ஸிடென்ட் பாலிசி எடுக்க விரும்புபவளின் கொலை நோக்கம் தெரிந்து, முதலில் திட்டினாலும் அவளுடைய அழகால் சம்மதிக்கிறான். டிட்ரிக்சனை சந்தித்து பாலிசி புதுப்பிப்பு என்று புது பாலிசி பேப்பரிலும் கையெழுத்து வாங்கி விடுகிறான்.

ரயில் விபத்துக்கு இரட்டை இழப்பீடு ஆதாயம் என்பதால், வால்டரும், பிலிஸும், ரயில் விபத்தில் டிட்ரிக்சனை கொல்ல வியூகம் வகுக்கிறார்கள். டிட்ரிக்சன் வெளியூர் செல்லும் நாளன்று அவரைப் போல உடையணியும் வால்டர், பிலிஸ் வீட்டிலுள்ள காரின் பின்சீட்டில் மறைந்து கொள்கிறான்.

வேறுபாதையில் கார் செல்வதைப் பார்த்து, டிட்ரிக்சன் கத்த, இறுகிப் போன முகத்துடன் பிலிஸ் மூன்றுமுறை ஹார்ன் அடிக்கிறாள். 3-வது ஹாரனுக்குப் பதில் அலறல் சத்தம். கொல்லப்படுகிறார் டிட்ரிக்சன்.

வால்டர், டிட்ரிக்சனைப்போல் ரயிலில் ஏறி சக பயணி ஜாக்சனுக்குத் தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குதிக்கிறார். ரயில் பாதையின் அருகிலேயே பின்தொடர்ந்து வந்த பிலிஸ், காரிலிருந்த டிட்ரிக்‌ஷன் உடலை, வால்டர் குதித்த இடத்தில் போட்டு, கொலையை, விபத்தாக்குகிறார். இன்சூரன்ஸ் அலுவலகத்தில் வால்டர், அதிகாரி கீஸ், அவர்களது பாஸ் சந்திக்கிறார்கள்.

கீஸ், பாஸிடம், “சூசைடு பண்றவன் எப்படி வேணா சாகலாம், 15 கி.மீ வேகத்துல ஓடுற ரயில்ல விழுந்து சாவானா?” என்று சந்தேகம் கிளப்புகிறார். டிட்ரிக்சனின் மகள் லோலா, வால்டரை சந்தித்து, “அப்பா சாகறதுக்கு முதல்நாள் கண்ணாடி முன்னாடி நின்னு கருப்பு ட்ரெஸ் போட்டுக்கிட்டு அழற மாதிரி பிலிஸ், சோக ஒத்திகை பாத்தா.

எங்கம்மா ஆஸ்பத்திரில சாகறப்பவும் அவதான் நர்ஸ். என் காதலன் ஸகெட்டியும், பிலிஸும் அடிக்கடிச் சந்திக்கிறாங்க. 2 பேரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்றாங்க...” என்று அழுகிறாள். லோலாவைக் கொல்லும் பிளான்தான் அது என்பதை வால்டர் உணர்கிறான். மொத்தப் பிரச்சினைக்கும் முடிவு கட்ட, பிலிஸை இரவு 11 மணிக்கு சந்திக்கிறான் வால்டர்.

அப்போது லோலாவை அவளது காதலனை வைத்தே பிலிஸ் கொல்லப் போவதாகச் சொல்கிறாள். வால்டர், “உன் கணவரைக் கொல்ல, என்னைப் பயன்படுத்துன மாதிரி, லோலாவைக் கொன்ன பிறகு ஸ்கெட்டிய கொல்ல, வேற ஆள அனுப்புவ. அடுத்து என்னையும்...” என்று சொல்லி முடிக்குமுன் பிலிஸ், துப்பாக்கியால் வால்டரை சுடுகிறாள்.

“சரியா சுடல. மறுபடி சுடு” என்று அவளை நெருங்கும் வால்டர், பொட்டென்று அவளைச் சுட்டு ‘குட்பை’ சொல்கிறான். இரட்டிப்பு பணத்துக்கு ஆசைப்பட்டவளை, இரண்டு துப்பாக்கி குண்டுகளுடன் வழியனுப்புகிறான் வால்டர். குரல் பதிவுக் கருவியில் வால்டர் பேசி முடிக்கும்போது அனைத்தையும் கேட்டபடி நின்றிருக்கிறார் கீஸ்.

“உன் கேஸை ரொம்ப ஈசியா முடிச்சிட்டேன். என்னை வெளிய விடு. நான் பார்டரைத் தாண்டிடுவேன்” என்று வால்டர் சொல்ல, “கேட்டைக்கூட தாண்ட முடியாது” அவர் சொன்னதும் தடுமாறி விழுகிறான் வால்டர். ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்கிறார் கீஸ். எப்போதும் வால்டர்தான் அவருக்கு சிகார் பற்ற வைப்பான். இம்முறை 11 வருட நட்புக்கு நெருப்பு வைக்கிறார் கீஸ்.

முதல் காட்சியிலேயே, கொலை செய்ததாக வால்டர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாலும் இறுதிவரை என்ன நடந்தது என்று யூகிக்க முடியாத அளவில் திரைக்கதை இருக்கிறது. ஜேம்ஸ் எம் கெய்னின் நாவலுக்கு பில்லி வைல்டரும், ரேமண்ட் சாண்ட்லரும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.

ஜான் சீட்ஸின் ஒளிப்பதிவு பெரும் பலம். வீடு, தெரு, அலுவலகம் எல்லா இடத்தி லும் கதாபாத்திரங்களின் நிழல்களே நடித்திருக்கின்றன. இருளும், ஒளியும் கலந்த ஷாட்கள் கதாபாத்திரங்களின் இரட்டை முகங்களை வெளிப்படுத்துகின்றன.

டோன் ஹாரிசனின் எடிட்டிங் மேற்பார்வை 2 காலங்களில் நடக்கும் கதையை குழப்ப மில்லாமல் கடத்துகின்றன. ஏறக்குறைய மொத்தக் கதையுமே ஃபிளாஷ்பேக்தான் என்றாலும் ‘ஷார்ப் எடிட்டிங்’ , கதையின் சஸ்பென்ஸை கடைசிவரை காப்பாற்றுகிறது. மிக்லோஸ் ரோசாவின் இசை, கதையின் இருள் நிறைந்த உலகத்தை வெளிக் கொணர்கிறது.

ஏதோ நடக்கப் போகிறது என்ற பதற்றத்தைப் படம் முழுவதும் ஏற்படுத்துகிறது. ஃப்ரெட் மெக்முரே , வால்டர் கதாபாத்திரத்தின் மூலம் அமைதியான இன்சூரன்ஸ் ஏஜென்டாகவும், காதலிக்காக கொலைகாரனாக மாறுவதையும் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆபத்தான அல்லது ஆண்களை ஈர்க்கும் கவர்ச்சியான ‘ஃபெம் ஃபேடால்’ (FEMME FATALE) கதாபாத்திரத்துக்கு சரியான உதாரணம் பிலிஸ் கேரக்டர்.

அழகையும், ஆபத்தையும் ஒருங்கே காட்டுகிறார், அக்கதாபாத்திரத்தில் நடித்த பார்பரா ஸ்டான்விக். இறுதிக் காட்சியில் கோபத்தில் வால்டரைச் சுட்டுவிட்டாலும் மேலும் சுடமுடியாமல் தவிப்பது பரிதாபத்தை வரவழைக்கிறது. பார்டன் கீஸாக நடித்திருக்கும் எட்வர்ட் ஜி ராபின்சன் ‘தற்கொலை செய்பவன் எங்கு வேண்டுமானாலும் செய்வான்’ என்று அடுக்குமொழியில் ஒரேமூச்சில் பேசும் நீள வசனம் நம்மை பெருமூச்சுவிட வைக்கிறது.

டிராக்டர் எரிந்துபோய் இன்சூரன்ஸ் கோரி வந்தவனை கேள்விகளால் அவர் திணறடிக்கும் போதே வால்டர், பிலிஸின் திட்டம் நிறைவேறாது என்பதை உணர்த்தி விடுகிறார்கள். திரைக்கதை, இயக்கம் பல ஆஸ்கர் விருதுகளை வென்ற பில்லி வைல்டர்.

‘ஃபிலிம் நாய்ர்’ (FILM NOIR) பாணியின் ஆரம்பகாலப் படமான இதில், கதை சொல்லும் முறை எவ்வளவு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார் அட்டகாசமாக. இன்சூரன்ஸ் எடுப்பவர்களும், கொடுப்பவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

‘டபுள் இண்டமினிட்டி’ - 1944: பேராசையால் கொலையை விபத்தாக்கும் மனைவி | ஹாலிவுட் மேட்னி 9
‘ஹைநூன்’ - 1952: நீதிக்காக போராடுபவனை கைவிடும் மக்கள் - ஹாலிவுட் மேட்னி 8

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in