

ஒரு கொலைக் குற்ற வழக்கில் சந்தேக நபரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பு சந்தேக நபரிடமே ஒப்படைக்கப்படுவதுதான் ‘த பிக் கிளாக்’ (THE BIG CLOCK 1948) படத்தின் ஒருவரிக் கதை. நியூயார்க்கில், ஜனோத் பப்ளிகேஷன்ஸ் கட்டிடத்தில் காவலர்கள் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்குள்ள பிரம்மாண்டமான ‘த பிக் கிளாக்’ கடிகாரத்தின் உள்ளே, ‘க்ரைம்வேய்ஸ்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஸ்ட்ரவுட் ஒளிந்திருக்கிறார். அவரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடிகார எந்திரங்களுக்குப் பின்னால் நின்றபடி, ‘36 மணி நேரத்துக்கு முன்பு வரை நான் நல்ல குடும்பத் தலைவன், இப்போது தேடப்படும் குற்றவாளி. எப்படி இந்த எலிப்பொறியில் சிக்கினேன்?’ என்ற அவரது மனக்குரலுடன் கதை பின்னோக்கிச் செல்கிறது.
நிறுவனத்தின் சர்வாதிகார முதலாளி ஏர்ல் ஜனோத், பத்திரிகையின் விற்பனைச் சரிவை சரிக்கட்ட ஆலோசனை நடத்துகிறார். அங்கு ஜார்ஜ் முன்வைத்த முக்கிய ஆலோசனை ஜனோத்துக்குப் பிடித்துப்போக, அதை உடனே தொடங்க உத்தரவிடுகிறார்.
ஆனால் ஜார்ஜோ, நீண்டநாளாகத் திட்டமிட்டிருந்த தன் தேன்நிலவுப் பயணத்துக்காக, வெஸ்ட் வர்ஜீனியா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறான். அவனது விடுமுறையை ரத்து செய்து அந்த க்ரைம் ஸ்டோரியைத் தொடரச் சொல்கிறார், ஜனோத்.
பலமுறை தேனிலவைத் தள்ளிப் போட்ட ஜார்ஜ், இம்முறை முதலாளியை எதிர்த்துப் பேசுகிறான். வேறு எங்கும் வேலை கிடைக்காதபடி செய்வதாக மிரட்டி, ஜார்ஜை வேலையை விட்டு நீக்குகிறார் ஜனோத்.
விரக்தியில் பாருக்கு செல்லும் ஜார்ஜ், ஜனோத் மீது கடும் கோபத்தில் இருக்கும் அவருடைய ரகசியக் காதலி பவுலின் யார்க்கைச் சந்திக்கிறான். இருவரும் மது அருந்திக்கொண்டே ஊர் சுற்றுகிறார்கள்.
மனைவியுடன் செல்ல வேண்டிய ரயிலைத் தவறவிடும் ஜார்ஜ், நள்ளிரவில் பவுலின் வீட்டில் போதையில் மயங்குகிறான். அப்போது ஜனோத் வருவதை அறிந்து, பவுலின் அவனை உசுப்பிவிட, தன் தொப்பியை மறந்துவிட்டு இருண்ட படிக்கட்டில் இறங்கும்போது மேலே ஏறி வரும் ஜனோத்தை அரைகுறையாகப் பார்க்கிறான்.
அறைக்குள் நுழையும் ஜனோத், பவுலினை சந்தேகப்பட்டு, வாக்குவாதம் செய்கிறார். பிறகு அவளை கொடூரமாகக் கொலை செய்கிறார். பின்னர் தன் விசுவாசி ஸ்டீவ் ஹேகனை அழைக்க, அவன் சாதுர்யமாக யோசித்து பவுலினுடன் கடைசியாகச் சுற்றிய அந்த ‘அறியப்படாத மனிதன்’ மேல் பழியைப் போடத் திட்டமிடுகிறான்.
அடுத்த நாள், ஜனோத்தும் ஹேகனும் ஹனிமூனில் இருக்கும் ஜார்ஜை மீண்டும் வேலைக்கு அழைத்து, அறியப்படாத குற்றவாளியைத் தேடும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். அவர்கள் தேடுவது தன்னைத்தான் என்பதை அறியும் ஜார்ஜ், தன் ‘க்ரைம் மேகசின்’ குழுவை வைத்து அந்தப் போலித் தேடுதலைத் தொடங்குகிறான்.
பவுலின் சுற்றிய இடங்களுக்குச் சென்று விசாரிக்கிறது குழு. அலுவலகக் கரும்பலகையில் ஆதாரங்கள் ஒவ்வொன்றாகக் குவிகின்றன. ஜார்ஜ் சென்ற பழைய கலைப் பொருட்கள் கடை, குடித்த விசித்திரமான மது, பெண் ஓவியர் லூயிஸ் பேட்டர்சனின் சாட்சியம் என ஜார்ஜின் அடையாளங்கள் எழுதப்படுகின்றன.
அந்த ‘அறியப்படாத மனிதன்’ கட்டிடத்துக்குள்தான் இருக்கிறான் என்பதை நேரில் பார்த்த சாட்சிகள் மூலம் அறியும் ஹேகன், காவலாளிகளுக்கு அவனை கண்டதும் சுட ஆணை பிறப்பிக்கிறான்.
தப்பிக்க வழியில்லாமல் பிரம்மாண்டமான பிக் கிளாக் கடிகார அறைக்குள் ஒளிந்து கொள்கிறான் ஜார்ஜ். கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஜார்ஜ் எப்படி தப்பித்தான்? ஜனோத்தை எப்படி மாட்ட வைத்தான் என்பதை டிக், டிக் துடிப்புடன் சொல்லியிருப்பதுதான் இப்படத்தின் கதை.
கென்னத் ஃபியரிங்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, ஜானதன் லட்டிமரின் திரைக்கதையில், ஜான் ஃபாரோ இயக்கிய இந்த ஃபிலிம் நோயர், உலக சினிமாவின் சிறந்த ‘இன்வெர்ட்டட் க்ரைம் த்ரில்லர்’ படைப்புகளில் ஒன்று.
கடிகாரத்தின் அத்தனை பகுதிகளையும் வில்லன் ஜனோத்தின் கூர்மையான வசனங்களிலும், திரைக்கதையின் தனித்துவமான நேரக் கணக்கிலும் (டைம் நேரேட்டிவ்) இணைத்து, அந்தப் பிரம்மாண்ட கிளைமாக்ஸ் செட்டிலும் பயன்படுத்தியிருக்கும் உத்தி வியக்க வைக்கிறது. 1940-களின் அதிவேக திரைக்கதைகளில் ஒன்றாக இன்றும் இது போற்றப்படுகிறது.
ஒளிப்பதிவு - ஜான் எஃப். சீட்ஸ்: அசாத்தியமான கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவில் நவீன கார்ப்பரேட் செட்டுக்குள் ஜெர்மன் ‘எக்ஸ்பிரஷனிச’ பாணியிலான நிழல்களையும், கடிகார முட்களுக்கு நடுவே பாய்ந்து வரும் ஒளியையும் பயன்படுத்தி ஒரு மரணப் பொறியை கண்முன்னே நிறுத்தியுள்ளார்.
படத்தொகுப்பு மேற்பார்வை - ஈடா வாரன்: கதையின் தொடக்க நள்ளிரவுத் துரத்தலில் தொடங்கி, 36 மணி நேரப் பின்னோக்கிய நகர்வு, மற்றும் அலுவலகக் கரும்பலகையில் ஆதாரங்கள் குவியும் காட்சிகள் வரை, கடிகார முட்களின் வேகத்துக்கு ஏற்ப காட்சிகளை வெட்டி இணைத்து, நரம்புகளை முறுக்கேற்றும் அசாத்தியமான திரைக்கதை ஓட்டத்தைக் கண்முன்னே நிறுத்தியுள்ளார்.
இசை - விக்டர் யங்: கடிகாரத்தின் தாளக் கதிக்கு இணையாகப் பின்னணி இசையைக் கூட்டி, மரண பயத்தையும் காலத்தின் நெருக்கத்தையும் காதுகளின் வழியே கடத்தியுள்ளார்.
ரே மில்லண்ட்: தன் திறமையே தனக்கு வினையாக மாறும் இடங்களிலும், கடிகாரத்துக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகளிலும் பயத்தையும் பதற்றத்தையும் தன் உடல்மொழியால் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சார்லஸ் லாட்டன்: அதீத பொறாமையால் செய்யும் நள்ளிரவுக் கொலை, துரோகம், இறுதியாக லிஃப்ட் ஷாப்ட்டுக்குள் மரண பயத்துடன் கதறும் கிளைமாக்ஸ் வரை அக்மார்க் சர்வாதிகார கார்ப்பரேட் வில்லனாக மிரட்டியுள்ளார்.
ஜார்ஜ் மேக்ரெடி மற்றும் மவுரீன் ஓ’சுல்லிவன்: முதலாளியின் துரோகத்தைக் கண்டு உண்மையை வெறிகொண்டு உடைக்கும் ஹேகனாக, ஜார்ஜ் மேக்ரெடியும், கணவனின் நிலையைப் புரிந்து கொண்டு நடக்கும் ஜார்ஜெட்டாக மவுரீன் ஓ’சுல்லிவனும் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
“கார்ப்பரேட் அதிகாரம் உண்மையை வளைத்துக் காட்டலாம்; ஆனால் அதை வெல்ல முடியாது” என்ற கருத்தை வலிமையாகப் பதிவு செய்யும் ‘த பிக் கிளாக்’ ஒரு திரைக்கதை பார்வையாளரை முதல் காட்சியில் இருந்து கடைசி வரை எப்படி இழுத்துச் செல்ல வேண்டும்
என்பதற்கான ஆகச்சிறந்த பாடம் இது. திரைக்கதை ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத படைப்பு.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com