

லாஸ் ஏஞ்சலஸ்: டாம் ஹாலண்ட் நடிப்பில் வெளியான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் திரையரங்குகளில் வெளியான மூன்றே வாரங்களில் உலக அளவில் 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16,800 கோடி) வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில் வெளியான இப்படம், வட அமெரிக்காவில் 785 மில்லியன் டாலர்களையும், மற்ற நாடுகளில் 1.23 பில்லியன் டாலர்களையும் ஈட்டி, உலகளவில் இதுவரை மொத்தம் 2.022 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் மூலம் உலக சினிமா வரலாற்றிலேயே 2 பில்லியன் டாலர் வசூல் சாதனையை எட்டிய 8-வது திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. மேலும், 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்துக்கு அடுத்தபடியாக மிகக் குறைந்த நாட்களில் இச்சாதனையை எட்டிய 2-வது படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.
அவதார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், அவதார் 2, டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ஆகிய படங்களின் வரிசையில் தற்போது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' இணைந்துள்ளது.
அத்துடன், 2 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த முதல் தனி சூப்பர் ஹீரோ திரைப்படம், மிக அதிக வசூல் செய்த ஸ்பைடர் மேன் படம் மற்றும் இந்தியப் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் போன்ற பல புதிய சாதனைகளையும் இப்படம் எட்டியுள்ளது.