

செய்யாத கொலைக்குப் பயந்து ஓடும் ஒரு பாலியல் தொழிலாளி, செய்த கொலைக்காக தைரியமாகத் தூக்கு மேடையை எதிர்கொள்வதே ‘சேஃப் இன் ஹெல்’ (SAFE IN HELL -1931) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் ஒரு வீட்டில் ஒலிக்கும் தொலைபேசியில் பேசும் கில்டா என்ற இளம் பெண், கிளேபிரிட்ஜ் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்கிறாள். அங்கே அவளது வாழ்வின் சீரழிவுக்குக் காரணமான பியட் வான்சால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஓர் ஆயுதத்தால் தாக்குகிறாள். அவன் சுருண்டு விழுகிறான். அவள் வெளியேறும்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள திரைச்சீலையில் தீப்பற்றி அறை முழுவதும் பரவுகிறது.
மறுநாள், அந்தக் கட்டிடம் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டதாகவும், வான்சால் இறந்துவிட்டதாகவும் செய்தி பரவுகிறது. காவல்துறையினர் தன்னைத் தேடுவார்கள் என கில்டா பயப்படுகிறாள். அப்போது நீண்டநாள் கழித்து அவளைத் தேடிவரும் காதலன் மாலுமி கார்லிடம், நடந்த உண்மையைக் கூறுகிறாள். கடந்த காலத்தில் அவளைத் தவிக்கவிட்டு, தான் சென்றதே அவளது இந்த நிலைமைக்கு காரணம் எனக் கூறும் கார்ல், அவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான்.
சட்டத்தில் இருந்து காப்பாற்ற, கில்டாவை குற்றவாளிகளை நாடுகடத்த முடியாத கரீபியன் தீவு ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறான். அங்குள்ள தேவாலயத்தில் மோதிரம் மாற்றித் திருமணமும் செய்துகொள்கிறான். தன் கப்பல் பயணம் முடியும் வரை வேறு எந்த ஆண்களுக்கும் இடம்கொடுக்கக் கூடாது என சத்தியம் வாங்குகிறான். ஒரு விடுதியில் அவளைத் தங்கவைத்து, ஒவ்வொரு துறைமுகத்தில் இருந்தும் கடிதம் எழுதுவதாகக் கூறிவிட்டுச் செல்கிறான்.
அங்கு தங்கியிருக்கும் தப்பியோடிய குற்றவாளிகள் சிலர் கில்டாவுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களைக் கொடுத்து அவளை வசப்படுத்த முற்படுகிறார்கள். அவர்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வது அவளுக்குப் பெரும் போராட்டமாகிறது. இந்தச் சூழ்நிலையில், சிறை அதிகாரியான புருனோ அவளது பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கியைக் கொடுக்கிறான். அவளுக்கு உதவுவதுபோல் நாடகமாடும் அவன், கார்ல் அனுப்பும் கடிதங்கள் அனைத்தையும் ரகசியமாகத் தடுத்துக் கைப்பற்றிவிடுகிறான்.
கார்லிடமிருந்து தகவலேதும் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கில்டா. ஒருநாள் இறந்ததாக நம்பப்பட்ட வான்சால், தீவுக்கு வந்து இறங்குகிறான். அவன் உயிரோடு இருப்பதைக்கண்ட கில்டா, அவனை, தான் கொல்லவில்லை என்பதை உணர்கிறாள். இன்சூரன்ஸ் பணத்தை முழுமையாக அபகரிக்கவே தலைமறைவாக இருந்ததாக வான்சால் பெருமையுடன் கூறுகிறான். அவன் உயிரோடு இருக்கும் தகவலை ஒரு கடிதம்மூலம் கார்லுக்கு அனுப்புகிறாள் கில்டா. அவளிடம் எல்லைமீறி நடக்க முயன்ற வான்சாலை, புருனோ கொடுத்த துப்பாக்கியால் சுடுகிறாள். சம்பவ இடத்திலேயே அவன் இறக்கிறான்.
வான்சால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தீவின் நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை தொடங்குகிறது. வழக்கறிஞர் ஜோன்ஸ் அவள் தற்காப்புக்காகவே சுட்டதாக வாதிட, கில்டா அந்த வழக்கிலிருந்து தப்பிக்கும் சூழல் உருவாகிறது. ஆனால் புருனோ, வெளிநாட்டினர் துப்பாக்கி வைத்திருக்கத் தடை உள்ளதைச் சுட்டிக்காட்டி அவளைத் தனக்கு அடிபணியுமாறு மிரட்டுகிறான்.
தன் கணவனுக்கு கொடுத்த வாக்கு மீறப்படும் நிலைமையைக் கண்டு நிலைகுலைந்து போகிறாள் கில்டா. பின்னர், திட்டமிட்டு வான்சாலை கொன்றதாகவும், தானே குற்றவாளி என்றும் நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறாள்.
இதற்கிடையில் கில்டாவைத் தேடிவரும் கார்ல், தனக்கு கரையிலேயே வேலை கிடைத்திருப்பதாகவும் விரைவில் சேர்த்து வாழ்வோம்; நியூ ஆர்லியன்ஸ் வந்து விடு என்று மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுச் செல்கிறான். நடந்த உண்மைகளை அவனிடம் மறைக்கும் கில்டா, தான் இறந்தபிறகு அவனுக்கு உண்மையை விளக்குமாறு வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்கிறாள். இறுதியாக, சமூகத்தின் முன் தன் கண்ணியத்தை காப்பாற்றுவதற்காக, துணிந்து தூக்குமேடையை நோக்கி நடந்து செல்வதுடன் படம் நிறைவடைகிறது.
ஹூஸ்டன் பிராஞ்ச் எழுதிய மூல நாடகத்தைத் தழுவி, ஜோசப் ஜாக்சன் மற்றும் மாட் ஃபல்டன் திரைக்கதையையும் உரையாடல்களையும் அமைத்துள்ளனர். ஒரு பெண்ணின் தனிப்பட்ட துயரத்தை மட்டும் சொல்லாமல், அவள் வாழ நேர்ந்த சமூகத்தின் இருண்ட முகத்தையும் கதைக்குள் கொண்டு வந்திருப்பது தான் இந்தத் திரைக்கதையின் சிறப்பு. ஹாலிவுட்டின் பொற்காலத்தில் தனது தனித்துவமான இயக்கத்தால் முத்திரை பதித்த வில்லியம் ஏ.வெல்மேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு: சிட்னி ஹிகாக்ஸின் கருப்பு–வெள்ளை ஒளிப்பதிவு, கில்டாவின் தனிமையையும் அச்சத்தையும் காட்சிகளின் வழியே உணர்த்துகிறது. கதவு, ஜன்னல், இருள், மரக்கட்டமைப்புகள் என ஒவ்வொரு பிரேமும் அவளைச் சிறைக்குள் அடைத்திருப்பது போன்ற உணர்வை உருவாக்குகின்றன.
படத்தொகுப்பு: ஓவன் மார்க்ஸின் படத்தொகுப்பு கில்டாவின் தூக்கு மேடை வரையிலான பயணத்தை வேகமாகவும் நேர்த்தியாகவும் நகர்த்துகிறது.
இசை: லியோ எஃப். ஃபோர்ப்ஸ்டீன் தலைமையிலான விதாபோன் ஆர்கெஸ்ட்ரா, ஆரம்பகால ஒலிப்படச் சூழலுக்கு ஏற்றவாறு காட்சிகளின் மனநிலைக்குத் துணைநிற்கிறது. நினா மே மெக்கினி பாடும் “When It’s Sleepy Time Down South” பாடல் இதன் குறிப்பிடத்தக்க இசைத் தருணமாக அமைகிறது.
டோரதி மெக்கெல்: கில்டா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவரே இப்படத்தின் மிகப்பெரிய பலமும் இதயமும் ஆவார். பயம், கோபம், காதல், தனிமை மற்றும் கண்ணியம் போன்ற பல்வேறு உணர்ச்சிகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பிரி-கோட் (Pre-Code) காலத்து நாயகிகளின் சுதந்திரமான மற்றும் தீவிரமான வடிவத்துக்குச் சிறந்த உதாரணம்.
டொனால்டு குக்: கில்டாவின் கடந்த காலத்தை முழுமையாக அறிந்தும், அவள் மீதான காதலால் அவளை அப்படியே ஏற்றுக்கொள்ள முன்வரும் கதாபாத்திரத்தில் நேசத்தையும் மனிதநேயத்தையும் பிரதிபலிக்கிறார்.
நினா மே மெக்கினி & கிளாரன்ஸ் மியூஸ்: அக்கால ஹாலிவுட்டில் கறுப்பினக் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் stereotype-ஆக சித்தரிக்கப்பட்ட நிலையில், இப்படத்தில் அவர்கள் நேர்மையான, மனிதநேயமிக்க கதாபாத்திரங்களில் இடம்பெற்றனர்.
‘Safe in Hell’ என்ற பெயரிலேயே படத்தின் முழு முரணும் ஒளிந்திருக்கிறது. கில்டா தப்பிச் செல்லும் இடமெல்லாம் அவளுக்கு நரகமாகவே மாறுகிறது. அவளுக்கு எங்குமே பாதுகாப்பில்லை; படத்தின் பெரும்பகுதி ஒரே களத்தில் நடந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் அந்த இடம் வெவ்வேறு உளவியல் பரிமாணங்களைப் பெறுகிறது. ஒரு சிறிய அறையையும், ஒரு ஹோட்டலையும் மட்டுமே வைத்து எப்படிச் சிறந்த பதற்றத்தையும் நாடகத்தையும் உருவாக்கலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கிறது.
பெண்ணின் மாண்பு, கணவனுக்கு அளித்த வாக்கு, கண்ணியம் ஆகியவற்றுக்காக உயிரையே துறப்பது போன்ற காட்சிகளால் தமிழ்த் திரைப்படக் கதைகளை நினைவூட்டும் இந்த ஹாலிவுட் படத்தை, சிறந்த சினிமா அனுபவமாக ரசிக்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)