

தவறான சகவாசிகளோடு சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வாழ்ந்த ஒரு பெண் அதே சகவாசத்தால் மரண தண்டனைக் கைதியாக சிறைக்கு அனுப்பப்படுவதே ‘ஐ வான்ட் டு லிவ்’ (I WANT TO LIVE-1958) படத்தின் ஒருவரிக் கதை.
ஒரு இரவு விடுதியில் படம் தொடங்குகிறது. பாலியல் தொழிலாளியாக அறிமுகமாகிறாள் பார்பரா. ஒரு வாடிக்கையாளரின் குடும்பப் புகைப்படத்தைப் பார்க்கும் அவள், “உன் குடும்பத்தை இழந்து விடாதே” என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். அந்த நேரத்தில் அங்கே வரும் போலீஸ் அவளைக் கைது செய்கிறது.
தண்டனை முடிந்து வெளியே வரும் பார்பராவும் அவளது தோழி பெக்கும், மாலுமிகளுடன் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள். பிறகு, தனது சகாக்களான பெர்கின்ஸ் மற்றும் சான்டோவுக்காக போலி காசோலைகளை மாற்றிக் கொடுக்கும் பார்பரா, சூதாட்டத்திலும் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்கிறாள்.
சூதாட்டக் கணக்கை முடித்து, பணம் வாங்கிய பார்பரா, ஹாங் கிரஹாம் என்பவனைத் திருமணம் செய்துகொண்டு சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்குகிறாள்.
அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால், அவளது கணவன் போதை அடிமை. அவன் குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டுவதற்காக, அவளிடம் இருக்கும் கடைசி 10 டாலரையும் கேட்டுத் தொந்தரவு செய்ய, ஆத்திரமடையும் பார்பரா அவனை வீட்டை விட்டு விரட்டுகிறாள்.
வறுமையில் தவிக்கும் பார்பரா, மீண்டும் தனது கூட்டாளிகளான பெர்கின்ஸ் மற்றும் சான்டோ ஆகியோரைச் சந்திக்கிறாள். அதே நேரத்தில், புரூஸ் கிங் என்பவன் மாபெல் மோனஹான் என்ற வயதான பெண்ணைக் கொலை செய்த வழக்கில் போலீஸாரிடம் சிக்குகிறான்.
முன்பு பார்பராவிடம் தவறுதலாக நடக்க முயன்று அவமானப்படுத்தப்பட்ட அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்பராவைப் பின்தொடரும் போலீஸார், அவளையும் அவளது கூட்டாளிகளையும் கைது செய்கிறார்கள்.
எட் மாண்ட்கோமரி என்ற பத்திரிகையாளர், பார்பராவை கொடூரமானவளாகச் சித்தரித்து செய்திகள் வெளியிடுகிறார். நீதிமன்ற விசாரணையின் போது, புரூஸ் கிங் “பார்பராதான் அந்த வயதான பெண்ணைத் துப்பாக்கியால் அடித்துக் கொன்றாள்” என்று பழிசுமத்துகிறான். பார்பரா அதிர்ச்சியடைகிறாள். மற்ற சகாக்களும் அமைதியாகிறார்கள்.
தப்பிக்க வழியற்றநிலையில், சிறையில் இருக்கும் ரீட்டா என்ற சக கைதியின் மூலம் ‘பென்’ என்பவனை விலைபேசி, கொலை நடந்த நேரத்தில் அவன் தன்னுடன் இருந்ததாகப் பொய் சாட்சி சொல்ல வைக்கப் பார்பரா முயற்சிக்கிறாள்.
ஆனால், அந்த ‘பென்’ மாறுவேடமிட்ட ஒரு போலீஸ் அதிகாரி! அவன் அவர்களது பேச்சை ரகசியமாகப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறான். இதன் மூலம் பார்பரா பொய் சாட்சி சொல்ல முயன்றது அம்பலமாகி, அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
பார்பரா மகளிர் சிறைக்கு மாற்றப்படுகிறாள். அங்கு கார்ல் பால்ம்பெர்க் என்ற உளவியலாளர் அவளைச் சந்தித்துப் பேசுகிறார். “பார்பரா வன்முறை செய்யும் குணம் கொண்டவள் அல்ல; மேலும், கொலையாளி வலது கையால் தாக்கியுள்ள நிலையில், பார்பரா இடதுகைப் பழக்கம் உடையவள்” என்பதை கண்டறிகிறார்.
இதன் மூலம் பார்பாரா குற்றமற்றவள் என்பதை தெரிந்து கொண்ட மாண்ட்கோமரி அவளுக்கு ஆதரவாக எழுதுகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக பார்பராவின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது. சிறையில் அவளது தோழி பெக் குழந்தையைக் கொண்டு வந்து காட்டுகிறாள். குழந்தைக்காக உயிர் வாழத் துடிக்கும் பார்பராவின் ஆசை நிறைவேறவில்லை.
தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக, சான் குவென்டின் சிறைக்கு மாற்றப்படுகிறாள் பார்பரா. மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாளில், தண்டனை நேரம் பலமுறை தள்ளி வைக்கப்படுகிறது.
மீண்டும் மீண்டும் தாமதமாவதால், மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். பாதிரியார் ஒருவரிடம் தனது பாவங்களை அறிக்கை செய்யும் அவள், தான் கொலை செய்யவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறாள்.
இறுதியாக அவள் விஷவாயு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். மக்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்க, தன் கண்களில் ஒரு ‘ஸ்லீப் மாஸ்க்’ அணிந்துகொள்கிறாள். அறையினுள் விஷவாயு பரவ, அவள் துடிதுடித்து மரணமடைகிறாள்.
பத்திரிகையாளர் மாண்ட்கோமரி அவருக்கு நன்றி தெரிவித்து பார்பரா எழுதிக் கொடுத்தனுப்பிய கடைசிக் கடிதத்தை, உணர்ச்சிவசப்பட்டுப் படிக்கிறார்.
ஒரு பெண் உண்மையில் கொலைகாரியா, இல்லையா என்ற கேள்விக்கு உறுதியான பதிலைத் தராமல், அவள் மரண தண்டனையை எதிர்கொண்ட விதத்தை மட்டும் நம் கண்முன் நிறுத்திவிட்டு திரைப்படம் முடிகிறது.
புலிட்சர் பரிசு வென்ற எட்வர்ட் மாண்ட்கோமரி எழுதிய கட்டுரைகள், நீதிமன்றப் பதிவுகள், விசாரணை அறிக்கைகள் மற்றும் பார்பரா கிரஹாமின் கடிதங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உண்மைக் கதை இது. நெல்சன் கிடிங் மற்றும் டான் மான்கிவிச் இணைந்து திரைக்கதையை எழுத, வால்டர் வேங்கர் தயாரித்திருக்கிறார்.
மரண தண்டனையை எதிர்கொள்ளும் மனித உயிரின் கடைசி நிமிடங்களையும், அந்த உயிர் தப்பிக்க வேண்டும் என்ற பேராசையையும் பார்வையாளருக்கு மிக அருகில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் ராபர்ட் வைஸ்.
ஒளிப்பதிவு: கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவில், இருட்டறைகள், சிறைக்கம்பிகள், நீதிமன்ற இறுக்கம் ஆகியவற்றை ‘ஹை-கான்ட்ராஸ்ட்’ வெளிச்சத்தில் மிகச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் லியோனல் லிண்டன்.
படத்தொகுப்பு: ஓர் உயிரைக் கொல்வதற்காக தயாராகும் சிறைச்சாலையின் இறுதி 45 நிமிடங்களை தொகுத்தவிதத்தில் திணற வைக்கும் டென்ஷனை உருவாக்குகிறார் படத்தொகுப்பாளர் வில்லியம் ஹார்ன்பெக்.
இசை: ஜான் மாண்டேலின் ஜாஸ் இசை, ஒரு கதாபாத்திரமாகவே இதில் பயணிக்கிறது. கெர்ரி முல்லிகன் மற்றும் ஷெல்லி மான் உட்பட ஜாஸ் இசைக் கலைஞர்களின் பெயர்கள் டைட்டில் கார்டில் இடம் பெற்றிருக்கின்றன.
சூசன் ஹேவர்ட்: பார்பரா கிரஹாம் கதாபாத்திரத்தில் கோபம், திமிர், ஏமாற்றம், தாய்மை மற்றும் இறுதி நிமிடங்களில் இறப்பை நினைத்துப் பயப்படும் கையறு நிலை என அனைத்தையும் தனது கண்களிலும் உடல் மொழியிலும் கடத்தியதன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
பத்திரிகையாளர் எட்மாண்ட்கோமரி, உளவியலாளர் கார்ல் போன்ற துணை கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கியிருந்தனர். 1950-களில் அமெரிக்கச் சமூகத்தில் மரண தண்டனை குறித்த மிகப்பெரிய அதிர்வலையையும் விவாதத்தையும் இப்படம் கிளப்பியது.
பத்திரிகைகள் தங்கள் வியாபாரத்துக்காக ஒருவரை எப்படி முன்கூட்டியே குற்றவாளியாகச் சித்தரிக்கின்றன என்பதையும் அது நீதிமன்றத் தீர்ப்பை எப்படி மறைமுகமாகப் பாதிக்கிறது என்பதையும் இப்படம் தோலுரித்துக் காட்டியது.
ஒரு குற்றவாளி அல்லது நிரபராதியின் உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கு இருக்கிறதா? மரண தண்டனை என்ற பெயரில் நடக்கும் சட்டபூர்வமான கொலை எவ்வளவு கொடூரமானது என்பதை ஆழமாகப் பதிவு செய்திருக்கும் இப்படத்தை இதயம் கனக்கப் பார்க்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
ramkumaraundipatty@gmail.com