

ஜாக்கி சான், கிறிஸ் டக்கர் நடித்து 1998-ம் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம், ‘ரஷ் ஹவர்’. பிரட்ராட்னர் இயக்கிய ஹாலிவுட் அதிரடி-காமெடி திரைப்படமான இதில், ஹாங்காங் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் லீயாக ஜாக்கி சானும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் அதிகாரி ஜேம்ஸ் கார்ட்டராக, கிறிஸ் டக்கரும் இணைந்து நடித்தனர். இப்படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து இதன் 2-ம் பாகம் 2001-ம் ஆண்டு வெளியானது. இதுவும் வெற்றிபெற்றதால் இதன் 3-ம் பாகம் 2007ம் ஆண்டு வெளியானது.
உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 4-வது பாகம் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் இதன் இயக்குநர் பிரட் ராட்னர் மீது 6 பெண்கள் மீடு-வில் பாலியல் புகார் கூறினார். இதனால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அவருடனான உறவை முறித்துக் கொண்டது. பாலியல் புகாரை அடுத்து ‘ரஷ் ஹவர்’ படத்தின் அடுத்த பாகம் உருவாவது தள்ளிப்போனது.
இந்நிலையில் பிரட் ராட்னர் சார்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டதை அடுத்து இப்படத்தின் 4-ம் பாகம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. பிரட் ராட்னர் இயக்கும் இப்படத்தை பாரமவுண்ட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.