

திரைத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர். தற்போது செயற்கை தொழில் நுட்பம் திரைத்துறையில் அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்கர் அமைப்பு விதிமுறைகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, நடிப்பு மற்றும் எழுத்துப் பிரிவுகளில் மனிதர்களின் நேரடிப் பங்களிப்பு மட்டுமே அங்கீகரிக்கப்படும். மனிதர்களால் நடிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட பாத்திரங்களுக்கு மட்டுமே நடிப்புப் பிரிவில் விருதுகளுக்குப் பரிசீலிக்கப்படும். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கதாபாத்திரங்களோ அல்லது திரைக் கதைகளோ விருதுகளுக்குத் தகுதி பெறாது.
இதுவரை ஒரு நடிகர் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஒரே ஒரு முறை மட்டுமே பரிந்துரைக்கப்பட முடியும் என்ற விதி இருந்தது. இனி, ஒரு நடிகர் ஒரு ஆண்டில் இரு வேறு படங்களில் சிறப்பாக நடித்திருந்தால், அவரை ஒரே பிரிவில் 2 இடங்களுக்குப் பரிந்துரைக்கலாம். சர்வதேச திரைப்படப் பிரிவிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் ஒரு படத்தை மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் உலகின் மிக முக்கியமான, கான், பெர்லின், வெனிஸ் உள்பட 6 சர்வதேச திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை வெல்லும் படங்கள், அந்த நாட்டின் அதிகாரப்பூர்வப் பரிந்துரை இல்லாமலேயே ஆஸ்கருக்கு நேரடியாகத் தகுதி பெறும். அடுத்த ஆண்டு மார்ச் 14-ல் நடைபெறும் 99-வது ஆஸ்கர் விழாவில் இருந்து இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.