

புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகராக ராபர்ட் பேட்டின்சன் தேர்வாகியுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் விரும்பப்படும் கேரக்டராக இருப்பது ஜேம்ஸ்பாண்ட். உலகம் முழுவதும் இந்த 007 கதாபாத்திரத்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை சீன் கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன், டேனியல் கிரேக் ஆகியோர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டேனியல் கிரேக், தொடர்ந்து 5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்தார். பாண்ட் பட வரிசையின் 25-வது படமான ‘நோ டைம் டு டை’, கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது.
இதற்குப் பிறகு, பாண்ட் கேரக்டரில் நடிக்கப் போவதில்லை என்று டேனியல் கிரேக் அறிவித்துவிட்டார். இதனால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க இட்ரிஸ் எல்பா, டாம் ஹாலண்ட், ஜோஷ் ஓ’கானர், ஜேக்கப் எலார், கேலம் டர்னர் ஆகியோர் பரிசீலனையில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் புதிய பாண்ட் நடிகராக, 40 வயதான ராபர்ட் பேட்டின்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தை டெனிஸ் வில்லென்யூவ் இயக்குகிறார். ஸ்டீவன் நைட் திரைக்கதை எழுதும் இப்படத்தை, ஏமி பாஸ்கல் மற்றும் டேவிட் ஹேமன் ஆகியோர் தயாரிக்கின்றனர். சினிமாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பாத்திரங்களில் ஒன்றை ஏற்பது பற்றி பேட்டின்சன் கூறும்போது, ‘‘மிகவும் புகழ்பெற்ற பெயர் ஜேம்ஸ்பாண்ட். 007 பாத்திரம் எனக்கு வழங்கப்பட்டிருப்பது வாழ்நாள் பெருமை. இக்கதாபாத்திரம் எனக்குக் கிடைத்த தன் மூலம் கனவு நனவானது. இந்த அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.