Project Hail Mary - விமர்சனம்: கவித்துவ அனுபவம் தரும் விண்வெளிப் பயணம்!

Project Hail Mary - விமர்சனம்: கவித்துவ அனுபவம் தரும் விண்வெளிப் பயணம்!
Updated on
2 min read

ஹாலிவுட்டில் வெளியாகும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கே உரிய நுணுக்கமான அறிவியல் கருத்துகள் மட்டுமின்றி மனதைத் தொடும் ஒரு கவித்துவமான அனுபவத்தையும் தந்திருக்கிறது ‘ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி’. பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோஃபர் மில்லர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம், ஆண்டி வீயரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

ரய்லண்ட் கிரேஸ் (ரையான் கோஸ்லிங்) என்னும் நபர் ஒரு விண்கலத்தில் கண்விழிக்கிறார். அவருக்குத் தனது கடந்த கால நினைவுகள் தெளிவற்றதாக இருக்கின்றன. தான் ஒரு விண்வெளி வீரரே அல்ல, ஒரு உயிரியல் ஆசிரியர் என்பது அவருக்கு மெல்ல நினைவுக்கு வருகிறது. சூரியனை அழித்துக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளைத் தடுத்து, உலகைக் காக்கும் ஒரு பயணத்தில் அவர் அனுப்பப்பட்டிருப்பது தெரியவருகிறது. 

இன்னொரு புறம் மற்றொரு கிரகத்திலிருந்து தனது உலகைக் காக்க வந்த ராக்கி எனும் விசித்திரமான உருவம் கொண்ட ஏலியனைச் சந்திக்கிறார். மொழி தெரியாத இரு வேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் எப்படித் தொடர்புகொண்டு, இணைந்து தங்கள் கிரகங்களைக் காக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதாபாத்திரப் படைப்பு. ரையான் கோஸ்லிங் தனது அசாத்தியமான நடிப்பால் படத்தை ஒற்றை ஆளாக தாங்குகிறார். அவர் ஒரு விண்வெளி வீரர் அல்ல என்பதால், விண்வெளியின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அவர் வியக்கும் இடங்கள் அப்படியே பார்வையாளர்களான நமக்கும் கடத்தப்படுகின்றன. 'ராக்கி' கதாபாத்திரம், சமீபகால சினிமாக்களில் வந்த ஏலியன்களிலேயே மிகவும் அழகான ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் அந்த எதிர்பாராத நட்புதான் படத்தின் ஆன்மா. 

தொழில்நுட்ப ரீதியாக திரைப்படம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் . கிரேக் ஃப்ரேசரின் ஒளிப்பதிவு விண்வெளியை பிரம்மாண்டத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறது. நிச்சயம் பெரிய திரையில் பார்க்க வேண்டிய காட்சிகள் படம் முழுக்க உள்ளன.

இருப்பினும், படத்தின் நீளம் ஒரு சிறு குறையாகத் தெரிகிறது. ஏறக்குறைய 2 மணிநேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதி சற்றே இழுவையான உணர்வை தருகிறது. படம் முடிந்துவிட்டது என்று நாம் நினைக்கும்போது மீண்டும் தொடர்வது பெரிய குறை. சில இடங்களில் நகைச்சுவையைத் திணிக்க முயன்றது படத்தின் தீவிரத்தைக் குறைத்தாலும், ரையான் கோஸ்லிங்கின் நடிப்பும், படத்தின் ஆக்கமும் இதுபோன்ற குறைகளை ஈடுகட்டி விடுகின்றன.

நாயகனின் விண்வெளிப் போராட்டங்களுக்கு இடையே, அவ்வப்போது வரும் 'பிளாஷ்பேக்' காட்சிகள் கதையின் ஆழத்தை அதிகரிக்கின்றன. ஜெர்மன் அதிகாரியான எவா ஸ்ட்ராட், ஒரு சாமான்ய ஆசிரியரான கிரேஸை எப்படி இந்த விபரீதமான மிஷனுக்குள் இழுக்கிறார் என்பதும், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் அழுத்தங்களும் மிக நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.

சாண்ட்ரா ஹல்லர் தனது கறாரான நடிப்பின் மூலம், உலகைக் காக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு அதிகாரியின் பிம்பத்தை அழகாகக் கட்டமைத்துள்ளார். ஹாரி ஸ்டைல்ஸின் 'சைன் ஆஃப் தி டைம்ஸ்' பாடலை அவர் பாடும் காட்சி ஒரு கவிதையாகத் திரையில் விரிகிறது.

அறிவியல் நுணுக்கங்கள் நிறைந்த படமாக இருந்தாலும், கிரேஸுக்கும் ராக்கிக்கும் இடையே மலரும் நட்புதான் படத்தின் ஹைலைட். மொழி தெரியாத சூழலில், ஒலிகள் மற்றும் சைகைகள் மூலம் அவர்கள் ஒரு பொதுவான மொழியைக் கண்டறியும் இடங்கள் ஆகச்சிறந்த தருணங்கள். இரு விண்கலங்களுக்கு இடையே நடக்கும் காட்சிகளை ஒரு பிரம்மாண்டமான ஓவியம் போல, விண்வெளியின் அந்த மவுனமான அழகை கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் .

மொத்தத்தில் ‘ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி’ வழக்கமான ஹாலிவுட் மசாலா அறிவியல் புனைவு படமாக இல்லாமல் நட்பு, சமூகக் கடமை, நம்பிக்கை ஆகியவற்றைப் பேசும் ஒரு அழகிய படைப்பாக தனித்து நிற்கிறது. ‘கிராவிட்டி’ போன்ற படங்களை ரசிப்பவர் என்றால்  இப்படத்துக்கு தாராளமாக டிக்கெட் எடுக்கலாம். 

Project Hail Mary - விமர்சனம்: கவித்துவ அனுபவம் தரும் விண்வெளிப் பயணம்!
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in