

சட்டத்தின் கையில் சிக்காத, குழந்தைகளைக் கொல்லும் கொலையாளியை, சட்டத்துக்குப் புறம்பான உலகமே நீதிமன்றத்தில் நிறுத்தும் உளவியல் த்ரில்லர் திரைப்படம் ‘எம்’ (M 1931) ஒரு இருண்ட முற்றத்தில் சிறுமிகள் வட்டமாக நின்று, “இருட்டிலிருந்து கருப்பு மனிதன் வருவான்... தன் சிறிய கோடாரியால் உன்னை வெட்டுவான்...” எனப் பாடி விளையாடுகிறார்கள். அந்தப் பாட்டைக் கேட்டு பதறும் ஒரு தாய், “அதை நிறுத்துங்கள்!” என்று கத்துகிறாள்.
பள்ளிக்குச் சென்ற தன் மகள் எல்ஸி வீடு திரும்புவாள் என்று அந்தத் தாய் காத்திருக்கிறார். பள்ளி முடிந்து வரும் எல்ஸி வழியில் பந்தைத் தட்டி விளையாடுகிறாள். அந்தப் பந்து, சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் “குழந்தைக் கொலையாளியைக் கண்டுபிடிப்ப வருக்கு 10 ஆயிரம் மார்க்ஸ் பரிசு” என்ற போஸ்டரில் பட்டுத் தெறிக்கிறது. அதன் மீதே, மனப்பிறழ்வு கொண்ட குற்றவாளி ஹான்ஸ் பெக்கர்ட்டின் நிழல் விழுகிறது. அவன் எல்ஸியிடம் நைசாகப் பேசி, பலூன் வாங்கிக் கொடுத்துக் கடத்துகிறான்.
எல்ஸி காணாமல் போன செய்தி நகரெங்கும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், “கொலைகளைத் தொடருவேன்” என்று பெக்கர்ட் செய்தித்தாள்களுக்குப் பெயரில்லா கடிதம் அனுப்புகிறான். காவல்துறை கைரேகை மற்றும் கையெழுத்து ஆய்வு முறைகளின் உதவியுடன் தடயங்களைத் தேடுகிறது.
விடுதிகள், ரயில் நிலையங்களில் அதிரடிச் சோதனைகள் நடக்கின்றன. ஆவணங்கள் இல்லாதவர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸாரின் இந்தத் தொடர் விசாரணைகளால் நிழலுலகக் குற்றவாளிகள் அவதிப்படுகிறார்கள்.
‘எவனோ ஒரு மனநோயாளி யால் ஒட்டுமொத்த நிழல் உலகமும் முடங்குகிறது’ எனத் தாதாக்கள் கூடி, ‘அவனை நாமே பிடிப்பது’ என முடிவெடுக்கிறார் கள். நகரின் மூலை முடுக்குகளைக் கண்காணிக்க ‘பிச்சைக்காரர்கள் சங்கத்தை’ உளவுப் பணியில் இறக்குகிறார்கள். ஒவ்வொரு பிச்சைக்காரருக்கும் ஒரு குறிப்பிட்ட தெரு ஒதுக்கப்படுகிறது.
ஒருநாள், அந்தக் கொலையாளி மற்றொரு சிறுமிக்கு பலூன் வாங்கிக் கொடுத்தபடி, ஒரு சிம்பொனி இசையை விசிலடித்துப் பாடுகிறான். பலூன் விற்றுக்கொண்டிருக்கும் பார்வையற்றவர், எல்ஸி காணாமல் போன நாளிலும் இதே விசில் சத்தத்தைக் கேட்டதை நினைவுகூர்ந்து தன் நண்பனுக்குச் சிக்னல் கொடுக்கிறார்.
அந்த நண்பன் சாக்பீஸால் தன் கையில் ‘M’ (Murderer) என்று எழுதிக்கொண்டு, கொலையாளியின் முதுகில் மோதி, “பழத்தோலைக் கீழே போடாதே” என்று எச்சரிப்பது போல அந்த முத்திரையைப் பதிக்கிறான்.
முதுகில் ‘M’ இருப்பவனைப் பின் தொடருங்கள் என உஷாராகும் பிச்சைக்காரர்கள், அவனுக்குத் தெரியாமல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தகவல் பரிமாறியபடி நிழல்போல் பின்தொடர்கிறார்கள். கண்ணாடியில் தன் முதுகில் ‘M’ இருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடையும் கொலையாளி, தப்பிக்க ஒரு பெரிய கூட்டுறவு அலுவலகக் கட்டிடத்துக்குள் புகுந்துகொள்கிறான்.
தாதாக்கள் அந்தக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, தேடுகிறார்கள். போலீஸ் வருவதற்குள் தாதாக்களிடம் கொலையாளி மாட்டிக்கொள்கிறான். கைவிடப்பட்ட தொழிற்சாலையின் அடித்தளத்தில், நூற்றுக்கணக்கான குற்றவாளிகளுக்கு நடுவே கொலையாளி நிறுத்தப்பட்டு ரகசிய நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அவனுக்காக ஆஜராகும் வழக்கறிஞர், “இவன் ஒரு மனநோயாளி. இவனை மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்” என்கிறார். அதற்கு தாதாக்கள், “இறந்த குழந்தைகளுக்காக யார் நீதி வழங்கப் போகிறார்கள்? மருத்துவமனைக்கு அனுப்பினால், சில வருடங்களில் வெளியே வந்து மீண்டும் இதே கொடூரத்தைச் செய்வான். கொல்வதே தீர்வு!” என்கிறார்கள். தாதாக்கள் அவனைக் கொல்லப் பாயும் தருணத்தில் போலீஸ் நுழைந்து அனைவரையும் சிறைபிடிக்கிறது.
நீதிமன்றத்தில், மனநோயாளி பெக்கர்ட்டால் கொல்லப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் கண்ணீர் மல்க அமர்ந்திருக்கிறார்கள். அப்போது எல்ஸியின் தாய், “எந்தத் தண்டனையும் இறந்த குழந்தைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. குழந்தைகளை நீங்கள் எல்லோரும் கவனமாகக் காக்க வேண்டும் ” என்று திரையைப் பார்த்துக் கூறுகிறாள்.
சமூகத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பின்மையைப் பற்றிய எச்சரிக்கை மணி அடிப்பதாக இப்படம் முடிகிறது. 1931-ல் வெளிவந்த ‘M’ வெறும் ஒரு குழந்தைக் கொலையாளி பற்றிய படம் மட்டுமல்ல; பின்னாளில் ஹாலிவுட்டைக் கலக்கிய சீரியல் கில்லர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர், ஃபிலிம் நாய்ர் மற்றும் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் போன்ற அத்தனை சினிமா பாணிகளுக்கும் ஆதிப் புள்ளி! நாஜிக்களின் அரசியல் நெருக்கடிக்கு அஞ்சி ஜெர்மனியை விட்டு வெளியேறி ஹாலிவுட்டுக்குப் புலம்பெயர்ந்த ஃபிரிட்ஸ் லாங், இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பல கிளாசிக் க்ரைம் படங்களை இயக்கி, அமெரிக்க சினிமாவின் போக்கையே மாற்றி எழுதினார்.
நீரோ ஃபிலிம் என்ற சுயாதீன நிறுவனம் மூலம் சீமோர் நெபென்சல் தயாரித்த இப்படத்துக்கு ஃப்ரிட்ஸ் லாங்கும், அவரது மனைவி தியா வான் ஹார்போவும் இணைந்து திரைக்கதை எழுதினர்.
வன்முறையைக் காட்டாமல், தனியே கிடக்கும் பந்து, மின்கம்பியில் மாட்டிய பலூன் போன்ற குறியீடுகள் மூலமே மரணத்தின் கோர வலியைக் கடத்துவது ஃபிரிட்ஸ் லாங்கின் ஆகச்சிறந்த திரை மொழி! ஒளிப்பதிவாளர் ஃபிரிட்ஸ் ஆர்னோ வாக்னர் ‘ஜெர்மன் எக்ஸ்பிரஷனிசம்’ பாணியில் ஒளியையும் நிழலையும் கையாண்ட விதம் அற்புதம். கொலையாளியின் நீண்ட இருண்ட நிழலே மரணத்தின் குறியீடாக மாறும் உத்தியும், கேமரா கோணங்கள் மூலம் பெர்லின் நகரின் பயத்தை இருண்ட தன்மையோடு கடத்தியதும் அற்புதம்.
எடிட்டர் பால் ஃபால்கன்பெர்க் ‘பேரலல் எடிட்டிங்’ முறையை இதில் மிக நேர்த்தியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஒருபுறம் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தையும், மறுபுறம் தாதாக்களின் ரகசியத் திட்டத்தையும் மாற்றி மாற்றி வெட்டி (Cross-cutting), திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறார்.
இயக்குநரின் முதல் பேசும் படமான இதில், தேவையற்ற பின்னணி இசை இல்லை. கொலையாளி வாயால் எழுப்பும் அந்த விசில் சத்தம் மட்டுமே படத்தின் அச்சுறுத்தும் அடையாளம். ஒரு கதாபாத்திரத்தை அடையாளப்படுத்த ஒலியைப் பயன்படுத்திய ஆரம்பகால திரைப்படங்களில் ‘M’ முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
கொலையாளியாக நடித்த பீட்டர் லோர் பயம், குற்றவுணர்வு, மனப்பிறழ்வு ஆகிய அனைத்தையும் தன் முகபாவனைகளால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக இறுதியில் அவர் பேசும் நீதிமன்ற உரையில், “நீங்கள் விருப்பப்பட்டு குற்றம் செய்கிறீர்கள்; ஆனால் எனக்குள் இருக்கும் அந்த இருண்ட குரல்களிடமிருந்து என்னால் தப்ப முடியவில்லை!” என்று பெக்கர்ட் கதறும்போது, ஒரு கொலையாளி மீதும் பார்வையாளர்களுக்கு ஒரு கணப் பரிதாபம் எட்டிப்பார்க்கிறது.
இது உலக சினிமாவின் சிறந்த தனிமொழிகளில் ஒன்று. 1931-ல் பெர்லின் நகரின் பின்னணியில் பிரிட்ஸ் லாங் எழுப்பிய அந்த எச்சரிக்கைக் குரல், நூற்றாண்டைக் கடக்கும் இந்த 2026-ம் ஆண்டிலும் அப்படியே ஒலிக்கிறது.
குற்றவாளிகளைத் தண்டிப்பது ஒருபுறம் இருந்தாலும், நம் வீட்டுச் சிறு குழந்தைகளைப் பெற்றோர்களாகிய நாம்தான் பாதுகாப்போடும் எச்சரிக்கையோடும் வளர்க்க வேண்டும் என்ற ‘எம்’ படத்தின் இறுதிச் செய்தி, இன்றளவும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமான சமூக நீதியாகும்!
குற்றவாளியை வேட்டையாடும் கதையைச் சொல்லிக்கொண்டே, நீதி, மனநோய், சமூகப் பொறுப்பு ஆகியவற்றைப் பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்பும் உலக சினிமாவின் அழியாத மைல்கற்களில் ஒன்றான ‘எம்’மைப் பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com