

ஒரு பெண்ணின் மரணத்தில், ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கே தெரியாமல் சம்பந்தப்பட்டிருக்கும் உண்மையை ஒரு மர்ம இன்ஸ்பெக்டர் வெளிக்கொணர்வதே ‘அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ (AN INSPECTOR CALLS -1954) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
1912-ம் ஆண்டு இங்கிலாந்தில், பெரும் பணக்காரரான ஆர்தர் பெர்லிங் தனது மகள் ஷீலா மற்றும் ஜெரால்டு ஆகியோரின் நிச்சயதார்த்த விழாவை, விருந்து வைத்துக் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார். விருந்தில் மகன் எரிக் அதிகமாகக் குடிப்பதை தாய் சிபில் எச்சரிக்கிறாள்.
அங்கு வரும் இன்ஸ்பெக்டர் பூல் என்ற அதிகாரி, பெர்லிங் தொழிற்சாலையில் வேலை பார்த்த ஈவா ஸ்மித் என்ற இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறார். அவளது டைரியில் பெர்லிங் நிறுவனத்தின் பெயர் இருக்கிறது என்று கூறி, ஒரு புகைப்படத்தையும் காட்டுகிறார்.
அதைப் பார்த்த ஆர்தர், தனது தொழிற்சாலையில் வேலை செய்தவள் ஈவா என்றும் ஊதிய உயர்வு கேட்டுப் போராடியதால் அவளை வேலையிலிருந்து நீக்கியதாகவும் ஒப்புக் கொள்கிறார். வேலையிழந்த ஈவா, மில்வுட்ஸ் என்ற கடையில் வேலைக்குச் சேர்ந்தாள் என இன்ஸ்பெக்டர் கூறியதைக் கேட்டு ஷீலா அதிர்ச்சியடைகிறாள்.
அங்கு தொப்பி வாங்கச் சென்றபோது ஈவாவின் அழகைக் கண்டு பொறாமைப்பட்ட ஷீலா, தான் தொப்பி அணிந்தவிதம் கண்டு ஈவா சிரித்ததால் ஆத்திரமடைந்து, அவளை வேலையிலிருந்து நீக்கச் செய்ததாகக் குற்றவுணர்வுடன் சொல்கிறாள்.
ஈவா தன் பெயரை ‘டெய்சி ரென்டன்’ என மாற்றிக் கொண்டாள் என இன்ஸ்பெக்டர், ஜெரால்டுவிடம் சொல்ல, அவன் அதிர்ச்சியடைகிறான். ஆதரவற்ற டெய்சிக்கு அடைக்கலம் கொடுத்துக் காதலித்த ஜெரால்டு, பின்னர் அவளைக் கைவிட்டதாக ஒப்புக்கொள்கிறான்.
ஓர் அப்பாவிப் பெண்ணை அவன் ஏமாற்றியதைப் பொறுக்காத ஷீலா, தனது நிச்சயதார்த்த மோதிரத்தைத் திருப்பிக் கொடுக்கிறாள். பிறகு அந்தப் புகைப்படத்தைத் தொண்டு நிறுவனத் தலைவியான சிபிலிடம் காட்டுகிறார் இன்ஸ்பெக்டர்.
ஆதரவின்றி தாய்மை அடைந்த நிலையில் வந்த டெய்சி, திருமதி பெர்லிங் என்ற பெயரைப் பயன்படுத்தியதாலும், தாய்மைக்குக் காரணமானவனைச் சொல்ல மறுத்ததாலும் ஆத்திரமடைந்து அவளுக்கு உதவ மறுத்ததாக சிபில் கூறுகிறாள்.
உடனே இன்ஸ்பெக்டர், அந்தக் குற்றவாளி அவளது சொந்த மகன் எரிக்தான் என்ற அதிர்ச்சியான உண்மையை வெளிப்படுத்துகிறார். குடிபோதையில் இக்கட்டான சூழலில் இருந்த அவனுக்கு உதவிய ஈவாவுடன் பழகியதால் அவள் தாய்மை அடைந்ததை எரிக் ஒப்புக்கொள்கிறான்.
இப்படி குடும்பத்தினரின் ஒட்டுமொத்த சுயநலமும் ஈவிரக்கமற்ற செயல்களுமே அந்த இளம் பெண்ணின் மரணத்துக்கு முழுக் காரணம் என்பதை இன்ஸ்பெக்டர் ஆணித்தரமாக உணர்த்துகிறார்.
சிகரெட் பிடித்தபடி வெளியில் உலவும் ஜெரால்டு, ஒரு ரோந்துக் காவலரை விசாரித்து, அங்குள்ள காவல் நிலையத்தில், பூல் என்ற அதிகாரி யாருமில்லை என்பதைக் கண்டறிகிறான். உடனே வீட்டுக்கு வந்து இன்ஸ்பெக்டரைத் தனி அறையில் அமர வைத்துவிட்டு, மருத்துவமனையைத் தொடர்புகொண்டு இன்று எந்தத் தற்கொலையும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்துவிட்டு குடும்பத்தாரிடம் உண்மையைக் கூறுகிறான்.
ஆர்தரும் சிபிலும் இந்த வழக்கிலிருந்து தப்பிவிட்டோம் என்று நிம்மதியடைகிறார்கள். அந்தப் போலி இன்ஸ்பெக்டரை எச்சரித்து அனுப்ப நினைக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாகத் தொலைபேசி ஒலிக்கிறது.
மறுமுனையில் காவல் துறையிலிருந்து, “ஓர் இளம்பெண் இப்போதுதான் விஷம் குடித்து இறந்துவிட்டாள், அதுகுறித்து விசாரிக்க ஒரு காவல் ஆய்வாளர் வந்துகொண்டிருக்கிறார்” என்ற பகீர் தகவல் வருகிறது. பேரதிர்ச்சியடைந்த ஆர்தர், பூட்டிய அறையைத் திறந்து பார்க்க, அங்கே வெறும் நாற்காலி மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறது.
அவர்களை விசாரிக்க வந்தது யார்? சாதாரண இன்ஸ்பெக்டரா, அல்லது வேறொன்றா? என்ற பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கும் கேள்வியோடு திரைப்படம் முடிவடைகிறது. ஜே.பி.பிரீஸ்ட்லியின் மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, டெஸ்மண்ட் டேவிஸ் திரைக்கதை அமைக்க, வாட்டர்கேட் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஏ.டி.பீட்டர்ஸ் தயாரிப்பில், பின்னாளில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை (கோல்ட்ஃபிங்கர்) இயக்கிய கய் ஹாமில்டன் தனது ஆரம்பக்காலத்தில் இயக்கிய ‘உளவியல் த்ரில்லர்’ திரைப்படம்தான் இது.
1912-ல் முதலாளித்துவ சமூகத்தால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் குறியீடே ஈவா ஸ்மித். ஒரு சமூகத்தின் மனிதநேயமற்ற செயல்களால் ஓர் உயிர் எப்படிப் பலியாகிறது என்ற உளவியல் குற்றத்தைப் பேசுவதோடு, “ஒரு கொலையைச் செய்ய ஆயுதம் தேவையில்லை; நமது அலட்சியமும், ஈவிரக்கமற்ற வார்த்தைகளுமே போதும்” என்ற சுடும் உண்மையை இப்படம் சமூகத்தின் முகத்தில் அறைகிறது.
ஒளிப்பதிவாளர் டெட் ஸ்கேஃப்: ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை (ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு மட்டும் வெளி இடங்களைக் காட்டினாலும்), மேடை நாடகப் பாணியிலிருந்து சுவாரஸ்யமான திரைப்படமாக்கி யிருப்பதில் இவரின் பங்கு அதிகம்.
எடிட்டர் ஆலன் ஆஸ்பிஸ்டன்: மகிழ்ச்சியான குடும்ப விருந்தில் தொடங்கும் படத்தை விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராகவும், ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கும் உளவியல் டிராமாவாகவும் தொய்வில்லாமல் கடத்துகிறார்.
இசையமைப்பாளர் பிரான்சிஸ் சாக்ரின்: இன்ஸ்பெக்டரின் விசாரணை மற்றும் உறையவைக்கும் இறுதி அதிர்ச்சித் திருப்பத்தின்போது பரபரப்பை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது, பின்னணி இசை.
அலஸ்டெய்ர் சிம் (இன்ஸ்பெக்டர் பூல்): அமைதியான ஆனால் ஆழமான குரல், குற்றவாளிகளைச் சுட்டெரிக்கும் பார்வை என அக்குடும்பத்தின் மனசாட்சியை உலுக்கும் மர்மமான நீதிமானாகத் தன் முதிர்ச்சியான நடிப்பால் படத்தைத் தாங்கிப் பிடித்துள்ளார்.
ஜேன் வென்ஹாம் (ஈவா ஸ்மித்): சாதாரண தொழிற்சாலைப் பெண்ணாக இருக்கும்போது உள்ள துடுக்குத்தனம், காதலித்து ஏமாற்றப்படும்போது ஏற்படும் விரக்தி என ஈவாவின் வாழ்க்கைப் போராட்டத்தையும் துயரத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி யிருக்கிறார்.
ஆர்தர் யங் & ஓல்கா லிண்டோ (பெர்லிங் தம்பதி): இரக்கமற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் அச்சு அசலான பிரதிபலிப்பு இவர்கள். குற்ற உணர்ச்சியே இல்லாத முரட்டுப் பிடிவாதத்தைத் தங்கள் உடல்மொழியிலேயே மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எலீன் மூர் (ஷீலா): மிகச் சிறந்த கதாபாத்திர முரண். ஆரம்பத்தில் பணத்திமிரும், பொறாமையும் கொண்ட பெண்ணாக அறிமுகமாகி, பிறகு தன் தவறை எண்ணிக் குற்ற உணர்ச்சியில் துடிப்பது என நடிப்பில் பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.
பிரையன் ஃபோர்ப்ஸ் (எரிக்): குடிக்கு அடிமையாகி, தவறு செய்துவிட்டு அதிலிருந்து மீளத் துடிக்கும் பலவீனமான இளைஞனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
‘அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ ஒரு கொலை மர்மத்தைப் பற்றிய படம் அல்ல; ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சிதைப்பதில் சமூகத்தின் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு இருக்க முடியும் என்பதைப் பற்றிய படம்.
ஒரு சாப்பாட்டு அறைக்குள் நடக்கும் உரையாடல்கள்தான் மொத்தப் படமும். ஆனால், அந்த அறைக்குள் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரின் முகமூடியும் கிழியும்போது ஏற்படும் த்ரில்லர் உணர்வு அபாரமானது.
குற்றமும் தண்டனையும் நீதிமன்றங்களில் மட்டும் வழங்கப்படுவதில்லை; மனிதனின் மனசாட்சிக்குள் நடக்கும் விசாரணையே ஆகப்பெரிய நீதிமன்றம் என்பதை ரசிகர்களுக்கு மிக நேர்த்தியாகக் காட்டிய இந்த உன்னதமான படைப்பை தொலைபேசியை அணைத்துவிட்டு எந்தத் தொந்தரவுமின்றி ரசிக்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com