

திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் தெரிவித்துள்ளார். ‘த லார்டு ஆப் த ரிங்ஸ்’, ‘த ஹாபிட்’ வரிசை படங்கள், ‘ஹெவன்லி கிரியேச்சர்ஸ்’, ‘கிங்காங்’ உள்பட பல படங்களை இயக்கியவர் பீட்டர் ஜாக்சன்.
தயாரிப்பாளருமான இவருக்கு, கேன்ஸ் திரைப்பட விழாவில் கவுரவ தங்கப்பனை விருது வழங்கப்பட்டது. இதைப் பெற்ற அவர் ‘மாஸ்டர் கிளாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். திரைப்படத் துறையில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து, விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “திரைப்படங்களில் ஏஐ பயன்படுத்துவதைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. அது மற்றொரு ‘ஸ்பெஷல் எபெக்ட்’ மட்டுமே.
ஆனால், நடிகர்களின் முக அடையாளம் மற்றும் தோற்றம் அவர்களின் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நடிகர்களின் உரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில் எல்லோரும் ஏஐ குறித்து மிகவும் கவலைப்படுவதால் கணினி மூலம் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு இல்லை” என்று பீட்டர் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.