

கொலை செய்யப்பட்டதாக நினைக்கப்படும் பெண் உயிரோடு திரும்பி வருவதும் அவளது கொலைக்குக் காரணமாக சொல்லப்பட்டவரே கொல்லப்படுவதும் ‘லாரா’ (LAURA -1944) படத்தின் ஒருவரிக் கதை.
அழகிய இளம் பெண் லாராவின் ஓவியம் காட்டப்படுகிறது. அதன்மேல் ஒரு குரல் (வாய்ஸ் ஓவர்), “லாரா இறந்த அந்த வார இறுதியை மறக்க முடியாது. அந்த ஞாயிறு, நியூயார்க்கில் எஞ்சியிருக்கும் ஒரே மனிதன் நான்தான் என்பதுபோல உணர்ந்தேன்.
லாராவின் கொடூர மரணத்தால் தனிமையடைந்தேன். நான் வால்டோ லைடெக்கர்; அவளது கதையை நான் எழுத முற்படும்போது அந்தத் துப்பறியும் நிபுணர் வந்தார்” என்று ஒலிக்கிறது. குளியல் தொட்டிக்குள் அமர்ந்தபடி டைப் அடிக்கும் அந்த எழுத்தாளரை, மெக்பெர்சன் என்ற துப்பறியும் நிபுணர் சந்தித்து லாராவின் மரணம் பற்றி விசாரிக்கிறார்.
இருவரும் லாராவின் ஆன்ட்டி, ஆன்ட்ரெட்வெல் வீட்டுக்குச் செல்கிறார்கள். அப்போது அங்கு வரும் லாராவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கார்பென்டரிடமும் விசாரணை நடக்க, லாரா இறந்த நேரத்தில், இசைக்கச்சேரியில் இருந்ததாகச் சொல்கிறார்.
மெக்பெர்சனை டின்னருக்கு அழைக்கும் வால்டோ, லாராவை முதன்முதலில் சந்தித்த சம்பவத்தை நினைவுகூர்கிறார். ஒரு மதிய உணவு நேரத்தில் தனது கம்பெனியின் பேனாவை விளம்பரப்படுத்த வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டதையும், முதலில் திட்டினாலும் பிறகு ஏதோ ஈர்க்கப்பட்டு, அவளது அலுவலகம் தேடிச் சென்று ஆதரவு கொடுத்ததையும், தனக்குத் தெரிந்த பிரபலங்களை அறிமுகம் செய்து வைத்ததையும் தனது எழுத்து, பேச்சை அவள் ரசித்ததையும் காதல்கதையைப் போல் பகிர்கிறார்.
ஒரு பார்ட்டியில் லாராவுடன் அறிமுகம் ஆகிறான் கார்பென்டர். இருவரும் சுவாரஸ்யமாகப் பேசுவதைப் பார்க்கும் வால்டோ, டென்ஷன் ஆகிறார். கார்பென்டரும் லாராவும் காதல் வயப்பட்டதைத் தெரிந்துகொண்ட வால்டோ, கார்பென்டர் நல்லவன் இல்லை என்று பல குற்றச்சாட்டுகளை அவளிடம் அடுக்குகிறார்.
ஆனால், அவனது கடந்தகாலம் பற்றி எனக்குக்கவலை இல்லை என்று லாரா அவரது முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுகிறாள்.
சம்பவம் நடந்த நாளன்று டயான் ரெட்ஃபெர்ன் என்ற பெண்ணுடன் லாரா மதிய உணவு சாப்பிட்டதாக வால்டோ சொல்கிறார். தான் லாராவை விருந்துக்கு அழைக்க, அவள் அதை மறுத்து சில நாட்கள் தனது கிராமத்துக்குச் செல்வதாகச் சொன்னாள்; கார்பென்டருடன் லாராவைப் பழகவிட்டதுதான், தான் செய்த மிகப்பெரிய தவறு என்று வால்டோ வருந்துகிறார்.
லாராவின் மரண மர்மத்தைக் கண்டறிவதற்காக மெக்பெர்சன், லாரா வீட்டிலேயே தங்கி, லாராவின் பர்சனல் டைரிகளைப் பார்வையிடுகிறார். சுவரில் தொங்கும் லாராவின் ஓவியத்தைப் பார்த்தபடியே மெக்பெர்சன் கண் அயர்ந்துவிடுகிறார். சற்று நேரத்தில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட லாரா உள்ளே வருகிறாள். மெக்பெர்சனுக்கு அதிர்ச்சி.
லாராவுக்கு நடந்த எதுவுமே தெரியவில்லை; கிராமத்தில் செய்தித்தாள் வாசிக்கவில்லை, ரேடியோ எதுவும் கேட்கவில்லை என்கிறாள்.
அவள் வீட்டில் இறந்தது யார்? குழப்பமடைந்த லாரா, தன் அறையில் உள்ள உடையைப் பார்த்து, ‘டயான் ரெட்ஃபெர்ன்’ என்ற தனது கம்பெனியை சேர்ந்த மாடல் என்று கூறுகிறாள்.
அந்தப் பெண் ஏன் கொல்லப்பட்டாள்? காதல், வன்மம், வஞ்சம், மர்மம் அனைத்தும் கலந்த இந்தக் கொலையைத் தனது புத்திசாலித்தனமான விசாரணை மூலம் மெக்பெர்சன் கண்டுபிடித்து குற்றவாளியை நெருங்குகிறார்.
முதலில் லாராவைக் கொல்ல முயற்சித்தவன், லாரா என நினைத்துத் தவறுதலாக டயானைக் கொன்றுவிடுகிறான். லாரா உயிருடன் திரும்பி வந்ததும், தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று மீண்டும் அவளைக் கொல்ல முயற்சிக்க, போலீஸாரின் துப்பாக்கிக்கு பலியாகிறான்.
அது வேறு யாருமில்லை, வால்டோதான். லாராவின் வளர்ச்சிக்குக் காரணமானவனே அவளை அழிக்க முயன்றிருக்கிறான். “குட்பை லாரா, குட்பை மை லவ்” என்ற வால்டோவின் கடைசி வாசகத்தோடு நிறைவடைகிறது படம்.
வேரா காஸ்பரியின் நாவலைத் தழுவி ஜே ட்ராட்லர், சாமுவேல் ஹாஃபென்ஸ்டீன் மற்றும் பெட்டி ரெய்ன்ஹார்ட் ஆகியோர் வால்டோ லைடெக்கரின் பின்னணிக் குரலில் தொடங்கி, நினைவுகளின் வழியாக விரியும் கதையைப் பின்னர் நிகழ்கால விசாரணையாக மாற்றியிருக்கிறார்கள்.
ஓர் அழகிய பெண்ணைச் சுற்றி உருவாகும் காதல், பொறாமை ஆகியவற்றை மிக நேர்த்தியான குற்றப் பின்னணியில் திரைக்கதையாக வடிவமைத்துள்ளனர்.
இயக்குநர் ஓட்டோ பிரெமிஞ்சர் தனது தேர்ந்த ஆளுமையால், சிறந்த நாவலை வாசிக்கும் ரசனையோடு திரையில் செதுக்கியுள்ளார். ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் வெளியிட்டிருக்கும் இப்படத்தின் தயாரிப்பும் இவரே.
ஒளிப்பதிவு: ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கலைநயத்துடன் ரசனையாகப் படமாக்கியிருக்கும் ஜோசப் லாஷெல், இப்படத்துக்காகச் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார்.
படத்தொகுப்பு: கதையின் ஓட்டத்தை இயல்பாகவும் எவ்விதத் தொய்வின்றியும் நேர்த்தியாக நகர்த்திச் சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் லூயிஸ் லோஃப்லர். படத்தின் கவிதைத் தன்மையில் இவரது கத்திரிக்கும் முக்கியப் பங்கு உண்டு.
இசை: டேவிட் ராக்ஸினின் இசை மனதை மயக்குகிறது. லாரா கதாபாத்திரத்துக்காக அவர் அமைத்த அந்தப் பிரத்யேக ‘தீம் மியூசிக்’ படம் நெடுகிலும் ஆங்காங்கே ஒலித்து பார்வையாளர்களை வசிய வலையில் வீழ்த்துகிறது.
ஜீன் டியர்னி: துடிப்பும் சுறுசுறுப்பும் மிகுந்த அழகி லாராவாக திரையில் வாழ்ந்திருக்கிறார். தனது வசீகரமான நடிப்பாலும், நளினமான அழகாலும் பார்வையாளர்களாகிய நாமும் அறியாமலேயே அவர் மீது காதலில் விழும்படி செய்துவிடுகிறார்.
டானா ஆண்ட்ரூஸ்: துப்பறியும் நிபுணர் மார்க் மெக்பெர்சனாக, லாராவிடம் ஆழமான ஈர்ப்பையும் அபிமானத்தையும் வளர்த்துக்கொண்டு, அவள் உயிரோடு இருப்பது தெரியவந்த பிறகு அவளுடைய பாதுகாவலனாகமாறும் சிக்கலான கதாபாத்திரத்தை, நேர்த்தியான மற்றும் அடக்கமான நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார்.
கிளிஃப்டன் வெப்: வால்டோ லைடெக்கராக, தனது கம்பீரமான தோற்றத்தாலும் ஸ்டைலான உடல்மொழியாலும் கவர்கிறார். லாராவின் மீது வெறித்தனமான காதலில் விழுவதும், “தனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற வக்கிரப் புத்தியில் அவளைக் கொலை செய்ய முயல்வதுமாக படம் முழுவதும் மிரட்டியிருக்கிறார்.
லாரா என்ற வெற்றிகரமான, சுதந்திரமாகப் பணி புரியும் பெண்ணை மையமாக வைத்து நகரும் இப்படம், அவளை போகப் பொருளாக பார்க்கும் ஆண்களின் ஆதிக்க மனோபாவத்தை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது.
திரைப்பட வரலாற்றில் தனது நீடித்த முக்கியத்துவத்தை நிரூபித்த இப்படம் 1999-ம் ஆண்டு அமெரிக்காவின் தேசியத் திரைப்படப் பதிவகத்திலும் பாதுகாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சைக்கலாஜிக்கல் த்ரில்லர், டிடெக்டிவ் எனப் பல திரை வகைகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் இந்த கிளாசிக் திரைப்படத்தை ஓர் அமைதியான மாலை நேரத்தில் லாராவின் தீம் இசையில் மெய்மறந்து ரசிக்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com