

சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக்கப்பட்ட ராணுவ வீரன் சிறைச்சாலையின் கொடூர தண்டனையால் நிஜக் குற்றவாளியாக மாறுவதே 1932- ம் ஆண்டு வெளியான ‘ஐ ஆம் எ ஃப்யூஜிடிவ் ஃப்ரம் எ செயின் கேங்’ (I AM A FUGITIVE FROM A CHAIN GANG) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
முதலாம் உலகப் போரை முடித்துவிட்டு நாடு திரும்பும் ஜேம்ஸ் ஆலன் என்ற ராணுவ வீரனை அவனது அம்மாவும், பாதிரியாராக இருக்கும் சகோதரனும் ரயில்நிலையத்தில் வரவேற்கிறார்கள்.
சகோதரனின் வற்புறுத்தலால் ராணுவத்தில் சேருமுன் வேலை பார்த்த அதே ஃபேக்டரிக்குச் செல்லும் ஜேம்ஸிற்கு வழக்கமாக பெஞ்சைத் தேய்க்கும் அந்த ‘9 டு 5’ வேலை பிடிக்கவில்லை. அம்மாவிடம் கெஞ்சுகிறான்.
அண்ணன் மறுத்தாலும் அம்மா, ஜேம்ஸ் விருப்பப்பட்ட வேலையை பார்க்க சம்மதிக்கிறாள். ஜேம்ஸ் பல நகரங்களில் வேலைக்கு முயற்சித்து, கடைசியாக செயின்ட் லூயிஸ் வருகிறான். இங்கும் வேலை கிடைக்கவில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் கைக்கடிகாரத்தை விற்க முயற்சித்தும் முடியவில்லை.
ஒரு விடுதியில் ‘பீட்’ என்பவன் அறிமுகமாகிறான். சாப்பிடுவதற்காக ஜேம்ஸை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற ‘பீட்’ திடீரென துப்பாக்கியை நீட்டுகிறான். அப்பாவி ஜேம்ஸை தனது திருட்டுக்கு உடந்தையாக்குகிறான்.
பீட்டின் உத்தரவின்படி, ஜேம்ஸ் கல்லாவிலுள்ள பணத்தை எடுக்கும்போது, திடீரென உள்ளே புகுந்த காவலர்களால் ‘பீட்’ சுட்டுக் கொல்லப்படுகிறான். கையில் பணத்துடன் தப்பியோட முயற்சித்த குற்றத்துக்காக, ஜேம்ஸ் சிறைக்கு செல்கிறான்.
தெற்கு மாகாணத்தின் கொடூரமான ‘சங்கிலிப் பிணை’ சிறை அது. மனநோயாளிகளைப் போல கால்களில் விலங்கு பூட்டப்பட்டு, சக கைதிகளுடன் பிணைக்கப்படுகிறான் ஜேம்ஸ். அதிகாலை 4.20-க்கு எழுப்பி, மாடுகள் போல வண்டியில் அடைத்து, கல் உடைக்கக் கொண்டு செல்கிறார்கள். பணியின்போது வழியும் வியர்வையைத் துடைத்ததற்காக அதிகாரி, ஜேம்ஸை அடிக்கிறார்.
‘வியர்வையைத் துடைக்க அனுமதி கேட்கவேண்டும்; சொல்லப்போனால் அதிகாரிக்குத் தெரியாமல் உனக்கு வியர்க்கவே கூடாது’ என மூத்த கைதி பாம்பர் வெல்ஸ் சொல்லும்போது அந்த நரகத்தின் உக்கிரம் புரிகிறது.
அதிலிருந்து விடுபட நினைக்கும் ஜேம்ஸ் கறுப்பின கைதி செபாஸ்டியன் உதவியுடன் கால் சங்கிலியை உடைத்து சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கிறான். காவலர்கள், நாய்கள் துரத்தியும் ஜேம்ஸ் தண்ணீருக்கடியில் மூழ்கி, மூங்கில் குச்சிமூலம் சுவாசித்து தப்பிக்கிறான்.
சிகாகோ தப்பிச் செல்லும் ஆலன், ஒரு கம்பெனியில் தினம் 4 டாலர் சம்பளத்தில் சாதாரண ஊழியராக சேர்ந்து படிப்படியாக உயர்கிறான். ‘மேரி’ என்ற பெண்ணின் வீட்டில் வாடகைக்குத் தங்குகிறான். மேரி அவனை திருமணம் செய்துகொள்ள விரும்ப, மறுத்து விடுகிறான். சகோதரன் எழுதிய கடிதத்தின்மூலம் சிறையிலிருந்து தப்பித்து வந்த ‘செயின்கேங்’ கைதி என்பதை அறிந்த மேரி, ஆலனை மிரட்டித் திருமணம் செய்கிறாள்.
காலப்போக்கில் மேரியின் தவறான நடத்தையால் ஹெலன் என்ற பெண்மீது காதல் வயப்படும் ஆலன், மேரியிடம் விவாகரத்து கேட்க, அவள் அவனைப் போலீஸில் காட்டிக் கொடுக்கிறாள். சிறை அதிகாரிகள் ஆலனைத் தேடி வர, சிகாகோ அதிகாரிகள் ஆலன் கண்ணியமான பதவியில் இருக்கிறார். அவரை அனுப்ப முடியாது என்று மறுக்கிறார்கள்.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து, ‘ஆலன் 90 நாள் இருந்தால் போதும். சிறையில் விரும்பும் வேலை செய்யலாம்” என்று வாக்குறுதி தருகிறார்கள். ஆலன் அதை ஏற்றுக் கொண்டு, மறுபடி சிறைக்குச் செல்கிறான். அந்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டதா? ஆலன் என்ன ஆனான்? என்பதே ‘ஐ ஆம் எ ஃப்யூஜிடிவ் ஃப்ரம் எ செயின் கேங்’. இயக்குநர் மெர்வின் லெராய், ராபர்ட் எலியட் பர்ன்ஸின் சுயசரிதையைத் தழுவி ஒரு சமூகப் புரட்சியையே திரையில் நிகழ்த்தியுள்ளார்.
ஹோவர்ட் ஜே. கிரீன் மற்றும் பிரவுன் ஹோம்ஸ் திரைக்கதையில் உருவான இப்படம், அமெரிக்காவின் கொடூரமான செயின் கேங் (Chain Gang) சிறை முறையைச் சட்டப்பூர்வமாக ஒழிக்கக் காரணமாக அமைந்தது, வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவு. “சிறையின் குறுகிய அறைகளையும், சங்கிலிப் பிணைப்பையும் ஒளிப்பதிவாளர் சோல் போலிட்டோ ஒரு திகில் படத்தைப் போல காட்சிப்படுத்தியுள்ளார். நவீன படங்களுக்கு சவால் விடும் அந்த கிளைமாக்ஸ் சேஸ் காட்சி, ஒரு விஷுவல் பாடம்.
இசை இயக்குநர் லியோ எஃப். ஃபோர்ப்ஸ்டீன் சிறைச்சாலையின் வறண்ட சூழலை உணர்த்த, பின்னணி இசையைத் தவிர்த்துவிட்டு, கைதிகளின் கால்களில் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளின் உரசும் சத்தத்தையும், சம்மட்டி அடிக்கும் ஓசையையுமே ஒருவித தாளக்கட்டுடன் பயன்படுத்தியிருக்கிறார். ஆலன் ஊர் ஊராக அலையும் மாண்டேஜ் காட்சிகளில் மட்டும் இசை வேகமெடுக்கிறது.
ஜேம்ஸ் ஆலனாக நடித்த ‘பால் முனி’ கைதியின் வலியை உணர வேண்டும் என்பதற்காக, ‘சங்கிலிக் கைதி’ முகாம்களில் இருந்தவர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களின் உடல் மொழி, சோர்வு மற்றும் விரக்தியைத் தன் நடிப்பில் வடித்திருக்கிறார். காதலி “பணம் வேண்டுமா? செலவுக்கு என்ன பண்ணுவ?” என்று கேட்கும் இறுதிக் காட்சியில் `‘திருடுவேன்'’ என்று அவர் சொல்லும் வார்த்தை, ராணுவ வீரனை இந்த சமூகம் திருடனாக்கிய அவலத்தை அம்பலப்படுத்துகிறது.
மிரட்டித் திருமணம் செய்யும் ‘மேரி’யாக வரும் கிளெண்டா ஃபாரல், பிற்கால ‘ஃபெம்மெ ஃபேட்டல்’ (Femme Fatale) வில்லியினருக்கு ஒரு முன்னோடி. இதற்கு நேர்மாறாக, காதலி ஹெலனாக வரும் ஹெலன் வின்சன், தன் ஸ்டைலான நடிப்பால் ‘இப்படி ஒரு துணை கிடைக்காதா?’ என ஏங்க வைக்கிறார். மூத்த கைதி ‘பாம்பர் வெல்ஸ்’ (ஆலென் ஜென்கின்ஸ்) வரும் இடங்கள் கலகலப்பு.
‘வியர்வை துடைக்க’ அவர் அனுமதி கேட்கும் தோரணை டார்க் ஹ்யூமரின் உச்சம். இறுதியில் நாயகனுக்காக அவர் உயிரை விடுவது நெஞ்சை உலுக்குகிறது. அனைத்துக் கதாபாத்திரங்களையும் நடிகர்களின் பெயர் மற்றும் தோற்றத்தோடு அறிமுகம் செய்வது இப்படத்தின் தனிச்சிறப்பு.
வரைபடத்தின் மீது நகரும் வாகனங்கள், காற்றில் பறக்கும் காலண்டர் தாள்கள் என வில்லியம் ஹோம்ஸின் எடிட்டிங் 1930-களிலேயே புதுமை. குறிப்பாக, கிளைமாக்ஸ் சேஸிங் காட்சியில் இசையும், படத்தொகுப்பும் போட்டி போட்டுக்கொண்டு, ‘ஆலன் தப்பித்துவிட மாட்டானா?’ என நம்மை இருக்கையின் நுனிக்கே தள்ளுகின்றன.
படத்தில் பெயர் குறிப்பிடாத தெற்கு மாகாணம் எனக் காட்டப்பட்டாலும், அது தங்களைக் குறிப்பதாக உணர்ந்து, கடுப்பான ஜார்ஜியா அரசு, தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது.
படப்பிடிப்பின்போது ‘ஃப்யூஸ்’ போனதால் உருவான இருட்டையே, நாயகனின் சூன்யமான எதிர்காலத்துக்கான குறியீடாக மாற்றினார் இயக்குநர் மெர்வின் லெராய். அந்தத் தற்செயல் நிகழ்வே இன்று உலக சினிமா கொண்டாடும் ‘மாஸ்டர் பீஸ்’ முடிவு!. சமூகத்தின்மீது அக்கறை கொண்டவர்கள் தவற விடக்கூடாத படம் இது.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)