

மீன் பிடிக்கச் சென்ற நண்பர்களை ஒரு சைக்கோ கொலைகாரன் சிறைபிடித்து, தான் தப்பிக்க முயல்வதே ‘த ஹிட்ச் -ஹைக்கர்’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை. ஆளில்லாத நெடுஞ்சாலை. இரு கால்கள் நடந்து செல்கின்றன, லிப்ட் கேட்டு ஒரு கை நீள்கிறது. ஒரு கார் வந்து நிற்கிறது.
கதவு திறக்கிறது. லிஃப்ட் கேட்டவனை ஏற்றிக் கொண்டு கார் பயணிக்கிறது. சற்று தொலைவில் ஒரு பெண்ணின் அலறல். இரு துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம். தம்பதியர் படுகொலை. அடுத்தநாள் பத்திரிகைகளில் ‘எம்மெட் மையர்ஸ்’ என்ற பழைய குற்றவாளி பரபரப்புச் செய்தியாகிறான். இன்னொரு சாலை. இன்னொரு கொலை.
வழியில் ஆபத்து காத்திருப்பது தெரியாமல் ராய் காலின்ஸ், கில்பர்ட் போவென் என்ற நண்பர்கள் விடுமுறையைக் கழிக்க, கலிஃபோர்னியாவிலிருந்து மெக்ஸிகோவுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனர். இரவில், சாலையின் ஓரமாக ஒரு கார் நிற்கிறது. ‘அவன்’ லிப்ட் கேட்கிறான்.
‘கேஸ் தீர்ந்திருச்சா?” என்று மனிதாபிமானத்தோடு அவனை ஏற்றிக் கொள்கிறார்கள். கில்பர்ட் அவனிடம் சினேகமாக சிகரெட்டை நீட்ட, பதிலுக்கு அவன் துப்பாக்கியை நீட்டுகிறான். தாங்கள் லிப்ட் கொடுத்தது சக மனிதனுக்கு அல்ல, மரணத்துக்கு என்பதை அப்போதுதான் உணர்கிறார்கள்.
அவன் தன்னை ‘எம்மெட் மையர்ஸ்’ என்று அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்களது பெயர், குடும்பம் பற்றி விசாரிக்கிறான். வழியில் ஒரு கேஸ் ஸ்டேஷனில் நிறுத்தி காருக்கு கேஸ் நிரப்பிக் கொள்கிறார்கள். ஒரு ‘ரோட் மேப்’ வாங்குகிறான். அவனுக்கு சாண்டா ரோசாலியா சென்று, கப்பல் ஏறி, அங்கிருந்து குய்மாஸ் நகருக்குத் தப்பிச் செல்வதுதான் திட்டம். அவன் சேர வேண்டிய இடம் வந்ததும் அவர்களைக் கொன்று
விட்டு காரை எடுத்துக் கொள்வதாகப் பீதியை ஏற்படுத்துகிறான். பாறைகள் நிறைந்த பகுதியில் ராயின் கையில் ‘பீர்’ கேனைக் கொடுத்து தூரத்தில் நிற்கச் சொல்கிறான். கில்பர்ட்டிடம் அவனது நீண்ட துப்பாக்கியைக் கொடுத்து பீர் கேனை சுடச் சொல்கிறான்.
குறி தவறினால் நண்பன் காலி. ராய்க்கு வியர்க்கிறது. சைக்கோவின் துப்பாக்கி குறி பார்க்கிறதே என்ற பயத்தில், தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நண்பனை நோக்கிச் சுடுகிறான் கில்பர்ட். ராயின் கையிலுள்ள கேன் தெறிக்கிறது. ‘விளையாட்டு முடிந்தது’ என்கிறான் சைக்கோ.
அவன் செய்த கொலைச் செய்திகள், கார் ரேடியோ வழியாக ஒலிக்கின்றன. தன்னைத் தேடி அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸ் எச்சரிக்கையாக இருப்பதையும், ஹெலிகாப்டர் மூலம் பாலைவனத்தில் போலீஸ் சல்லடை போடுவதையும் சைக்கோ அறிகிறான்.
இடது: இடா லுபினோ
தூங்கும்போதும் திறந்தபடி இருக்கும் சைக்கோவின் வலது கண்ணும், இடது கை ‘கன்’னும் இரவிலும் குறி வைத்துக் கொண்டே இருக்கிறது. துப்பாக்கி முனையில் அவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்தபடியே, சாண்டா ரோசாலியா படகுத்துறை வந்து விடுகிறான்.
பெர்ரியில் ஏறி சைக்கோ தப்பிச் சென்றானா? சைக்கோவிடமிருந்து நண்பர்கள் தப்பினார்களா? என்பதைப் பரபரப்புடன் சொல்வதே இப்படம். 1950-களில் அமெரிக்காவையே உலுக்கிய ‘பில்லி குக்’ என்ற கொலைகாரனின் நிஜ வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தக் கொடூரமான த்ரில்லரை இயக்கியவர் ஒரு பெண்.
ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த “ஃபிலிம் நாய்ர்” (Film Noir) வகையை இயக்கிய முதல் பெண் இயக்குநர் ‘இடா லுபினோ’தான். பெண்கள் இயக்கினால் படம் மென்மையாக இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து, “இது ஒரு மனிதன், ஒரு துப்பாக்கி, ஒரு காரின் கதை... அந்தக் கார் உங்களுடையதாகக் கூட இருக்கலாம்!” என்ற எச்சரிக்கையோடு படத்தை நகர்த்துகிறார்.
திரையில் கொலைகாரனின் முகத்தைக் காட்டாமல் வெறும் நிழல் உருவங்களை மட்டுமே காட்டுவதன் மூலம், அடுத்த 70 நிமிடம் இது உங்களுக்கும் நடக்கலாம்’ என்று நம்மை ‘திக் திக்’ மனநிலையில் அமர வைக்கிறார். சைக்கோவின் தொடர் கொலைகளை ஷாட்களின்மூலமே காட்டியிருப்பது அழகியலின் பாடம்.
ரேடியோ செய்தி கேட்டு சைக்கோ எச்சரிக்கை ஆவானே என்று நாம் நினைக்கும்போதே சைக்கோவை திசை திருப்ப, தவறான தகவலை போலீஸார் அறிவிக்கச் சொல்லும் உத்தியும், சைக்கோ, தான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று சொல்லும் காட்சியும் ஆச்சரியப்பட வைத்தன.
நிக்கோலஸ் முஸுராகாவின் கேமரா, பாலைவனத்தின் சுட்டெரிக்கும் பகல் வெயிலிலும் பயத்தை உருவாக்குகிறது. பாலைவனத்தின் பிரமாண்டத்தையும், காருக்குள் குறுகிய இடத்தையும் அற்புதமாக கேமராவில் அடக்கியுள்ளார்.
வில்லியம் தால்மன் ஏற்றுக் கொண்ட ‘எம்மெட் மையர்ஸ்’ கதாபாத்திரம் வித்தியாசமான வடிவமைப்பு. வலது கண் இமை ஒரு நரம்புச் சிக்கலால் மூடவே மூடாது. “நான் தூங்கினாலும் என் ஒரு கண் உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும், அதனால் தப்பிக்க நினைக்காதீர்கள்” என்று அவர் சொல்லும் இடம் குலைநடுங்க வைக்கும். அவரது குரலும், ஏளனச் சிரிப்புமே நடுங்க வைக்கிறது.
படகுத்துறையில் போலீஸார் சுற்றி வளைத்தவுடன் மற்றவர்களைப் பயமுறுத்திய அவரது பார்வை, பயந்து நடுங்கி கெஞ்சும்போது, எப்பேர்ப்பட்ட கொடூரனும், மாட்டும் போது எவ்வளவு கோழையாக மாறுவான் என்பதை உணர்த்துகிறார்.
‘ராய் காலின்ஸ்’ ஆக நடித்திருக்கும் எட்மண்ட் ஓ’பிரியன், சைக்கோவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சாமானியன். பாலைநிலத்தில் துப்பாக்கி அவரைக் குறி பார்ப்பதையும் மீறி, வானில் சுற்றும் ஹெலிகாப்டரைப் பார்த்து உதவி கேட்கும் இடத்தில் கலங்க வைக்கிறார்.
ஃபிராங்க் லவ்ஜாய் கண்களிலேயே பதற்றத்தைக் காட்டும் ‘கில்பர்ட்’டாக மிரட்டுகிறார். போலீஸாரிடம் சைக்கோ மாட்டியவுடன் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தையெல்லாம் அவன்மீது அடியாக இறக்கும்போது திரையரங்கே கைதட்டும்.
எடிட்டர் டக்ளஸ் ஸ்டீவர்ட், 71 நிமிடங்களும் நம்மை பரபரப்பாக வைத்திருக்கிறார். கார் ஓடிக்கொண்டே இருப்பதைப் போலவே, காட்சிகளும் எங்கும் நிற்காமல் பயணிப்பது எடிட்டிங்கின் மிகப்பெரிய பலம்.
இசையமைப்பாளர் லெய்த் ஸ்டீவன்ஸ், இரைச்சலான இசையைத் தவிர்த்துவிட்டு, பாலைவனத்தின் அமானுஷ்ய அமைதியையே திகில் இசையாக மாற்றியிருக்கிறார். கார் பயணத்தைக் காட்டும்போதெல்லாம் ஏதோ நடக்கப் போகிறது என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
ராபர்ட் ஜோசப்பின் கதையைத் தழுவி இயக்குநர் ஐடா லுபினோவும், கணவர் கோலியர் யங்கும் இணைந்து திரைக்கதை எழுதி, தயாரித்த சுயாதீனப் படம் இது. ஸ்டூடியோக்களின் குறுக்கீடு இல்லாததால் அவர்கள் நினைத்த அந்தக் ‘கொடூரமான, வறண்ட’ கதையைச் சுதந்திரமாகப் பதிவு செய்ய முடிந்தது.
இன்று வரும் பல ‘ரோடு த்ரில்லர்’ படங்களுக்கு 70 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கணம் வகுத்த இப்படம், அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் முக்கியத்துவம் வாய்ந்த படமாகப் பாதுகாக்கப்படுகிறது. பகல் பொழுதை ஒரு ‘த்ரில் ரைடு’ அனுபவத்தோடு கழிக்க நினைப்பவர்கள் இப்படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)