லிட்​டில் சீசர் (1931): குற்ற உலகின் அசல் குரூரம் | ஹாலிவுட் மேட்னி 51

லிட்​டில் சீசர் (1931): குற்ற உலகின் அசல் குரூரம் | ஹாலிவுட் மேட்னி 51
Updated on: 
3 min read

துப்​பாக்​கி​யின் துணை​யுடன் குற்ற சாம்​ராஜ்​யத்​தின் உச்​சத்தை அடைந்த ஒரு​வன், அதே துப்​பாக்​கிக் குண்​டுக்கு வீழ்​வதே ‘லிட்​டில் சீசர்’ (LITTLE CAESAR -1931) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

நள்​ளிர​வில் எரி​வாயு நிலை​யத்​தில் கொள்​ளை​யடித்​து​விட்​டுத் தப்​பும் நண்​பர்​களான சீசர் என்​ரிகோ பண்​டெல்லோ (ரி​கோ), ஜோ மஸாரா இரு​வரும் ஓர் உணவகத்​தில் சாப்​பிடு​கிறார்​கள். நாளிதழில் தாதா பீட் மொன்​டா​னா​வின் ஆடம்பர விருந்​து செய்​தி​யைப் பார்க்​கும் ரிகோவுக்​குத் தானும் பெரிய தாதா ஆக வேண்​டும் என்ற அதி​கார வெறி பிறக்​கிறது; நடனக் கலைஞ​னான ஜோ எளிய, நிம்​ம​தி​யான வாழ்க்​கையை விரும்​பு​கிறான். இரு வேறு இலக்​கு​களோடு இரு​வரும் குற்ற சாம்​ராஜ்ய​மான கிழக்கு நகருக்​குப் பயணிக்​கிறார்​கள்.

அங்கு சாம் வெட்​டோரி​யின் கும்​பலில் சேரும் ரிகோ​வின் துணிச்​சலை​யும் குட்​டை​யான தோற்​றத்​தை​யும் கண்டு அவனுக்கு ‘லிட்​டில் சீசர்’ எனப் பெயரிடு​கிறார்​கள்.

அதேவேளை​யில், ஜோ ஒரு கிளப்​பில் ஓல்கா என்ற பெண்​ணுடன் நடன​மாடி, அவளது காதலில் விழுகிறான். நகரத்​தின் தலை​மைத் தாதா ‘பிக் பாய்’, தன் தளபதி பீட் மொன்​டானா மூலம் உள்​ளூர் தாதாக்​களான வெட்​டோரி மற்​றும் லிட்​டில் ஆர்​னிக்​கு, “பு​திய குற்​றத் தடுப்பு ஆணை​யர் மெக்​ளூர் கடுமை​யாக நடந்​து​கொள்​வ​தால் சில மாதங்​களுக்​குத் துப்​பாக்​கிச் சூடு எது​வும் நடக்​கக் கூடாது” என்று எச்​சரிக்கை விடுக்​கிறார். ஆனால் அதை மதிக்​காமல், புத்​தாண்டு நள்​ளிர​வில் எதிரி தாதா ஆர்​னி​யின் கிளப்​பில் கொள்​ளை​யடிக்​கும் ரிகோ, குறுக்கே வரும் ஆணை​யர் மெக்​ளூரைச் சுட்​டுக் கொல்​கிறான்.

ஆணை​யர் கொல்​லப்​பட்​ட​தால் காவல்​துறை வெகுண்​டெழுகிறது. புல​னாய்வு அதி​காரி ஃப்​ளஹெர்ட்​டி, தாதாக்​களின் கிளப்​பைச் சுற்றி வளைக்​கிறார். ரிகோ​வின் செயலை வெட்​டோரி கண்​டிக்க, அவனை ஓரங்​கட்​டி​விட்​டுக் கும்​பலின் தலை​வ​னாகிறான் ரிகோ. சக அடி​யாட்​கள் வைர​மும் பிளாட்​டின​மும் பதித்த கைக்​கடி​காரத்​தைப் பரிசளிக்க, புதிய தலை​வ​னான ரிகோ ஆணவத்​தோடு போஸ் கொடுக்​கிறான். தன்​னைக் கொல்ல ஆட்​களை ஏவிய எதிரி தாதா ஆர்​னி​யின் அலு​வல​கத்​துக்கே சென்​று, துப்​பாக்கி முனை​யில் மிரட்டி அவனை ஊரை விட்டே விரட்​டு​கிறான்.

ரிகோ​வின் அசுர ஆதிக்​கத்​தைக் கண்ட பிக் பாய், எந்த பீட் மொன்​டா​னா​வின் விருந்​துச் செய்​தி​யைப் பார்த்து அவன் தாதா ஆக ஆசைப்​பட்​டானோ, அவனிடம் இருந்த வடக்​குப் பகு​தி​யின் முழு அதி​காரத்​தை​யும் ரிகோ​விடமே தரு​கிறார். சாதாரண தெரு​வோரக் கொள்​ளை​ய​னாகத் தொடங்​கிய​வன்

மாளிகை, பகட்​டான உடைகள், கைநிறைய அடி​யாட்​கள் என நிழல் உலக சாம்​ராஜ்​யத்​தின் உச்​சத்​தைத் தொடு​கிறான். இந்​தச் சூழலில் தன் பழைய நண்​பன் ஜோ தன்​னுடன் இருக்க வேண்​டும் என ரிகோ வற்​புறுத்​துகிறான். ஜோ மறுத்​து, இதைத் தன் காதலி ஓல்​கா​விடம் தெரிவிக்க, “ரிகோ இருக்​கும் வரை நமக்கு நிம்​மதி இல்​லை” என்று துணிந்து காவல் அதி​காரி ஃப்​ளஹெர்ட்​டிக்கு ரகசி​யத் தகவல் தரு​கிறாள் அவள்.

ஆத்​திரத்​துடன் ஜோவைச் சுடத் துப்​பாக்​கியை நீட்​டும் ரிகோ​வின் விரல்​கள் நண்​பன் மீதான பாசத்​தால் நடுங்​கு​கின்​றன; அவனால் சுட முடிவ​தில்​லை. அதற்​குள் போலீஸ் சுற்றி வளைக்​கிறது. தாதா கும்​பல் அழிய, ரிகோ மட்​டும் தப்​பியோடி அனாதை​யாகப் பதுங்​கு​கிறான்.

மாதங்​கள் கடக்க, “ரிகோ ஒரு கோழை; பயந்​து​போய்ச் சாக்​கடை​யில் ஒளிந்து கொண்​டான்” என்று பத்​திரி​கை​களில் சவால் விடு​கிறார் அதி​காரி ஃப்​ளஹெர்ட்​டி. இது தனக்​கான வலை என்​பதை உணராமல் ஆத்​திரத்​தில் பொதுத் தொலைபேசியி​லிருந்து மிரட்​டும் ரிகோவை அந்த அழைப்பை வைத்தே போலீஸ் சுற்றி வளைத்து சுடு​கிறது. மரப்​பலகை விளம்​பரத்​துக்​குப் பின்​னால் மறைந்து சுடும் ரிகோ, மெஷின் கன் குண்​டு​களால் துளைக்​கப்​பட்​டுத் தரை​யில் சரி​கிறான்.

அந்​தப் பலகை​யில், நண்​பன் ஜோவும் அவனது காதலி ஓல்கா​வும் சந்​தோஷ​மாக நடன​மாடும் படம்​தான் விளம்​பர​மாக இருக்​கிறது.

நிழல் உலகையே ஆள நினைத்த அந்த தாதா, “கருணை மிகுந்த அன்​னையே, இது​தானா ரிகோ​வின் முடிவு?” என்று முனகிய​வாறே பரி​தாப​மாகத் தன் உயிரை விடு​கிறான். தான் தேர்ந்​தெடுத்த வன்​முறை வாழ்க்​கை​யால் ரிகோ மரணத்​தைத் தழு​வு​கிறான்; அவன் நண்​பன் ஜோவோ, நடனக் கலைஞ​னாகத் தனது கனவை அடைகிறான். இரு​வரின் வாழ்க்​கைப் பாதைகளை​யும் ஒரே விளம்​பரப் பலகை​யில் மோத​விட்​டு, லிட்​டில் சீசர் (1931) படத்​தின் கதை முடிகிறது.

1930-களின் தொடக்​கத்​தில் உரு​வான குற்​றப்​படங்​கள் வன்​முறையைப் பெரு​மைப்​படுத்​துகின்றன என்ற விமர்​சனம் எழுந்​த​தால், “இப்​படம் குற்​ற​வாளி​களை நாயகர்​களாகக் காட்​ட​வில்​லை; அவர்​களின் அழி​வைச் சமூகத்​துக்​கான எச்​சரிக்​கை​யாகவே காட்​டு​கிறது” என்​பதை உணர்த்த தயாரிப்​பாளர்​கள் படத்​தின் தொடக்​கத்​திலேயே, ‘‘...​வாள் எடுக்​கிற எவனும் வாளாலேயே மடி​வான்” என்ற விவிலிய நற்​செய்தி வாசகத்தை (மத்​தேயு 26:52) வைத்​தனர்.

டபிள்​யூ. ஆர். பர்​னெட்​டின் நாவலைத் தழுவி ராபர்ட் என். லீ காட்சி வடிவ​மாக்க, குற்​ற​வாளி​களின் வாழ்​வியலை சமரசமின்​றித் திரைக்​கதை​யாக்​கி​னார் பிரான்​சிஸ் எட்​வர்ட்ஸ் ஃபா​ராகோ. மவுனப் பட பாணி​யைத் துறந்து காட்​சிகளை விறு​விறுப்​பாக நகர்த்​திய இயக்​குநர் மெர்​வின் லீராய், குற்ற உலகின் அசல் குரூரத்​தைத் தத்​ரூப​மாகப் பதிவுசெய்​து, ஆரம்​ப​காலக் கிளாசிக் கேங்க்​ஸ்​டர் திரைப்​படங்​களுக்கு முன்​னோடி​யாக இப்​படத்தை நிலைநிறுத்​தி​னார்.

ஒளிப்​ப​திவு (டோனி கவுடியோ): இருண்ட சந்​துகள், மங்​கிய விளக்​கு​கள் வழியே நிழல் உலகைப் பதிவுசெய்​ததுடன், நிஜத்​தில் உயரம் குறை​வான எட்​வர்ட் ஜி. ராபின்​சனைத் தனது கேமரா கோணங்​கள் மூலம் நிழல் உலகையே அச்​சுறுத்​தும் கம்​பீர​மான ஆளு​மை​யாகக் காட்டி வியக்க வைக்​கிறார்.

படத்​தொகுப்பு (ரே கர்​டிஸ்): காட்​சிகளின் ஓட்​டத்​தை​யும் கதை​யின் வேகத்​தை​யும் நேர்த்​தி​யாகக் கட்​டுப்​படுத்​தி, கொள்​ளை, துரத்​தல், மோதல் போன்ற சம்​பவங்​களில் பதற்​றத்​தைத் தொய்​வின்​றித் தக்​கவைக்​கிறார்.

எட்​வர்ட் ஜி. ராபின்​சன்: உயரம் குறைந்த உரு​வம், அகன்ற முகம், சிறிய கொள்​ளை​ய​னாக இருந்து படிப்​படி​யாக அதி​காரத்​தின் உச்​சிக்கு ஏறும்​போது உடை​யில், நடை​யில், பார்​வை​யிலேயே அதி​காரத்​தைக் காட்​டிய விதம் சிறப்​பு. நண்​பன் ஜோவைச் சுட முடி​யாமல் தவிக்​கும்​போதும் தங்​கும் விடு​தி​யில் செய்​தித்​தாளில் ஒரு​வர் தன்​னைப் பற்றி வாசிக்​கும் செய்​திக்​கேற்ப முகத்​தைச் சுருக்​கி, விரித்​து, உதடு​கள் துடித்​து, கோபம் தலைக்​கேறும் நடிப்​பின் பரி​மாணத்​தில் எம்​.ஆர்​.​ரா​தாவை ஞாபகப்​படுத்​துகிறார்.

டக்​ளஸ் ஃபேர்​பேங்க்ஸ் ஜூனியர்: ஜோ மஸா​ரா​வாக நண்​பனின் ஆதிக்​கத்​துக்கும், காதலியின் நிம்​ம​தி​யான வாழ்க்கை தேடலுக்​கும் நடுவே தவிக்​கும் ஒரு கலைஞனின் போராட் டத்தை மிக இயல்​பாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார்.

கிளெண்டா ஃபாரெல்: நடனப் பெண் ஓல்​கா​வாகக் காதலனைக் குற்ற சாம்​ராஜ்​யத்​திலிருந்து மீட்​கத் துடிக்​கும் பாசத்​தை​யும் அசாத்​தி​யத் துணிச்​சலை​யும் அட்​ட​காச​மாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

வரலாற்​று சீசரை அவனது நண்​பன் புரூட்​டஸின் கத்தி வீழ்த்​தி​யது போல, லிட்​டில் சீசரை அவனது உயிர்த்​தோழன் ஜோ மஸா​ரா​வின் மீதான பாச​மும் பிளவுமே வீழ்ச்​சிக்கு இட்​டுச் செல்​கிறது. திரைப்பட வரலாற்​றில், முழு​மை​யான வடிவத்​தைப் பெற்ற ஆரம்​ப​கால கேங்க்​ஸ்​டர் திரைப்​படங்​களில் ஒன்​றாக ‘லிட்​டில் சீசர்’ இன்​றும் நிலைத்து நிற்​கிறது. எளிய மனிதன் வன்​முறை​யால் சாம்​ராஜ்​யம் அமைத்​தா​லும் அந்​த வன்​முறையேஅவனை அழித்​து​ விடும் என்​ற வாழ்​வியல்​ உண்மையை உணர்த்​தும் இத்​திரைப்​படத்​தை நண்பர்​களு​டன்​ சேர்ந்​து கண்​டு களிக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும் படம் பார்ப்போம்)

லிட்​டில் சீசர் (1931): குற்ற உலகின் அசல் குரூரம் | ஹாலிவுட் மேட்னி 51
விட்னஸ் ஃபார் தி பிராசிக்யூஷன் (1957): ‘கிளைமாக்ஸை சொல்லிவிடாதீர்கள்’ | ஹாலிவுட் மேட்னி 50

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in