

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஹேண்டி (81), தனது காதலியின் மகனால் குத்திக் கொல்லப்பட்டச் சம்பவம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஹேண்டி, 'ஜுமான்ஜி', ‘அன்பிரேக்கபிள்’, ‘த ட்ரிப்’, ‘டாப் கன்: மேவரிக்' உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பல சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஹாலிவுட்டில் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்தார்.
இவர், லாஸ் ஏஞ்சல்ஸின் டார்சானா பகுதியில் உள்ள வீட்டில், தனது காதலி, காதலியின் மகன் மைக்கேல் கிளெட்ஹில் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலை அவர் கொல்லப்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்தனர்.
அப்போது நெஞ்சில் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார் ஜேம்ஸ் ஹேண்டி. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, அவரை கொன்றதும் நீங்கள் தேடும் நபரும் நான் தான் என்று கூறி 44 வயதான மைக்கேல் கிளெட்ஹில் போலீ ஸாரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜேம்ஸ் ஹேண்டியை கொன்றதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.