

வித்யுத் ஜாம்வால் நடித்துள்ள ஹாலிவுட் படம், ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’. இதில், நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கல்லினா லியாங், ஜோ அனோயி, டேவிட் டாஸ்ட்மால்சியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிடாவோ சகுராய் இயக்கியுள்ள இந்தப் படம், பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட், கேப்காம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் வித்யுத் ஜாம்வால், பிரபல கதாபாத்திரமான தல்சிம் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் இப்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
1993-ம் ஆண்டில் நடப்பதுபோன்ற இப்படத்தில், பிரிந்து வாழும் போர் வீரர்களான ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) ஆகியோர், மர்மமான சுன்-லி (கல்லினா லியாங்) அழைப்பை ஏற்று ‘வேர்ல்ட் வாரியர் டோர்னமென்ட்’ என்ற சண்டைப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டிக்குப் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் மறைந்திருப்பதை அவர்கள் கண்டறிகின்றனர். தங்களது கடந்தகால நினைவுகளையும், ஒருவரையொருவர் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. இப்படம் அக்.16-ல் வெளியாகிறது.