‘ஏஞ்சல்ஸ் வித் டர்ட்டி ஃபேஸஸ்’ - 1938: ரத்தம் இல்லாத குற்ற வாழ்க்கை | ஹாலிவுட் மேட்னி 27

‘ஏஞ்சல்ஸ் வித் டர்ட்டி ஃபேஸஸ்’ - 1938: ரத்தம் இல்லாத குற்ற வாழ்க்கை | ஹாலிவுட் மேட்னி 27
Updated on
3 min read

அழுக்கு வீதி​களில் உரு​வான ஒரு கேங்​ஸ்டர், அதே வீதி​களில் வளரும் சிறு​வர்​களின் எதிர்​காலத்​தைக் காப்​பாற்​றத் தனது வீரப் புகழை தியாகம் செய்​யும் படம், ஏஞ்​சல்ஸ் வித் டர்ட்டி ஃபேஸஸ் (ANGELS WITH DIRTY FACES - 1938 ).

1920-களில் நியூ​யார்க் குடிசை பகு​தி​யில் வசிக்​கும் சிறு​வர்​கள் ராக்​கி​யும் ஜெர்​ரி​யும் ரயி​லில் மைப்​பே​னாக்​களைத் திருட முயல்​கின்​றனர். அப்​போது ஜெர்ரி தப்​பிக்க, ராக்கி மட்​டும் போலீ​ஸிடம் சிக்கி சீர்​திருத்​தப் பள்​ளிக்​குச் செல்​கிறான்​.

15 ஆண்​டு​களுக்​குப் பிறகு தாதா​வாகத் திரும்​பும் ராக்​கி, பாதிரி​யா​ராகி​விட்ட தன் பால்ய நண்​பன் ஜெர்​ரியைச் சந்​திக்​கிறான். சிறு​வய​தில் தன்​னிடம் வம்பு செய்த ராக்​கி​யின் தலை​யில் செல்​ல​மாகத் தட்டி வரவேற்​கிறாள் லாரி.

ஜெர்ரி நடத்​தும் உடற்​ப​யிற்​சிக் கூடத்​துக்கு வராமல் தெரு​வில் சுற்​றும் சிறு​வர்​கள் ராக்​கி​யிடம் திருட முயல்​கிறார்​கள். அவனுடைய உண்​மை​யான அடை​யாளத்தை அறிந்த சிறு​வர்​கள் அவனைத் தங்​கள் ‘ஹீரோ​வாக’ ஏற்​கின்​றனர். ராக்​கி​யும் தன் முரட்​டுத்​தன​மான பாணி​யிலேயே அவர்​களுக்கு விளை​யாட்​டைக் கற்​றுக்​கொடுக்​கிறான்.

தன்​னிடம் பண மோசடி செய்ய நினைத்​துத் தன்​னைக் கொல்​லத் திட்​ட​மிட்ட வழக்​கறிஞர் ஃபிரேசி​யரை​யும், அவனது கூட்​டாளி தாதா மேக்​கை​யும் சாமர்த்​தி​ய​மாக மிரட்​டித் தன் ஒரு லட்​சம் டாலரை ராக்கி மீட்​கிறான். அந்​தப் பணத்​தைச் சிறு​வர்​களிடம் கொடுத்து அவர்​களைச் சூதாட்​டம், மது எனத் தவறான பாதைக்​குத் திருப்​பு​கிறான்.

மேலும், ஜெர்​ரி​யின் புதிய ஆலயத்​துக்கு ராக்கி தரும் பத்​தா​யிரம் டாலர் நன்​கொடையை, அது ‘கறைபடிந்த பணம்’ எனக் கூறி ஜெர்ரி ஏற்க மறுக்​கிறார். ராக்​கி​யின் செயல்​களால் ஈர்க்​கப்​பட்டு சிறு​வர்​கள் ரவுடிகளாக மாறு​வதைக் கண்டு ஜெர்ரி கொதித்​தெழுகிறார். லாரி, ஜெர்​ரி​யிடம், “ராக்கி இப்​படி ஆனதற்கு அவன் சிறைக்​குச் சென்று வந்​ததே காரணம்” என்று கூறுகிறாள்.

ஜெர்​ரி, ஊடகங்​கள் மூலம் குற்ற உலகிற்கு எதி​ராக அறப்​போர் தொடங்​கு​கிறார். ஆத்​திரமடைந்த தாதாக்​கள் அவரைக் கொல்​லத் திட்​ட​மிட, நண்​பனைக் காக்க ராக்கி அவர்​களைச் சுட்​டுக் கொல்​கிறான். இதைத் தொடர்ந்து நடக்​கும் பரபரப்​பான போலீஸ் முற்​றுகை​யில், தன்​னிடம் பேச்​சு​வார்த்தை நடத்த வரும் ஜெர்​ரியையே பிணைக் கைதி​யாகப் பிடித்​துத் தப்​பிக்க முயலும் ராக்கி இறு​தி​யில் போலீ​ஸிடம் சிக்​கு​கிறான்.

ராக்​கிக்​குத் தூக்​குத் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது. சிறு​வர்​கள் குற்​ற​வாளி​களாக மாறு​வதைத் தடுக்க, “நீ ஒரு கோழையைப் போலப் பயந்து சாக வேண்​டும்” என ஜெர்ரி அவனிடம் கடின​மான வேண்​டு​ கோளை வைக்​கிறார்.

முதலில் மறுக்​கும் ராக்​கி, மின்​சார நாற்​காலிக்​குச் செல்​லும் இறுதி நொடி​யில் “நான் வாழ வேண்​டும்!” எனக் கதறி அழுது தன் ‘ஹீரோ’ பிம்​பத்தை உடைக்​கிறான். இதைக் கேட்டு அதிர்ச்​சி​யடை​யும் சிறு​வர்​கள் ஜெர்​ரி​யுடன் பிரார்த்​தனைக்​குச் செல்​கின்​றனர்.

ஒரு குற்​ற​வாளி​யின் வாழ்க்கையை வெறும் துப்​பாக்​கிச் சத்​தங்​களாலும், ரத்​தத்​தா​லும் சொல்​லாமல், மனித மனதின் ஆழமான முரண்​பாடு​களை வைத்​துச் சொன்ன கிளாசிக் திரைப்​படம்​தான் இது.

பின்​னாளில் ‘காஸாபிளாங்​கா’ போன்ற காவி​யங்​களை இயக்​கிய மைக்​கேல் கர்​டிஸ், சிறு​வர்​கள் எப்​படி ஒரு கிரிமினலை ஹீரோ​வாகப் பார்க்​கிறார்​கள் என்ற உளவியல் சிக்​கலை மைய​மாகக் கொண்ட ரோலண்ட் பிர​வுனின் கதையை, ஜான் வெக்​ஸ்லி மற்​றும் வாரன் டஃப்​பின் விறு​விறுப்​பான திரைக்​கதை​யில் மிக நேர்த்​தி​யாகத் திரை​யில் செதுக்​கி​யிருக்​கிறார்.

சிறந்த இயக்​குநர், சிறந்த நடிகர் (ஜேம்ஸ் காக்​னி), சிறந்த கதை (ரோலண்ட் பிர​வுன்) என மூன்று அகாடமி விருதுகளுக்கு இப்​படம் பரிந்​துரைக்​கப்​பட்​டது. சமூக நீதிக் கருத்​து​களைத் தைரிய​மாகத் திரை​யில் சொன்ன வார்​னர் பிரதர்​ஸின் பாரம்​பரி​யத்​துக்கு இந்​தப் படம் சிறந்த எடுத்​துக்​காட்​டு.

ஒளிப்​ப​தி​வாளர் சால் பலிட்​டோ, ராக்கி மின்​சார நாற்​காலிக்​குச் செல்​லும்​போது அவனது முகத்​தைக் காட்​டா​மல் சுவரில் விழும் நிழலை மட்​டுமே படமாக்​கிய விதம் உலகத் தரமான நுணுக்​கம்.

படத்​தொகுப்​பாளர் ஓவன் மார்க்​ஸ், ராக்​கி​யின் குற்​றங்​களை​யும் ஜெர்​ரி​யின் பிரச்​சா​ரங்​களை​யும் இணை​யான காட்​சிகளாக வெட்டி கதை​யின் வேகத்தை அரு​மை​யாகக் கூட்​டி​யிருக்​கிறார்.

ஹாலிவுட் பின்​னணி இசை​யின் தந்தை மேக்ஸ் ஸ்டைனரின் இசை, கிளை​மாக்​ஸில் இதயத்தை திக்​திக்​கென துடிக்க வைக்​கிறது. ராக்கி சல்​லிவ​னாக ஜேம்ஸ் காக்​னி​யின் தோள்​பட்​டையைக் குலுக்​கும் மேனரிசம் முதல் கிளை​மாக்​ஸில் கதறு​வது வரை, உண்​மை​யில் பயந்​தா​ரா, நண்​பனுக்​காக நடித்​தாரா என்று பார்​வை​யாளரை குழப்​பத்​தில் ஆழ்த்​தும் அந்த ஒற்​றைக் காட்​சியே அவரது நடிப்​புத் திறனுக்​குச் சான்​று.

பாட் ஓ’பிரையன் (பா​திரி​யார் ஜெர்​ரி): அமை​தி​யான அதே நேரம் உறு​தி​யான நடிப்​பு. தனது பால்ய நண்​பனையே அழிக்க நினைக்​கும்​போது அவர் முகத்​தில் தெரி​யும் குற்ற உணர்ச்​சி​யும், சமூகப் பொறுப்​பும் அற்​புதம்.

ஹம்ப்ரி போகார்ட் (வழக்​கறிஞர் ஃபிரேசி​யர்): ஒரு கோழை​யான, பண ஆசை பிடித்த நயவஞ்சக வழக்​கறிஞ​ராகத் தனது வில்​லத்​தனத்​தைச் சிறப்​பாகப் பதிவு செய்​திருக்​கிறார்.

ஆன் ஷெரிடன் (லாரி மார்ட்​டின்): குற்​ற​வாளி​யுடன் பழகும் பெண்​ணின் தவிப்​பை, அழுத்​த​மாகப் பதிவு செய்​திருக்​கிறார். ‘டெட் எண்ட் கிட்​ஸ்’ எனப்​படும் அந்​தத் தெருச் சிறு​வர்​களின் பங்​கும் அளப்​பரியது.

தாதாவை ‘ஹீரோ​வாக’ கொண்​டாடும் துடிப்​பை​யும், கிளை​மாக்​ஸில் அவன் கோழை​யாக இறந்​து​விட்​டான் என்ற செய்​தி​யைக் கேட்டு ஏமாற்​றத்​துடன் உடைந்து போகும் தவிப்​பை​யும் யதார்த்​த​மாகப் பிர​திபலித்​திருக்​கிறார்​கள்.

அழுக்கு முகங்​களைக் கழு​வித் துடைத்​து, அதன் உள்ளே ஒளிந்​திருக்​கும் தேவதைகளை நமக்​குக் காண்​பித்​த இந்​தத்​ திரைக்​ கா​வி​யத்​துக்​காக, ஓர் அமை​தி​யான மாலைப்​ பொழுதை மகிழ்ச்​சி​யுடன்​ அர்ப்​பணிக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

‘ஏஞ்சல்ஸ் வித் டர்ட்டி ஃபேஸஸ்’ - 1938: ரத்தம் இல்லாத குற்ற வாழ்க்கை | ஹாலிவுட் மேட்னி 27
கண்ணுக்குத் தெரியாதப் போராட்டம் | நட்சத்திரக் குழந்தைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in