‘டெட் எண்ட்’ - 1937: வர்க்கக் கோபம் பேசிய டெட் எண்ட் | ஹாலிவுட் மேட்னி 33

‘டெட் எண்ட்’ - 1937: வர்க்கக் கோபம் பேசிய டெட் எண்ட் | ஹாலிவுட் மேட்னி 33
Updated on
3 min read

குடிசைப் பகுதி சிறு​வ​னாகச் சீர்​திருத்​தப் பள்​ளிக்​குச் செல்​கிறவன், கேங்க்​ஸ்​ட​ராகத் திரும்பி வந்​து, அதே பகுதி சிறு​வர்​களை கெடுக்க நினைக்​கிறான். அவனை, பால்ய சினேகிதன் சுட்​டுக் கொல்​வதே ‘டெட் எண்ட்’ (DEAD END -1937) திரைப்​படத்​தின் ஒரு​வரிக்கதை.

நியூ​யார்க்​கின் கிழக்கு நதிக்​கரை​யில், ஆடம்பர அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் கீழே இருக்​கும் அசுத்​த​மான குடிசைப் பகு​தி​யில் வறுமை​யில் உழலும் டாமி தலை​மையி​லான சிறு​வர்​கள், புதி​தாக வரும் சிறு​வனை அடித்​துப் பணம் பறிக்க, டாமி​யின் அக்கா​வும் தொழிலா​ளர் போராளி​யு​மான டிரீனா அதைத் தடுத்​துப் பணத்தை மீட்​கிறாள்.

சண்​டையை வேடிக்கை பார்க்​கும் ஒரு​வனைத் திட்​டி​விட்​டுச் செல்​கிறாள். ஆனால் அந்த நபர், அதே பகு​தி​யில் வளர்ந்​து, 8 கொலைகளுக்​காகத் தேடப்​படும் கேங்க்​ஸ்​டர் ‘பேபி ஃபேஸ்’ மார்ட்​டின் என்​பது அவளுக்​குத் தெரி​யாது.

பிளாஸ்​டிக் சர்​ஜரி செய்​து​கொண்டு தன் தாய் மற்​றும் பழைய காதலி ஃபி​ரான்​சி​யைக் காண அவன் அங்கு வந்​திருக்​கிறான். தன் பால்ய நண்​பனும் ஏழை ஆர்க்​கிடெக்ட்​டு​மான டேவைச் சந்​திக்​கும் மார்ட்​டின், அவனது வறுமை​யைக் கேலி செய்​வதோடு, குடிசைப் பகுதி சிறு​வர்​களுக்​குக் கத்​தி​யைக் கையாளும் தந்​திரங்​களை​யும் கற்​றுக் கொடுக்​கிறான்.

டேவை, டிரீனா ஒருதலை​யாகக் காதலிக்​கிறாள், அவனோ, ஒரு பணக்​காரனைத் திரு​மணம் செய்​து​கொள்​ளப் போகும் கே பர்​ட​னுடன் சுற்றி வரு​கிறான்.

இதற்​கிடை​யில், மார்ட்​டின், தான் ஆசை​யாகப் பார்க்க வந்த தன் தாயைச் சந்​திக்​கிறான்; ஆனால், “நீ என் மகனே இல்​லை; கொலை​யாளி, இங்​கிருந்து ஓடி​விடு” என்று அவன் முகத்​தில் அறை​கிறார் தாய்.

தன் சிறு​வயதுக் காதலி ஃபி​ரான்சி வறுமை​யின் கொடுமை​யால் பாலியல் தொழிலா​ளி​யாக மாறி, நோயுற்​றுச் சீரழிந்​திருப்​பதை அறிந்​து, அவளுக்​குச் சில டாலர்​களைக் கொடுத்​து​விட்​டுத் தன் பாசம், காதல் அனைத்​தும் வறுமை​யால் சிதைந்​து​விட்​டதை உணர்ந்து மனதள​வில் உடைந்​து​போகிறான்.

அன்று மதி​யம், டாமி​யின் கேங்க், பணக்​காரச் சிறு​வன் பிலிப்​பின் கடி​காரத்​தைப் பறிக்க, அதைத் தடுக்க வரும் அவனது தந்தை கிரிஸ்​வோல்ட்டை கத்​தி​யால் குத்​தி​விட்​டுத் தப்​பு​கிறான் டாமி.

நீதிப​தி​யின் சகோ​தர​ரான கிரிஸ்​வோல்ட் போலீ​ஸாரிடம் டாமியைப் பிடிக்க கூறு​வதைக் கவனிக்​கும் மார்ட்​டின், தன் ஏமாற்ற விரக்​தி​யால் அந்​தப் பணக்​காரச் சிறு​வனைக் கடத்​திப் பணம் பறிக்​கத் திட்​டம் தீட்​டு​கிறான்.

இத்திட்​டத்​தைத் தற்​செய​லாக அறி​யும் டேவ், அதைத் தடுக்க முயல, இரு​வருக்​கும் இடையே நடக்​கும் மோதலில் தப்​பியோடும் மார்ட்​டினை டேவ் சுட்​டுக் கொல்​கிறான். தேடப்​படும் குற்​ற​வாளியை வீழ்த்​திய டேவுக்​குப் பாராட்​டு​களு​டன் பரிசுத்​தொகை​யும் கிடைக்​கிறது.

போலீஸ் டாமியைத் தேடி வரும்​போது டிரீனா தம்​பி​யுடன் ஓடி​விடத் துணி​கிறாள். “இப்​படி ஓடி​னால் இவனும் மற்​றொரு மார்ட்​டி​னாகத்​தான் மாறு​வான்” என்று டேவ் தடுத்து நிறுத்த, டாமி சரணடைகிறான்.

கிரிஸ்​வோல்ட் அவனைச் சீர்​திருத்​தப் பள்​ளிக்கு அனுப்ப முயலும்​போது குறுக்​கிடும் டேவ், “அன்று இதே குடிசை பகு​தியி​லிருந்து சீர்​திருத்​தப் பள்​ளிக்​குச் சென்ற மார்ட்​டின்​தான் இன்று கேங்க்​ஸ்​ட​ராகச் செத்து விழுந்​தான்; உங்​கள் சட்​டங்​கள் ஏழைகளைச் சீர்​திருத்​து​வ​தில்​லை, அவர்​களைக் குற்​ற​வாளி​களாக்குகின்​றன!” என்று வர்க்க அரசி​யலைப் பேசுகிறான்.

டேவ் தன் பணக்​காரக் காதலி கே-​விடம் “நம் உலகங்​கள் வேறு” என்று அவளைத் தவிர்த்​து​விட்​டு, டிரீ​னா​வுடனேயே வாழ முடி​வெடுக்​கிறான். டாமி அழைத்​துச் செல்​லப்​பட்ட பின், அந்​தச் சிறு​வர்​கள் “சிறகு​கள் முளைத்​திருந்​தால் இந்​தச் சிறைச்​சுவரை விட்​டுப் பறந்​திருப்​போம்​...” என்று சோக​மாகப் பாடியபடி இருண்ட பகு​திக்​குள் மறை​கிறார்​கள்.

அந்​தப் பாடல் வரி​கள் வெறும் கவிதை அல்ல — சிறகு​களே முளைக்​காமல் செய்​யும் சமூக அமைப்​பின் மீதான அழுத்​த​மான குற்​றச்​சாட்​டு என்று உணர்த்​து​வது​போல் கேமரா அப்​பகு​தியி​லிருந்து மேல்​நோக்கி நகர்ந்து அடுக்​கு​மாடி கட்​டிடங்​களுக்​குள் மறை​கிறது.

புலிட்​சர் பரிசு பெற்ற சிட்னி கிங்​ஸ்​லி​யின் நாடகத்​தை, தீவிர இடது​சாரி பெண் எழுத்​தாள​ரான லிலியேன் ஹெல்​மேன் கூர்​மை​யான வர்க்​கப் போராட்ட திரைக்​கதை​யாக்க, சாமுவேல் கோல்ட்​வினின் தயாரிப்​பில், இதனை உயிர்ப்​புள்ள உன்னத காவிய​மாக இயக்​கிக் காட்​டி​னார் மாபெரும் இயக்​குநர் வில்​லி​யம் வைலர்.

ஹெல்​மேன் இதில், ஆடைத் தொழிற்​சாலை போராளி​யான டிரீ​னா, வறுமை​யின் விரக்​தி​யில் இருக்​கும் ஆர்க்​கிடெக்ட் டேவ், வறுமை​யால் சீரழிந்த ஃபி​ரான்சி என ஒவ்​வொரு பாத்​திரத்​தின் வழியே​ வர்க்க எதார்த்​தத்தை அப்​பட்​ட​மாகப் பேச வைத்​தார்.

‘குற்​றம் என்​பது தனிமனிதப் பிரச்​சினை அல்ல; அது பசி​யை​யும் வறுமை​யை​யும் உரு​வாக்​கும் முதலா​ளித்​துவ சமூக அமைப்​பின் நோய்’ என்று ஹாலிவுட்டின் முகத்​தில் அடித்​தாற்​போல் தன் திரைக்​கதை​யின் மூலம் அழுத்​த​மாக எழு​தி​னார்.

கலை இயக்​குநர் ரிச்​சர்ட் டே, குறுகிய தெருக்​கள், இருண்ட சந்​துக்​கள், ஏழைக் குடி​யிருப்​பு​களை​யும், அவற்​றின் அரு​கிலேயே ஒளிரும் செல்​வந்​தர்​களின் மாளி​கைகளை​யும் ஸ்டூடியோவுக்​குள் உயிரோட்​ட​மாக உரு​வாக்​கி​னார்.

புகழ்​பெற்ற ஒளிப்​ப​தி​வாளர் கிரெக் டோலண்ட் ஒளி​யும் நிழலும் கலந்த ‘சி​யாரோஸ்​குரோ’ (Chiaroscuro) பாணியை இதில் நேர்த்​தி​யாகப் பயன்​படுத்​திக் குடிசைப் பகு​தி​யின் இருளை​யும், பணக்​காரர்​களின் ஒளிரும் மாளி​கை​யை​யும் மிகத் துல்​லிய​மாகக் காட்​டி​யிருக்​கிறார்.

படத்​தொகுப்​பாளர் டேனியல் மாண்​டெல், தெரு​வில் ஏழைப் பெண் பசி​யால் பன் திருடு​வதை​யும், மாடி​யில் பணக்​காரச் சிறு​வன் பூந்​தொட்​டி​யில் பாலை ஊற்றி வீணாக்​கு​வதை​யும் அடுத்​தடுத்து வெட்​டி, வர்க்​கக் கோபத்​தைக் காட்​சி ரீ​தி​யாகக் கடத்​தி​யிருக்​கிறார்.

ஆல்ஃப்​ரெட் நியூமேனின் இசை குடிசைப் பகு​தி​யின் சோகத்​தை​யும் வறிய நிலையை உணர்த்​தும் பின்​னணி​யாக மட்​டுமே கச்​சித​மாகப் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

மேடை நாடகத்​தில் நடித்த அதே சிறு​வர்​கள் திரைப்​படத்​தி​லும் தங்​களின் தேர்ந்த நடிப்பை வெளிப்​படுத்​தி, சமூகச் சிதைவு​களின் குறி​யீடு​களாக வாழ்ந்​துள்​ளனர்.

ஜோயல் மெக்​ரே: பொருளா​தார மந்​தநிலை​யிலும் நம்​பிக்​கை​யிழக்​காமல், சமூகப் பொறுப்​புடன் வாழும் ஆர்க்​கிடெக்ட் டேவ் பாத்​திரத்​தில் நேர்த்​தி​யாக நடித்​துள்​ளார்.

ஹம்ப்ரி போகார்ட்: 8 கொலைகள் செய்த தேடப்​படும் கேங்க்​ஸ்​ட​ராக, தன் கடந்த காலப் பாசத்​தைத் தேடிவந்து ஏமாறும் மார்ட்​டின் பாத்​திரத்​தில், சிறந்த நடிப்பை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

சில்​வியா சிட்னி (டிரீ​னா): தம்​பி​யின் எதிர்​காலத்​துக்​காக​வும் தொழிலா​ளர் உரிமைக்​காக​வும் போராடும் அதேவேளை​யில், டேவ் மீதான காதலை​யும், தன் எதார்த்த நடிப்​பால் கண்​முன்னே நிறுத்​துகிறார்.

வென்டி பார்ரி (கே பர்​டன்): வறுமைக்கு அஞ்சி பணக்​காரனின் பாது​காப்பை ஏற்​றுக் கொண்​ட​வள். டேவிடம் அவள் காண்​பது காதல் அல்ல, உயிர்​வாழ்​வின் உடன்​படிக்கை மட்​டுமே.

கிளை​யர் ட்ரெவர் (ஃபிரென்​சி): நோயுற்​றுச் சீரழிந்த பாலியல் தொழிலா​ளி​யாக ஒரே ஒரு காட்​சி​யில் வந்​தா​லும், தன் கண்​கள் மூலம் பார்​வை​யாளர்​களின் மனதில் அழி​யாத காயத்​தைப் பதித்​துச் செல்​கிறார்.

குற்​ற​வாளி​களை வெறும் சட்​டம்​-ஒழுங்கு பிரச்​சினை​யாக மட்​டுமே அணுகும் வழக்​க​மான வணி​கக் குற்​றப் படங்​களுக்கு மத்​தி​யில், ‘வறுமை​யும் சமூகக் கட்​டமைப்​பும்​தான் குற்​ற​வாளி​களைப் பெற்​றெடுக்​கின்​றன; குடிசைப் பகு​தி​யின் இருள் சூழ்ந்த ‘டெட் எண்ட்’ (முட்​டுச்​சந்​து) என்​பது வெறும் புவி​யியல் எல்லை அல்ல; அது ஏழைகளின் வாழ்வை முடக்​கும் முதலா​ளித்​து​வத்​தின் வேலி’ என்​பதை உரக்​கப் பேசிய உன்​னதப் படைப்​பான இத்​திரைப்​படத்தை தாராள​மாகப் பார்க்​கலாம்.

(செவ்​வாய் தோறும் படம் பார்​க்​கலாம்​)

- ramkumaraundipatty@gmail.com

‘டெட் எண்ட்’ - 1937: வர்க்கக் கோபம் பேசிய டெட் எண்ட் | ஹாலிவுட் மேட்னி 33
‘டச் ஆஃப் ஈவில்’ - 1958: மூழ்கும் நீதியின் இருண்ட முகம் | ஹாலிவுட் மேட்னி 32

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in