

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக அளவில் வசூல் சாதனை படைத்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துக்குப் பிறகு, கடந்த 7 ஆண்டுகளாக மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் கட்டமைத்து வந்த மல்டிவெர்ஸ் கதைக் களத்தின் உச்சகட்டமாக உருவாகியுள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சினிமாகான் விழாவில் மட்டும் பிரத்யேகமாகக் காட்டப்பட்ட இந்த ட்ரெய்லர், தற்போது அதிகாரபூர்வமாகப் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே, அயர்ன் மேன் பாத்திரத்தின் மூலம் மார்வெல் உலகின் முகமாக விளங்கி, 'எண்ட்கேம்' படத்தில் உயிரிழந்ததாக காட்டப்பட்ட ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் மார்வெல் உலகிற்குள் நுழைந்திருப்பதுதான். ஆனால், இம்முறை அவர் ஹீரோவாக அல்லாமல், மல்டிவெர்ஸ் உலகையே அழிக்கத் துடிக்கும் மிகக் கொடூரமான வில்லனான 'டாக்டர் டூம்' பாத்திரத்தில் களம் இறங்கியுள்ளார்.
ட்ரெய்லர் எப்படி? - மல்டிவெர்ஸ் போருக்கு எதிராக அனைத்து மார்வெல் சூப்பர் ஹீரோக்களும் திரண்டு வரும் காட்சிகளால் ட்ரெய்லர் நிறைந்துள்ளது. குறிப்பாக, 'எண்ட் கேம்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் 'கேப்டன் அமெரிக்கா' பாத்திரத்தில் கிறிஸ் எவான்ஸ்மீண்டும் திரும்பியுள்ளார். ட்ரெய்லரில் தோர் மற்றும் கேப்டன் அமெரிக்கா மீண்டும் இணையும் காட்சிகள் ஈர்க்கின்றன.
இதுதவிர, 'எக்ஸ்-மென்' கதாபாத்திரங்களான ப்ரொஃபெசர் எக்ஸ், மேக்னடோ, சைக்ளோப்ஸ் மற்றும் கேம்பிட் ஆகியோரும் அவெஞ்சர்ஸ் அணியுடன் இணைகிறார்கள். இவர்களுடன் அண்மையில் அறிமுகமான 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' மற்றும் 'தண்டர்போல்ட்ஸ்' குழுவினரும் இணைந்து மல்டிவெர்ஸைக் காக்கப் போராடுகின்றனர்.
'இன்பினிட்டி வார்' மற்றும் 'எண்ட்கேம்' போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் மீண்டும் இந்த அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கி உள்ளானர். 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' வரும் டிசம்பர் 18 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.