இந்தியாவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ஸ்பைடர்மேன்

இந்தியாவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ஸ்பைடர்மேன்
Updated on
1 min read

இந்தியாவில் வெளியான நான்கு நாட்களில் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் வசூல் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

மார்வெல் - சோனி கூட்டுத் தயாரிப்பில் மூன்றாவது படமாக 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' கடந்த டிச.16 அன்று வெளியானது. மார்வெல் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால் படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. டிக்கெட் முன்பதிவு தொடங்கியபோது உலகமெங்கும் டிக்கெட் புக்கிங் தளங்கள் முடங்கும் அளவுக்கு ஒருசில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இந்நிலையில் படம் இந்தியாவில் வெளியான ஒரே நாளில் ரூ.32.67 கோடி வசூல் செய்தது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு முதல் நாளில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹாலிவுட் படமும் இதுவாகும்.

தற்போது இந்தியாவில் வெளியான நான்கு நாட்களில் ரூ.109 கோடி வசூலித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிச. 20) மட்டும் ரூ.30 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. அதேபோல உலக அளவில் 253 மில்லியன் அமெரிக்க டாலர்களை 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' வசூலித்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் முதல் வாரத்தில் ரூ.357.1 மில்லியன் டாலர்கள் வசூலித்து ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ (257.17 மில்லியன்) இருக்கிறது. அந்தவகையில் தற்போது உலக அளவில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த மூன்றாவது படம் என்ற சாதனையை 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' தக்கவைத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in