Last Updated : 03 Mar, 2016 09:02 AM

 

Published : 03 Mar 2016 09:02 AM
Last Updated : 03 Mar 2016 09:02 AM

காட்டலாங்கோ லியோன்: ஆஸ்கர் விருது வென்ற தமிழரும் மங்காத தமிழார்வமும்!

ஹாலிவுட் திரையுலகின் உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதினை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனை பிரிவுக்காக தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.

இவருக்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். தற்போது, காட்டலாங்கோ லியோன், ஆஸ்கர் வென்ற இரண்டாவது தமிழர் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28-ம் தேதி (பிப்.28) நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் லியோனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகமே லியார்னாடோ டி கேப்ரியோவுக்கு விருது கிடைத்ததை சிலாகித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த காட்டலாங்கோ லியோன் என்பவர் பெருமைக்குரிய அகாடமி விருதைப் பெற்றது தாமதமாகவே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனது இந்தப் பதிவும் அப்படிப்பட்டதுதான்.

'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை' (Scientific and Technical Achievements) பிரிவில் காட்டலாங்கோ லியோன் 2016-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். சோனி பிக்சர்ஸின் இமேஜ் ஒர்க்ஸ் பிரிவில் பணியாற்றும் இவர் (itview) புதிய மென்பொருளை கண்டுபிடித்ததற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். சாம் ரிச்சர்ட்ஸ், ராபர்ட் ஜே ஆகியோருடன் லியோன் விருதை கூட்டாக பெற்றுள்ளார்.

திரைப்படத்தை பகுதி, பகுதியாக ஆய்வு செய்வதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவிகரமாக இருப்பதாக பல்வேறு கலைஞர்களும் தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த காட்டலாங்கோ லியோன், கோவையில் வளர்ந்தார். அமெரிக்காவின் மேசசுஸட்ஸ் நகரில் மேற்படிப்பை பயின்றார். பின்னர் சோனி இமேஜஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

விருது பெற்ற அவர், "நான், மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அளித்து வந்த தொடர் அன்பும் ஆதரவும் எனக்கு ஊக்கமளித்தன. இந்த விருதினை எனது பெற்றோருக்கு நான் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை எனக்கு உணர்த்துகிறது. அனைவருக்கும் நன்றி" என்று ஆங்கிலத்தில் நன்றி ஏற்புரை கூறி முடிக்கும்போது "எல்லாருக்கும் நன்றி" என தமிழில் பேசினார். அப்போது, ரஹ்மானின் 'எல்லா புகழும் இறைவனுக்கே' சொற்றொடர் நினைவுக்கு வந்தது.

ஆஸ்கர் விருது தேர்வானது குறித்து கடந்த ஜனவரியில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் தொலைபேசி மூலம் அளித்த > பேட்டியில், "இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சந்தையில் இதுபோன்ற மென்பொருள்கள் கிடைத்தாலும், எங்களது தயாரிப்பு மிகவும் நன்றாக இருப்பதாக நடிகர்கள் பலர் என்னிடம் தெரிவித்திருக்கின்றனர்" எனக் கூறியிருந்தார்.

விருது பெற்றது குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை எஸ்பிஎஸ் ரேடியோ ஒலிபரப்பு நிறுவனத்துடன் காட்டலாங்கோ லியோன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்தப் பேட்டியின் சுருக்கம்:

தூத்துக்குடியில் பிறந்த நான். கோவையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தேன். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். கல்லூரி படிப்பை முடித்ததுமே தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர், அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்தேன்.

நான் பணிக்குச் சேர்ந்த புதிதில்தான் ஜூராசிக் பார்க் போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் வெளியாகி உலகளவில் பிரபலமடைந்திருந்தன. அதுவே எனக்கு அனிமேஷன் துறையை தேர்வு செய்ய தூண்டுதலாக இருந்தது. நான் சோனி இமேஜஸில் வேலைக்கு சேர்ந்தவுடன் எனக்கு அளிக்கப்பட்ட முதல் பணியே திரைப்படத்துறைக்கான பிரத்யேக மென்பொருளை உருவாக்குவதே.

அப்படித்தான் இட்வியூ (itview) மென்பொருள் உருவாக்கப்பட்டது. திரைப்படத்துறையில் நேர விரயத்தை தவிர்க்க இந்த மென்பொருள் மிக உதவியாக இருக்கிறது.

திரைப்பட தொழில்நுட்பம் என்பது ஒரு குறிப்பிட்ட திரைப்படத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. எனவே தான் தொழில்நுட்ப பிரிவுக்கான விருதினை தனியாக முன்னரே வழங்கிவிடுகின்றனர். இந்த விருதுக்கான அறிவிப்பு ஒரு வருடதுக்கு முன்னரே வெளியாகிவிடும், அதன் அடிப்படையில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் விண்ணப்பிக்கும். தேர்வாளர்கள் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து விருதினை அறிவிப்பர் என விவரித்தார்.

நன்றி மறக்காத லியோன்:

தனக்கு இந்த விருது கிடைப்பதற்கு பலரையும் நினைவு கூர்ந்த லியோன், "எனது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திலகவதி, தொழிலதிபர் வரதராஜன், எனது நண்பர் நடராஜன் ஆகியோரை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். நான் அப்ளைடு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் எனத் தூண்டியதே என் ஆசிரியர் திலகவதி தான்" என்றார்.

தமிழ் சினிமாவும் லியோனின் பார்வையும்:

:தமிழ் சினிமாக்களை அதிகளவில் ரசித்துப் பார்ப்பதாகக் கூறிய லியோன், "தொழில்நுட்ப ரீதியாக செலவு போன்ற சில நெருக்கடிகளால் தமிழ் சினிமா ஹாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டிபோட முடியவில்லை என்றாலும் கதை, கரு ரீதியாக தமிழ் சினிமாக்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. நிறைய புதுமுக நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் உருவாகி வருகின்றனர். தமிழ் சினிமா இப்போது இருப்பது போலவே இருந்தாலே நன்றாக இருக்கும்" என்றார்.

அடுத்த தலைமுறைக்கு தமிழ் அவசியம்:

20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்தாலும் அழகாக தமிழ் பேசும் லியோன், அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மிகவும் அவசியம். எனவே, தன் மகள் தமிழ் பேச, எழுத ஊக்குவிப்பதாகக் கூறினார். லாஸ் ஏஞெல்ஸில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகவும் அவர் பணியாற்றுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அந்த பேட்டியின் ஒலி வடிவம்: