

அஞ்சலி: என்னியோ மாரிக்கோனி
இசையின் வசமானவர்கள் நாம். எங்கெல்லாம் ஆன்மாவை ஊடுருவும் இசையும் போராட்ட குணத்துக்கான ஊக்கத்தைத் தரும் துள்ளலும் துடிப்பும் மிக்க இசையும் வழிந்தோடுகிறதோ, அங்கெல்லாம் போய் கலைஞர்களை அடையாளம் கண்டுகொள்வோம். அவர்களின் இசையை ரசிக்க மொழி நமக்குத் தடையாக இருந்ததில்லை. சமீபத்தில் மறைந்த இத்தாலிய இசை மேதை என்னியோ மாரிக்கோனி அப்படிப்பட்ட உலகக் கலைஞர். அவரைப் பற்றி சிறிதும் நாம் எண்ணவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பற்றிய ஒரு இரங்கல் குறிப்பைக் கூட முகநூலில் காண முடியவில்லை.
கரோனா பெருந்தொற்றின் அழுத்தம் தாண்டி, பெண் குழந்தைகள், சிறுமிகள் மீதான தொடர் பாலியல் வன்முறைச் செய்திகள் பொதுமனநிலையைப் பெரிதும் தொந்தரவு செய்து வருவதும் கூட பெரிய ஆளுமைகளின் மரணங்களை நாம் இலகுவாகக் கடந்து செல்ல காரணமாக இருக்கலாம். இருப்பினும் அந்த மாபெரும் கலைஞனை நினைவுபடுத்தாமல் விட்டுவிட மனமில்லை.
என்னியோ, எனக்கு முதலில் அறிமுகமானது ‘சினிமா பாரடைஸோ’ படத்தின் வழியாக. பர்மா பஜாரில் 30 ரூபாய் கொடுத்து வாங்கும் உலக சினிமா டிவிடிக்களைப் பரிமாறிக்கொள்வதும், வார நாட்களில் யார் எத்தனை உலகப் படங்களைப் பார்ப்பது என்பதில் போட்டியும் இருந்த 20 வருடங்களுக்கு முந்தைய காலம் அது. ‘சினிமா பாரடைஸோ’, ‘மலேனா’, ‘காட் ஃபாதர்’, ‘சில்ட்ரன் ஆஃப் ஹேவன்’, ‘த கலர் ஆஃப் பாரடைஸ்’, ‘சைக்கோ’, ‘ஸ்பிரிங் சம்மர் ஃபால் விண்டர் அண்ட் ஸ்பிரிங்’, ‘பதேர் பாஞ்சாலி’, ‘எலிப்பத்தாயம்’ போன்ற டிவிடிக்கள் கோடம்பாக்கத்தின் பேச்சிலர் அறையில் கிடந்தால் அந்த அறையில் ஒருவரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களோ ஒண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். அப்படித்தான் எனது அறையின் உதவி இயக்குநர் வழியாக ‘சினிமா பாரடைஸோ’ எனக்கு அறிமுகமானது.
வெள்ளித்திரைக்கும் மனித வாழ்க்கைக்குமான உறவின் அனைத்துப் பரிமாணங்களையும் கொண்டாட்டமாகச் சொன்ன இத்தாலியத் திரைப்படம் ‘சினிமா பாரடைஸோ’. சினிமா பாரடைஸோ எனும் திரையரங்கில் படம் காட்டும் ஆபரேட்டர் ஆல்பர்ட்டோவையும் அவரது தோழமையை வென்றெடுக்கும் சிறுவன் டோட்டோவையும் சுற்றிப் பின்னப்பட்ட, நகைச்சுவையும் கண்ணீரும் கலந்த ஆழமான உணர்ச்சிகளின் ‘கல்ட்’ காவியமாக அதைப் படைத்திருந்தார் இயக்குநர் தொர்னதோரே. ஆனால், அவரது திரைக்கதையை, நெறியாள்கையை மீறி நின்றது தனது மகனுடன் இணைந்து அந்தப் படத்துக்கு என்னியோ மாரிக்கோனி வழங்கியிருந்த பின்னணி இசையும் தீம் இசையும். கதாபாத்திரங்கள் கடந்து வரும் காலப் பயணத்தின் உணர்வு நிலைகளை அவரது இசை நமக்கும் கடத்தியது. பியானோ, வயலின், குழலிசை என என்னியோ அந்தப் படத்துக்குத் தேர்ந்துகொண்ட கருவிகளின் இசை, இன்னமும் கூட மனதின் நரம்புகளை மீட்டிக் கொண்டிருக்கிறது. ‘சினிமா பாரடைஸோ’ தந்த தாக்கம், ‘ஆட்டோகிராஃப்’, ‘அழகி’, ‘வெயில்’ தொடங்கி இன்றைய ‘96’ வரை இங்கே நீள்கிறது.
அதன்பின் என்னியோ இசையமைத்த படங்களைத் தேடிப்போய் வெஸ்டர்ன் படங்களை அடைந்ததும் என்னியோ இசையமைத்த வெஸ்டர்ன் படங்களில் ஒரு மர்மக் கதாபாத்திரம் போல படம் நெடுகிலும் அவரது இசை செலுத்திய ஆதிக்கமும் கண்டு, அரண்டு மிரண்டு போனதுண்டு. வெஸ்டர்ன் படங்கள் மீதான ஈர்ப்பு, மேம்பட்ட மசாலா ரசனை என்ற புரிதல் வந்தபோது, அப்படிப்பட்ட படங்களுக்கு அசலான உந்துதல் தந்த அகிராவின் படங்களை அடைந்ததும் என்னியோவின் இசை வழியாகத்தான். இத்தாலியில் பிறந்து ஹாலிவுட்டின் முதல் தரமான இசையமைப்பாளராக என்னியோ மாரிக்கோனி உயர முடிந்தது என்றால், அதற்குக் காரணம், இசையை அவர் ஒரு குறுக்கீடாகப் பயன்படுத்தாமல், உணர்வுகளின் துல்லியமான பதிலீடாகப் பயன்படுத்தியதுதான். அப்படியிருந்தும் அவருடன் சண்டை பிடித்திருக்கிறார் ஒரு குறும்புக்கார ஹாலிவுட் இயக்குநர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவில் தீவிரமாக நிலவிய சமூக அவலங்களில் முக்கியமானது நிறவெறியும் அதன் வெளிப்படையான கருப்பின ஒடுக்குமுறையும். இதைப் பின்னணியாகக் கொண்டு க்வென்டின் டரான்டினோ 2012-ல் இயக்கிய படம் ‘ஜாங்கோ அன்செய்ன்ட்’. கருப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ஒரு சுவாரசியமான வெஸ்டர்ன் மசாலாவாக க்வென்டின் டரான்டினோ மாற்றியிருந்தார். நிஜ வாழ்க்கையில் மனிதநேயமும் சுற்றுச்சூழல் நேயமும் மிக்க லியானர்டோ டிகாப்ரியோ இந்தப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்து ஆச்சர்யப்படுத்தியிருந்தார்.
இப்படத்துக்கு என்னியோ அமைத்திருந்த இசையைச் சீர்மையின்றி டரான்டினோ துண்டாடிப் பயன்படுத்திக்கொண்டார். இதனால் கோபம் கொண்ட என்னியோ மாரிக்கோனி, ‘உனது படங்களுக்கு இனி இசையமைக்கமாட்டேன் போ’ என்று நம் இசைஞானியைப் போலக் கோபித்துக்கொண்டு போய்விட்டார். பின்னர் மிஷ்கின், ராஜாவைத் தேடிப்போய் கட்டியணைத்து, செல்லம் கொஞ்சி, முத்தம் கொடுத்து ‘சைக்கோ’ படத்துக்கு இசையமைக்கச் செய்தது போல, தனது ‘தி ஹேட்புல் எய்ட்’ படத்துக்கு என்னியோ மாரிக்கோனியை இசையமைக்க வைத்தார் டரான்டினோ. இசை யாரிடம் வசிக்கிறதோ அவரைத் தேடிப்போய்தானே அதை வரமாகப் பெற்றுக் கொள்ள முடியும். என்னியோ வழங்கிய இசை மொத்தமும் மனித மனங்களுக்கு உரமும் வரமும்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in