அலறும் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள்: கரோனாவால் நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்

அலறும் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள்: கரோனாவால் நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்
Updated on
1 min read

கரோனோ வைரஸ் தொற்று காரணமாக ஹாலிவுட்டில் தயாரிப்பில் இருக்கும், கிட்டத்தட்ட அனைத்துத் திரைப்படப் படப்பிடிப்புகளும் ரத்து செயப்பட்டுள்ளன.

மார்வல் நிறுவனத்தின் 'ஷாங்க் சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்', டிஸ்னியின் வெப் சீரிஸ் 'லோகி அண்ட் வாண்டா விஷன்', திரைப்படங்கள் 'தி லிட்டில் மெர்மெய்ட்', 'தி லாஸ்ட் டூயல்', 'ஹோம் அலோன்', 'நைட்மேர் ஆலி', 'பீட்டர் பேன் அண்ட் வெண்டி' மற்றும் 'ஷ்ரங்க்' ஆகிய தயாரிப்புகளின் படப்பிடிப்புகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

வார்னர் ப்ரதர்ஸ் தரப்பில் 'தி பேட்மேன்', 'ஜுராஸிக் வேர்ல்ட் டாமினியன், ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' ஆகிய திரைப்படப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 'ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்தின் வெளியீடு இந்த வருடம் நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு கியானு ரீவ்ஸின் 'மேட்ரிக்ஸ்', நெட்ஃபிளிக்ஸின் 'ரெட் நோட்டீஸ்' ஆகிய படப்பிடிப்புகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன.

'ரெட் நோட்டீஸ்' படத்தில் நடித்து வரும் ட்வைன் ஜான்சன் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "எங்களுது நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பான 'ரெட் நோட்டீஸ்' படத்தின் படப்பிடிப்பை இந்த திங்கட்கிழமையிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கிறோம். நேரடியாக எங்கள் படக்குழுவிடம் இது குறித்து தெளிவும், வழிகாட்டுதலும் கொடுக்க முடிந்தது எனக்குப் பெருமை. ஏனென்றால் இப்போது அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒவ்வொருவரையும் அவரவர் குடும்பங்களிடம் கொண்டு சேர்ப்பதே" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதோடு நிறைய பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் வெளியீடுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பு எப்போது முடியும், மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது இதுவரை கணிக்க முடியாத ஒன்றாக இருப்பதால் கரோனாவால் வியாபார ரீதியாக இந்த வருடம் ஹாலிவுட்டில் பேரழிவு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in