

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட விருது விழாவான ஆஸ்கர் நிகழ்வு மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்திருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தபடியே கிறிஸ்டோபர் நோலனில் ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட ஏழு விருதுகளை வென்றுள்ளது. ஆனால், மார்ட்டின் ஸ்கார்செஸியின் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ (Killers Of The Flower Moon) படத்துக்கு ஒரு விருது கூட வழங்கப்படாதது, படக்குழு மட்டுமல்லாமல் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
ஆஸ்கர் விழா தொடங்கும்போதே இதற்கான குறியீடு வைக்கப்பட்டதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. பிரபல நகைச்சுவை கலைஞரும், ஆஸ்கர் தொகுப்பாளருமான ஜிம்மி கிம்மல் தன்னுடைய உரையின் இடையே ஸ்கார்செஸியை நோக்கி, “இந்த ஆண்டு வெளியான உங்கள் படம் மிக நீளமாக இருக்கிறது” என்றார். மேலும் ‘அப்படத்தை பார்க்கும் நேரத்தில் நேரடியாக ஒக்லஹாமாவுக்கு காரை ஓட்டிச் சென்று ஓசேஜ் நேஷன் கொலைகளை நாமே கண்டுபிடித்து விடலாம்” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
1920-களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேசன் என்ற பகுதியில் அமெரிக்காவின் பூர்வக்குடிகளான செவ்விந்தியர்கள் மீது அமெரிக்கர்கள் நிகழ்த்திய தொடர் படுகொலைகளை அடிப்படையாகக் கொண்டு 2017-ஆம் ஆண்டு டேவி கிரான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தை தழுவி, அதே பெயரில் மூன்றரை மணி நேர திரைப்படமாக பெரிய திரையில் வடித்திருந்தார் மார்ட்டின் ஸ்கார்செஸி.
வெள்ளையர்களால் படுநேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த படுகொலைகளைப் பற்றி ஹாலிவுட்டில் எந்த திரைப்படமும் இதுவரை பேசியதில்லை. ஸ்கார்செஸி இதைப் பற்றி முதல் முறையாக துணிச்சலுடன் பேசிய ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ திரைப்படம் நிச்சயமாக இந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படமென்றாலும் கூட, ஒரு இடத்தில் கூட தேவையற்ற காட்சிகளோ, வசனங்களோ இல்லாமல் படு நேர்த்தியான திரைமொழியுடன், குழப்பமில்லாத திரைக்கதையுடன் உருவாக்கப்பட்ட இப்படம், ஆஸ்கர் மேடையில் மிகவும் நியாயமற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள் என்ன?- ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ படத்துக்கு ஒரு ஆஸ்கர் விருது கூட வழங்கபடாததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆஸ்கர் விருதுக் குழுவில் இருக்கும் 10 ஆயிரம் வாக்காளர்கள் பலரும் மார்ட்டின் ஸ்கார்செஸியின் அபிமானிகளாக இல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். காரணம், இதுவரை 16 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்செஸி, விருது வென்றது ஒருமுறை மட்டுமே. 2006ஆம் ஆண்டு வெளியான ’தி டிபார்ட்டட்’ படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஸ்கார்செஸியின் முந்தைய படமான ‘தி ஐரிஷ்மேன்’ (2019) 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு ஒரு விருது கூட வழங்கப்படாமல் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. அப்படத்தின் புரமோஷன்களின் போது டிஸ்னி / மார்வல் படங்கள் குறித்து அவர் கூறிய கருத்துகள் அதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் அதுதான் காரணம் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், ஆஸ்கர் விழாவில் டிஸ்னியின் ஆதிக்கமும் இந்த சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது.
மற்றொரு காரணமாக சொல்லப்படுவது படத்தின் நீளம். மூன்று மணி நேரம் 26 நிமிடங்கள் என்றாலும் கூட, இது ‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தை விட வெறும் 26 நிமிடங்களே அதிகம். இன்னும் சொல்லப்போனால் ‘ஒப்பன்ஹெய்மர்’ பல இடங்களில் ஒரு இயற்பியல் வகுப்புக்குள் நுழைந்ததைப் போல இருந்ததாக புகழ்பெற்ற சினிமா விமர்சகர்களே கூறிய நிலையில், ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ எந்த இடத்திலும் நெளிய வைக்கவில்லை. வாசிக்க > ‘Killers Of The Flower Moon’ Review: நேர்த்தியான திரை மொழியில் வரலாற்றுத் துயரமும், ‘மூவர்’ மீதான ஈர்ப்பும்!
மற்றொரு காரணம், அமெரிக்காவின் மோசமான வரலாற்றை ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ பேசிய விதம். ’ஒப்பன்ஹெய்மர்’ படமே கூட அப்படியானதுதான் என்றாலும், அது எந்த இடத்திலும் நேரடியாக ஹிரோஷிமோ - நாகசாகி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை காட்டவில்லை. ஆனால் ஸ்கார்ஸெசி தனது படத்தின் ஆரம்பத்தில் இருந்து தொடக்கம் வரை, நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் செவ்விந்தியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை திரையில் காட்டியிருந்தார். இவையெல்லாம் இந்தப் படத்துக்கு ஒரு விருது கூட வழங்கப்படாததற்கு யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படும் காரணங்களே. இதற்கான உண்மை காரணம் என்னவென்பது ஆஸ்கர் விருதுக் குழுவுக்கே வெளிச்சம்.
ஹாலிவுட் துறையின் மிகப்பெரிய கவுரவமாகக் கருதப்பட்டாலும் ஒரு இயக்குநர் அல்லது ஒரு திரைப்படத்தின் கிளாசிக் தன்மையை ஆஸ்கர் விருதுகள் தீர்மானிப்பதில்லை. உலக சினிமாவின் மிகச்சிறந்தவையாக கருதப்படும் ஏராளமான படங்கள் இதுவரை ஒரு ஆஸ்கர் விருது கூட வாங்காமல் போன வரலாறு உண்டு. ஆஸ்கர் மேடையில் புறக்கணிக்கப்படுவது ஸ்கார்செஸிக்கு இது முதல்முறையல்ல. வரும் ஆண்டுகளில் ஆஸ்கர் விருதுக் குழுவினர் மாறலாம், வெவ்வேறு படங்கள் ஆஸ்கர் மேடையை அலங்கரிக்கலாம். ஆனால் அப்போதும் மிகச்சிறந்த படைப்புகளை தந்து நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பார் இந்த 81 வயது மார்ட்டின் தாத்தா!