

நடிகை தீபிகா படுகோன்
இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார், தீபிகா படுகோன். அவர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க இருந்தார். இதில் நடிப்பதற்காக தீபிகாவிடம் ஒரு வருடத்துக்கும் மேலாக இயக்குநர் பேசி வந்த நிலையில், இப்படத்தில் இருந்து திடீரென தீபிகா விலகினார்.
தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவேன் என்று அவர் நிபந்தனை விதித்ததாகவும் அதை ஏற்காததால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாயின. அதுமட்டுமின்றி படத்தின் கதையை அவர் வெளியே கசிய விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் அவர் விலகியது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளரும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரருமான பிரணய் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தீபிகா படுகோனை நடிக்க வைக்க இயக்குநர் மிகவும் விரும்பினார். அதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், படத்தின் லாபத்தில் 10 சதவீத பங்கு வேண்டும் என்று தீபிகாகேட்டார்.
அதன் பிறகு சில விஷயங்கள் எங்கள் கட்டுப்பாட்டைத் தாண்டிச் சென்றன. ஒருவர் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அதை வழங்குவதற்குத் தயாராக இருந்தால் கொடுக்கலாம். ஆனால் படத்தின் பட்ஜெட்டும் பொருளாதாரக் கணக்கும் எங்களுக்கு ஒத்துவரவில்லை. அதனால் வேறு நடிகைகளைப் பார்க்கத் தொடங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.
வேறு நடிகையைத் தேடத் தொடங்கிய பிறகு, படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான சில தகவல்கள் வெளியே கசிந்ததாகவும் பிரணய் குற்றம்சாட்டியுள்ளார். தீபிகா படுகோனுக்குப் பதிலாக தற்போது த்ரிப்தி டிம்ரி இப்படத்தில் நடிக்கிறார். 2027-ம் ஆண்டு மார்ச் 5-ல் இப்படம் வெளியாக இருக்கிறது.