

கொச்சி: ‘தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ட்ரெய்லரில், கடத்தப்பட்ட பெண் ஒருவர் தனக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்படும் மாட்டிறைச்சி உணவை எட்டி உதைத்து, "உயிரே போனாலும் பீஃப் சாப்பிட மாட்டேன்" என்று ஆக்ரோஷமாகப் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் மாட்டிறைச்சி அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக இருக்கும் நிலையில், இந்தக் காட்சி எதார்த்தத்திற்குப் புறம்பாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கேரளாவைச் சேர்ந்த பலரும் பீஃப் சாப்பிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், "அந்தப் பெண் பீஃப் சாப்பிட மறுத்ததற்கு ஒரே காரணம், அதனுடன் பரோட்டா வழங்கப்படாததுதான்" என்று கேரளாவின் புகழ்பெற்ற ‘பீஃப்-பரோட்டா’ காம்போவை வைத்து மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
மலையாள திரையுலகில் 'கோதா', 'பிரேமம்' போன்ற படங்களில் பீஃப் உணவை உண்ணும் காட்சிகள் எக்ஸ், இன்ஸ்டா போன்ற தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ‘தி கேரளா ஸ்டோரி 2’ ட்ரெய்லரில் வரும் காட்சியையே ஏஐ மூலம் எடிட் செய்து நையாண்டியாக மாற்றப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அரசியல் ரீதியாகவும் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த ட்ரெய்லரை "கேரளாவிற்கு எதிரான விஷமப் பிரச்சாரம்" என்று சாடியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் மற்றும் சசி தரூர் ஆகியோரும், வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் நோக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.