

நடிகை தமன்னா, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு ஆடியிருந்தார். இப்பாடல் வரவேற்பைப் பெற்ற நிலையில் பாலிவுட் நடிகர் அன்னு கபூர், அப்பாடல் பற்றி பேசும்போது தமன்னாவின் தோற்றத்தை வர்ணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தமன்னாவை உருவக்கேலி செய்வதாகப் பலரும் விமர்சித்தனர்.
இச்சம்பவம் குறித்து தமன்னாவிடம் இப்போது கேட்டபோது, “ஒரு திரைக்கலைஞராக, நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலை கவனிப்பதுதான். அப்படி கவனிக்கும் போது, எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
மேலும், ஒரு பெண்ணாக, விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினால், முன்னேறிச் செல்ல முடியாது.
அதனால் இதுபோன்ற விஷயங்களை கவனிப்பதில்லை. என் நடிப்புத் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் என் வேலையை சேவையாகச் செய்ய விரும்புகிறேன். அதைத்தான் செய்துகொண்டும் இருக்கிறேன். அந்த நேர்மையின் காரணமாகவே என் நடிப்பு மக்களைச் சென்றடைகிறது” என்றார்.