

மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள 'கிங்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, அதன் வணிக உரிமைகள் மூலமாக ரூ.665 கோடி வரை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
வரும் டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் உரிமங்களை வாங்குவதற்கு உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் கடும் போட்டி நிலவியது. ஷாருக் கானின் பிறந்தநாளான நவம்பர் 2 அன்று, இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு விளம்பரப் பணிகள் தொடங்கப்பட்டன.
இப்படத்துக்கு திரையரங்கு விநியோக உரிமைகள் மூலமே மிகப்பெரிய வருவாய் கிடைத்துள்ளது. வெளிநாட்டு திரையரங்கு உரிமைகளை ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் ரூ.175 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.100 கோடியைத் தாண்டியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்திய திரையரங்கு விநியோக உரிமைகளைப் பென் மருதர் நிறுவனம் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ரூ.150 கோடிக்குக் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமம் ரூ.25 கோடிக்கும், இசை உரிமம் ரூ.65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளன. எனினும், நெட்ஃப்ளிக்ஸ் ஒப்பந்தத்தில் திரையரங்க வசூலைப் பொறுத்துத் தொகை மாறும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம், தயாரிப்பு அளவில் பிரம்மாண்டமாக வளர்ந்து தற்போது ரூ.400 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இயக்குநர் சித்தார்த் ஆனந்தின் சம்பளம் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், ஷாருக் கானின் சம்பளம் சேர்க்கப்படவில்லை.
ஷாருக் கானின் சம்பளம் மற்றும் ரூ.40 கோடி விளம்பர செலவுகளையும் சேர்த்தால், படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.500 கோடியைத் தொடும் என தெரிகிறது.
2023-ல் வெளியான 'பதான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஷாருக் கான் - சித்தார்த் ஆனந்த் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தில் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் முதன்முறையாகத் தனது தந்தையுடன் நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோன், ராணி முகர்ஜி மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.