“வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” - சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி
‘தெய்வத்திருமகள்’,‘சைவம்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராயாக நடித்துப் புகழ்பெற்றார்.
இவர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘துரந்தர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம், கதாநாயகியாக சாரா அர்ஜுனுக்கு முதல் படம். மூன்றரை மணி நேரம் ஓடும் ‘துரந்தர்’படத்தில் மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை ரு.1,200 கோடிக்கு மேல் வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்காக சாரா அர்ஜுன் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட நேரம் சொல்லும் கதைகளைப் பார்க்கும் பொறுமை, பார்வையாளர்களுக்கு இல்லை என்று கூறப்படுவது தவறு என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. ‘துரந்தர்’ வெற்றி முற்றிலும் பார்வையாளர்களால்தான்.
அதற்காக நன்றி. நாயகியாக என்வாழ்க்கையை இப்போதுதான் தொடங்குகிறேன். இவ்வளவு விரைவில் ஊக்கம் பெறுவது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம். இது என்னை பலப்படுத்துகிறது. இப்படத்தில் நானும் ஓர் அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
