

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஹரிச்சந்திரா என்ற ஹாரி பாக்ஸர் என்பவர் ரூ.10 கோடி கேட்டு சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.
ரன்வீர் சிங்கின் மானேஜரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாய்ஸ் மெசேஜை சரிபார்ப்பதற்காகப் பஞ்சாப் மற்றும் ஹரியாணா போலீஸாருக்கு அனுப்பி இருந்தனர். அது ஹாரி பாக்ஸர் குரல்தான் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் மும்பை போலீஸார், ஹாரி பாக்ஸருக்கு எதிராக, லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே தனது கும்பல் மூலம் பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கியால் சுட்டது, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்டது, இயக்குநர் ரோஷித் ஷெட்டி வீட்டில் துப்பாக்கியால் சுட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஈடுபட்டுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.