‘சொல்வது அவர்கள் வேலை’ - ‘ராமாயணா’ குறித்த கேலிக்கு ரன்பீர் கபூர் பதில்

‘சொல்வது அவர்கள் வேலை’ -  ‘ராமாயணா’ குறித்த கேலிக்கு ரன்பீர் கபூர் பதில்
Updated on: 
1 min read

‘மக்கள் ஏதாவது சொல்வார்கள். சொல்வது அவர்கள் கடமை’ என்ற பழைய பாடல் வரிகள் நாம் பின்பற்றுவதற்கு நல்ல தத்துவம் என தான் கருதுவதாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். ‘ராமாயணா’ படப்பாடல்கள் இணையத்தில் கேலிக்கு உள்ளாக்கப்படுவது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்துள்ள 'ராமாயணா’ படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மங்கள் ரங்' என்ற பாடல் அக்டோபர் 25 அன்று வெளியானது. 

சுஃபி மற்றும் கவாலி பாணியிலான இசை அமைக்கப்பட்ட இந்தப் பாடல் இணையத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனிடையே சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ரன்பீர் கபூர் தான் நடித்திருக்கும் ‘ராமாயணா’ படம், பாடல் மீதான கேலிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார்.

அவர், “இணையத்தில் வம்பு செய்வதில் உள்ள அழகும் இன்றைய காலக்கட்டத்துக்கு பொருத்தமான ஒன்றுதான் என நான் கருதுகிறேன். இது ‘மக்கள் ஏதாவது சொல்வார்கள்; சொல்வது அவர்கள் வேலை’ என்ற பழைய பாடல் வரி ஒன்றை எனக்கு நியாபகப்படுத்துகிறது. இது பின்பற்றுவதற்கு சிறந்த ஒரு தத்துவம் என நான் கருதுகிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி நாம் கவலைப்படக் கூடாது.

மனிதர்கள்தான் முக்கியமானவர்கள். நம்மை, நமது வேலை, எண்ணங்கள், நோக்கங்கள் மீது அக்கறை காட்டும் மனிதர்கள் தான் முக்கியமானவர்கள். அதுதான் முக்கியமானது என நான் எண்ணுகிறேன்” இவ்வாறு ரன்பீர் கூறினார்.

முன்னதாக இணையக் கேலிக்குள்ளாகும் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்திருந்தார். அவர், "நாங்கள் ஒரு பாடலை உருவாக்கும் போது பல்வேறு கட்ட ஆய்வுகள், வடிகட்டுதல்கள் மற்றும் மாற்றங்களை மேற்கொள்கிறோம். அதையெல்லாம் தாண்டிப் பாடல் வெளிவந்த பிறகு எழும் விமர்சனங்களைக் கவனிப்பதற்கு எங்களிடம் ஆற்றல் இருப்பதில்லை. 

பலமுறை சோதித்துப் பார்த்த பின்னரே பாடலை வெளியிடுகிறோம். என் மகன் கூட இணையத்தில் வெளியாகும் விமர்சனங்களைப் பற்றி என்னிடம் கூறுவான். ஆனால் நான் என் பணியை மிகவும் உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் செய்துள்ளேன்; மக்கள் இந்தப் பாடலைக் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சொல்வது அவர்கள் வேலை’ -  ‘ராமாயணா’ குறித்த கேலிக்கு ரன்பீர் கபூர் பதில்
‘ஓம்’ ரிலீஸை தள்ளி வைத்த தனுஷுக்கு நன்றி சொன்ன சூர்யா

X