

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கும் 2-வது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ராம நவமியை முன்னிட்டு இதன் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, ராமாயணம் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராமாயணம் நம் அனைவருக்கும் சொந்தமான கதை. அதை அதன் உண்மையான ஆன்மாவோடும், பிரம்மாண்டத்தோடும், நேர்மையுடனும் கொடுக்க வேண்டும் என்ற ஆழ்ந்த பொறுப்புணர்வு, பக்தி மற்றும் அக்கறையுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துள்ளோம்.
இத்தனை ஆண்டுகால எங்களது உழைப்பை, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் பிரம்மாண்டமான வெளியீட்டின் மூலம் காட்சிப்படுத்த இருக்கிறோம். அதன்படி ஏப். 2-ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்று ராமரின் முதல் தோற்றத்தைப் பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.