

நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படத்தை இரண்டாவது முறையாக பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, இப்படம் சினிமாவின் தாஜ்மஹால் என்று பாராட்டியுள்ளார்.
ஒரு நாத்திகரான தான் ராம பக்தராக இல்லாமல், சினிமா ஆர்வலராக இந்தப் படத்தை விமர்சிப்பதாக கூறி நீண்ட பதிவொன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “ராமாயணா படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன். நான் நாத்திகன் என்பதால், இந்த விமர்சனம், ராம பக்தனின் பார்வையில் இல்லாமல், சினிமா ஆர்வலர் பார்வையில் எழுதப்படுகிறது.
மற்ற விமர்சனங்கள் எல்லாம் பெயருக்காக படத்தின் பிரம்மாண்டத்தை குறிப்பிட்டு விட்டு படத்தில் ஆன்மா இல்லை. இசை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தவறவிடும் விஷயம் என்னவென்றால், படத்தின் பிரம்மாண்டத்தில் தான் அதன் ஆன்மாவும், இதனை உருவாக்கிய அசாத்திய திறமைசாலிகளின் பெரிய லட்சியத்தில்தான் படத்தின் உணர்வும் உள்ளது.
இந்திய சினிமாவில் யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை நிதேஷ் திவாரியும், நமித் மல்ஹோத்ராவும் சாதித்து காட்டியுள்ளனர். எல்லோராலும் அறியப்பட்ட இதிகாசம் ஒன்றின் சாராம்சத்தை எடுத்து திரையில் வடித்து, சிறந்த ஹாலிவுட் படங்களை எல்லாம் மேடை நாடகம் என்கிற அளவுக்கு என்னை உணர வைத்துள்ளார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் தொடக்க காட்சி பற்றி விவரித்துள்ள ராம் கோபால் வர்மா, ஜடாயு - ராவணன் மோதல், படத்தின் VFX காட்சிகள் அனைத்தையும் சிலாகித்து, இதன் மூலம், பாலிவுட் பிரபலங்களை அவர்களின் சோம்பேறித்தனமான தூக்கத்தில் எழுப்பி, மனஉறுதி இருந்தால் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை முகத்தில் அடித்துச் சொல்லி இருக்கிறார் நமித் மல்ஹோத்ரா என்று தெரிவிதுள்ளார்.
யஷ்ஷின் நடிப்பை பற்றி குறிப்பிட்டுள்ள ராம் கோபால், ‘யஷ்ஷின் ராவணன் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிப்பு மட்டும் இல்லை. பல தசாப்தங்களுக்கான நடிப்பு அது. சிறுவனாக சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்படி உடலில் மின்சாரம் பாய்ச்சும் உணர்வை ஏற்படுத்தும் நடிப்பை பார்த்த நினைவு இல்லை என்பதால் இதைச் சொல்கிறேன்.
அவர் வெறும் வில்லனாக நடிக்கவில்லை. தவம், அறிவுத்திறன், அடிபணிய மறுத்தல் ஆகியவை மூலமாக அதிகாரம் மிக்க ஒருவராகவே அவர் நடித்துள்ளார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் என அனைவரும் அவரைப் பற்றி சொல்வது சரிதான். ஆனால் அவர்கள் கவனிக்கத் தவறிய விஷயம், ராவணனை ராமனின் ஈர்ப்பு மையம்போல காட்டி இருக்கும் பரந்த கண்ணோட்டத்தைத்தான். சுருக்கமாக சொன்னால், ராவணன் இல்லாமல் ராமன் இல்லை’ என புகழ்ந்துள்ளார்.
படத்தின் இசையை பற்றி குறிப்பிடும்போது, ‘ஹான் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹமானிடம் நான் ரசித்த விஷயம், பின்னணி இசை காட்சிகளுடன் போட்டி போடாமல், அதனுடன் இணைந்து பயணித்துள்ளது. அது புதிதாக பக்தியை உருவாக்க முயற்சிக்கவில்லை. மாறாக ஏற்கெனவே இருக்கும் பெரும் திரளான ஓர் உணர்வை அதிகரிக்க முயற்சி செய்துள்ளது. இவ்வளவு பெரிய படத்தில் இசையில் காட்டப்படும் கட்டுப்பாடு என்பது மெத்தனமான விஷயம் இல்லை. மாறாக, அது ஒழுக்கம் மற்றும் வியூகம் ஆகியவற்றின் ஆற்றல் மிக்க கலவையாகும்.
ஒவ்வொரு சர்வதேச தயாரிப்புகளை விட, தலைநிமிர்ந்து பெருமிதத்துடன் நிற்கக் கூடிய படம் இது. காரணம் இது ‘லார்டு ஆஃப் த ரிங்ஸ்’, ‘அவதார்’ போன்ற படங்களின் பாணிகளைக் கடன் வாங்கவில்லை. அதற்கு பதிலாக, தோண்டி எடுக்கப்பட காத்திருக்கும் வளமான கதைகளைக் கொண்ட இந்திய மண்ணிலிருந்து உத்வேகம் பெற்றிருக்கிறது.
விமர்சனங்கள் 2,3,5 என என்ன மதிப்பெண் வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம். இந்தப் படத்தை விமர்சிப்பது இந்தியாவுக்கும், அதன் சினிமாவுக்கும் அவமானம் என நான் கருதுகிறேன். படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களை வைப்பவர்கள் எல்லோரும், ஓர் உயரமான மலையப் பார்த்து அதன் பாதை செங்குத்தாகவும் சீரற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், சினிமா என்னும் இந்த மலையை தாஜ்மஹால் போல கட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கலைஞர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் சின்னதாக தெரிவதுதான் அதற்கு காரணம்” என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.