

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ராவணனின் சகோதரி சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார்.
2 பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதில் சூர்ப்பணகையாக நடித்தது பற்றி ரகுல் ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “சூர்ப்பணகை இலங்கையின் அழகான பெண். அவளது ஆளுமை பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு நடிகை, அந்தப் பரிமாணங்களில் நடிப்பது சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனக்குத் தெரியாத பல விஷயங்கள் சூர்ப்பணகையின் வாழ்க்கையில் இருந்தன. திரைக்கதையைப் படித்தபோது, லட்சுமணனால் அவளது மூக்கு அறுக்கப்பட்ட சம்பவத்துக்கு முன்னும் பின்னும் அவளது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
அவள் ராமனை எப்படிச் சந்திக்கிறாள் என்பது போன்ற பல விஷயங்கள் எனக்குத் தெரியாதது. திரைக்கதையைப் படித்தபோது புதியதாகத் தெரிந்தன; அதனால்தான் இக்கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. ‘ராமாயணம்’ எனது கதாபாத்திரத்தை விரிவான கண்ணோட்டத்தில் அணுகுவதால், வழக்கமான வில்லி பிம்பத்தைத் தாண்டி, இந்த கதாபாத்திரத்தின் மற்றொரு பக்கத்தையும் இப்படம் வெளிப்படுத்தும்” என்றார்.